Published : 15 Mar 2019 09:36 AM
Last Updated : 15 Mar 2019 09:36 AM

சுற்றுச்சூழல் மாசு: தேர்தல் ஆணையத்தின் அக்கறை வரவேற்கத்தக்கது

மக்களவைத் தேர்தலுக்கு நாடு தயாராகிவரும் நிலையில், இந்த முறை தேர்தல் களம் குறைந்தபட்சம் சூற்றுச்சூழல் மாசற்ற களமாக இருக்கும் வகையில், ஆக்கபூர்வமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையம். தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது ஒரே முறை மட்டும் பயனாகும் பிளாஸ்டிக் பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றால் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது ஒலி மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக அன்றாடம் கேள்விப்படும் எதிர்மறைச் செய்திகளுக்கு மத்தியில் மிகுந்த ஆறுதலளிக்கும் நடவடிக்கை இது!

தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக முடிவெடுக்குமாறு, மார்ச் 4-ல் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது பசுமைத் தீர்ப்பாயம். இதுபோன்ற பொருட்களின் பயன்பாட்டைத் தடைசெய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு, பசுமைத் தீர்ப்பாயத்தில் சஞ்சய் உபாத்யாய் எனும் வழக்கறிஞர் கோரியிருந்தார். இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகமும் முன்னெடுத்திருந்தது. அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில், தேர்தலின்போது ஒரே முறை பயனாகும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும், இதேபோன்ற உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்திருந்தது. 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றமும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்கின்றன என்று இவ்வழக்கின் மனுதாரர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் மீதான அக்கறையில் இப்படிப் பல்வேறு தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள் கவனத்துக்குரியவை.  ஒரு முறை பயனாகும் பிளாஸ்டிக் பொருட்களை 2022-க்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கம் நிறைவேற நாட்டில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

பொதுவாக, தேர்தல் பிரச்சாரக் கூட்டம் முடிந்த பின்னர் அந்த இடமே குப்பைக் கூளமாகக் காட்சியளிப்பதைப் பார்க்கிறோம். அதில் பிளாஸ்டிக் தட்டுகள், பாலித்தீன் பைகள் போன்றவை அதிக அளவில் இருக்கும். இன்றைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையைத் தமிழக மக்கள் ஆர்வத்துடன் பின்பற்றிவரும் நிலையில், அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்ற முன்வர வேண்டும். நாடு முழுவதும் இதுபோன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் அக்கறை இல்லாமல் அரசியல் கட்சிகள் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் வகையில், கடும் உத்தரவுகளை வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x