Published : 04 Feb 2019 08:46 AM
Last Updated : 04 Feb 2019 08:46 AM

இடைக்கால பட்ஜெட் : வாக்கு அறுவடைக்கான சலுகைகள்!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் ‘இடைக்கால பட்ஜெட்’ தாக்கல் செய்வது இதற்கு முன்னரும் நடந்திருக்கிறது என்றாலும் இந்த அளவுக்கு அப்பட்டமாக, அரசியல் ஆதாயத்துக்காக முக்கிய அறிவிப்புகளையும் சலுகைகளையும் வெளியிட்டிருப்பதைப்போல இதுவரை நடந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி பட்ஜெட் அளிக்கக் கூடாது என்று சட்டத்தில் இல்லைதான். ‘இடைக்கால பட்ஜெட்’ என்ற வார்த்தையே குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்றாலும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருந்துவிட்டு பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகும் அரசியல் கட்சி, இப்படி தார்மிக நெறிகளை மீறலாமா என்ற கேள்வி எழுகிறது.

 அரசியலில், வாக்கு அறுவடைக்காக எதையும் செய்யலாம் என்றாகிவிட்டது. இந்த உத்தி தேர்தலில் பலிக்குமா, மக்கள் ஆதரிப்பார்களா என்று பார்க்க வேண்டும். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் மத்திய அரசு மீது மிகவும் அதிருப்தியாக இருக்கும் பிரிவினர் யார் என்று அடையாளம் கண்டு, அவர்களுக்கு ரொக்க ஆதாயம் கிடைக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ‘இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இவ்வளவுதான் முடிந்தது, முழு பட்ஜெட்டில் மேலும் செய்வோம்’ என்று அமைச்சர் பியூஷ் கோயல் தூண்டில் போட்டிருக்கிறார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 என்று ஆண்டுக்கு மூன்று முறை வங்கிக் கணக்கில் போடும் திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு நேரடி பணப் பயன் கிடைக்கும் என்று தெரிகிறது. வருமான வரி நிலைக்கழிவு உயர்த்தியிருப்பது, வருமான வரி செலுத்தும்  3 கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பலன் தரும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரைக்கும் வரி இல்லை என்பது வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்று நடுத்தர வகுப்பைச் சேர்ந்த 3 கோடிப் பேருக்கு நிவாரணம் அளிக்கும்.

ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருக்கப்போகும் அரசு, இப்படிச் சலுகைகளை அளித்தால், அதைத் தவறு என்று எதிர்க்கட்சிகளால் கண்டிக்க முடியாது. அப்படிக் கண்டித்தால் தேர்தலில் மக்களின் ஆதரவை இழந்துவிடுவார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்தச் சலுகைகளை அறிவித்திருக்கிறது பாஜக அரசு. நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்தச் சலுகைகளால் பலன்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது.  மத்தியதர வர்க்கத்திடமும் மற்றவர்களிடமும் ரொக்கக் கையிருப்பை அதிகப்படுத்துவதால் நுகர்வும் முதலீடும் அதிகரிக்கும். அது உற்பத்தியை ஊக்குவிக்கும். அரசால் தர முடியாத வேலைவாய்ப்புகளை, தனியார் நிறுவனங்கள் தரும்.

அதேசமயம், அரசு அறிவித்துள்ள சலுகைகளால் அரசின் செலவுகள், வருவாயை விட அதிகமாகி, நிதிப் பற்றாக்குறை அதிகமாகும். இடைக்கால பட்ஜெட்டுக்குப் பிறகு அரசின் வரி வருவாய் ரூ.25.52 லட்சம் கோடியாக உயரும், 2018-19 திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட இது 13.5% அதிகம். புதிய அரசுக்கு  நிதி பற்றாக்குறை ஒரு தலைவலியாகவே இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x