Published : 20 Jul 2017 10:55 AM
Last Updated : 20 Jul 2017 10:55 AM

இப்படிக்கு இவர்கள்: நிலவுரிமையைக் காக்க சட்டம்

நிலவுரிமையைக் காக்க சட்டம்

மேதா பட்கர் எழுதிய ‘அணையில் மூழ்கிய வாழ்க்கை' (ஜூலை 18) கட்டுரையை வாசித்தேன். பெரும் திட்டங்களுக்கு இடம் வழங்குபவர்கள், இடமற்றவர்களாகவும், சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் ஆக்கப்படும் கொடுமை தொடர்கதையாகிவிட்டது. பெரும் போராட்டங்கள் செய்தும், மக்கள் மன்றங்கள் கண்டுகொள்ளாத சூழலில் இறுதியாக நீதிமன்றத்தை நாடுகிறார்கள். ஆனால், நீதி என்னவோ நிம்மதி தருவதாக இல்லை, வழக்கு இழுத்துக்கொண்டே போய் கையிருப்பையும் இழக்கும் நிலையே உள்ளது. இத்தகைய அவல நிலையிலிருந்து பாதுகாத்திட, நிலத்தை வழங்குபவர்கள் நிலத்தை விட்டு வெறியேறும் முன் அவர்களுக்கான மாற்று இடத்தை கொடுப்பதை உறுதிபடுத்திய பின்பே திட்டத்திற்கான இடத்தைக் கையகப்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும். நிலம் கையப்படுத்தியபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரும் மனுக்களை முன்னுதாரணமாகக் கொண்டு மேற்கண்ட சட்டத்தை வடிவமைக்க நீதிமன்றம் தாமாக முன்வர வேண்டும். அதுவே நிலத்தை இழந்து வாழும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

-க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம், திருவில்லிபுத்தூர்.

பாசத்தலைவனும் தொண்டரும்

ஜூலை 15 அன்று வெளியான 'திரையாண்ட கலைஞர்' கட்டுரையின் இறுதியில் கலைஞரின் அணுக்கத் தொண்டர் நித்யானந்தம், கலைஞர் உடல் நலம் பெற அவர் நெற்றியில் இட்ட திருநீறு துடைக்கப்பட்டு கலைஞர் கரத்தில் இருந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து. அதன் மூலம் கலைஞர் நினைவு குறைந்த நிலையிலும், தான் பெரியார் வழிவந்த மானமிகு தொண்டன் என்பதை மறக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில் ஆத்திகம், நாத்திகம் வேறுபாடு பார்க்காமல் தனது தலைவர் விரைவாகப் பூரண நலம் பெற வேண்டும் என்ற அன்பினால் அவரது நெற்றியில் திருநீறு இட்ட தொண்டர் நித்யானந்தத்தின் பாசத்திற்கும் ஈடு சொல்ல வார்த்தைகளே இல்லை. இது, ‘பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான். அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்' என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை நினைவூட்டுகின்றன.

-ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.

குறைதீர்க்கட்டும் கூட்டம்

வெ.ஜீவகுமார் எழுதிய, ‘விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களா? குறை கேட்புக் கூட்டங்களா?’ (ஜூலை 18) கட்டுரை வாசித்தேன். குறை தீர்க்கும் கூட்டங்கள் முழுப் பயன் அளிக்ககாததற்கு அதிகாரிகளின் மெத்தனமும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் சுயநலமுமே காரணம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகளைப் பேச வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. சிலர் சங்கப் போர்வையில் தரகர் களாகச் செயல்படுவது வருத்தத்திற்குரியது. கூட்டம் வெறும் பேச்சு மேடையாக இல்லாமல் காரிய மேடையாக மாறுவதற்கு விவசாயிகளின் பங்கும் இருக்கிறது. ஆட்சித் தலைவரும் துறைத் தலைவர்களும் கட்டாயமாகப் பங்கேற்க அரசு உத்தரவிட வேண்டும். அங்கேயே குறைகள் தீர்க்கப்பட்டால்தான் இது பயனுள்ளதாக அமையும்.

-ரங்கராஜன், பொது மேலாளர்(ஓய்வு), பொதுத் துறை வங்கி.

நியாயத்தின் பரிசு

ஜூலை18-ல் வெளியான, ‘17 ஆண்டுகளில் 31 பணியிட மாற்றம்: டிஐஜி ரூபாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு’ என்ற செய்தியை வாசித்தேன். சிறையில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேட்டை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த அவரைப் பாராட்டாமல், பந்தாடுவது வேதனைக்குரியது. தமிழகத்தில் சகாயம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் இதேபோலத்தான் பந்தாடப்பட்டார்கள். நேர்மையாளர்களைக் கண்டு தவறு செய்பவர்கள் பயப்படும் சூழல் மாறி, தவறிழைப்பவர் களுக்கு நேர்மையாளர்கள் பயந்து நடக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியிருப்பது, நாட்டுக்கே கேடு.

-நஸ்ரின் ரஃபி, மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x