Published : 13 Feb 2018 09:39 AM
Last Updated : 13 Feb 2018 09:39 AM

இப்படிக்கு இவர்கள்: ஆளும்கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்!

பிப்ரவரி 12 அன்று வெளியான ‘திரிபுராவில் 22 வேட்பாளர் மீது கிரிமினல் வழக்கு’ என்ற செய்தியை வாசித்தேன். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், தேர்தலில் போட்டியிடும் 297 வேட்பாளர்களில் 17 பேர் மீது கொலை, வன்முறையில் ஈடுபட்டது எனப் பல வழக்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதில், ஒன்பது பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்கிற முறையில் பாஜக முதலிடமும், மூன்று பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்கிற முறையில் காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும், இரண்டு பேர் திரிபுரா மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற மூவர் சுயேச்சைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாகத் திரிபுரா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் இப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை நாம் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்க வேண்டும். ஆளும்கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இச்செய்தியின் மூலம் நாட்டுமக்கள் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ‘தி இந்து’வுக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

 

நிறைவேறுமா பாரதியின் கனவு?

பிப்.12 அன்று வெளியான ‘சாதிப் பஞ்சாயத்துகளின் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!’ தலையங்கம் படித்தேன். காதல் திருமணங்களைத் தடைசெய்யவோ அல்லது செல்லாததாக்கவோ துடிக்கின்றன ‘கங்காரு நீதிமன்றங்கள்’ எனப்படும் சாதிப் பஞ்சாயத்து அமைப்புகள். இந்த அமைப்பை உச்ச நீதிமன்றம் 2011-ல் கண்டித்த பின்பும், இன்னும் அதன் அராஜகங்கள் தொடர்வது, பெண் கொலை அல்லது ஆண் கொலை அல்லது இருவரும் கொலை என்ற அவலம் தொடர வழிவகுக்கிறது. கலப்புத் திருமணங்கள் சமுதாயத்தில் பலமாக வேரூன்ற கங்காரு நீதிமன்றங்கள் அழிக்கப்பட வேண்டும்.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

 

ஜீவனுள்ள இசை

படுக மொழிப் பாடல்கள் குறித்த ஆர்.டி.சிவசங்கரின் சிறப்புக் கட்டுரை நன்று. ‘படுக மொழி இசைப் பாடல்கள்’ அவ்வின மக்களின் நடைமுறை வாழ் வியலின் சுகதுக்க உணர்வுகளை வெளிப்படுத்தும் நாட்டுப்புற வகை இசைப் பாடல்கள் எனலாம். 1980-ல் நீலகிரி நண்பர், கவிஞர் காரிதாசன் ‘அக்கினி வளையங் கள்’ என்ற திரைப்படத்தை நீலகிரி மலைப் பகுதியில் உருவாக்க எண்ணினார்.

அந்தப் படத்தில் படுகர் மற்றும் தோடர் இனப் பாரம்பரிய இசையை அடிப்படை மெட்டுகளாக்கி தமிழ்த் திரைப்பாடல்களை உருவாக்கினால் ரசிகர் களிடம் நல்ல வரவேற்பு இருக்குமெனப் பெரிதும் விரும்பினார். அந்தப் படத்தில் பாட்டெழுத எனக்கும் வாய்ப்பு தந்தார். ஆனால், துவக்க நிலையிலேயே பண மூலதனச் சிக்கலினால் படத்தயாரிப்பு நின்றுபோனது. இன்று பலரும் உருவாக்கும் குறுந்தகடுகளும், ஆல்பங்களும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருவது ஜீவனுள்ள அந்த இசைக்கே உரிய சிறப்பாகும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

 

சிறை வாழ்வைச் சீர்செய்யும் முயற்சி

திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலை சாலையில் தொடங்கப்பட்டுள்ள ‘ஃபுட் ஃபார் ஃப்ரீடம்’, சிறைக் கைதிகளின் மனித சக்தியை ஆக்கபூர்வமான முறையில் உபயோகப்படுத்தும் மிகச் சிறந்த திட்டம் இது. அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் முறையிலும், நிர்க்கதியாக நிற்கும் அவர்கள் குடும்பத்துக்கு சம்பாதிக்கும் பணம் உபயோகப்படும் விதத்திலும் இத்திட்டம் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.

அனைத்துக்கும் மேலாக, இத்திட்டத்தின் மூலம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் பிடிப்பும் ஏற்பட்டு, சிறையிலிருந்து வெளிவரும்போது சமையல் கலைஞனாக புது வாழ்வு தொடங்கவும் இத்திட்டம் வழிகோலும்.

- கே.ராமநாதன், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x