Published : 23 Jan 2019 10:37 AM
Last Updated : 23 Jan 2019 10:37 AM

நீதிபதிகள் நியமனம்: ஓயாத சர்ச்சை!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் தேர்வுக் குழுவான ‘கொலீஜியம்’ குறித்த சர்ச்சைகள் ஓய்வதேயில்லை. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இந்த சர்ச்சைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாகக் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் நாள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுசெய்யப்பட்டது. ‘ஆலோசனைகள் நடந்திருந்தாலும் குளிர்காலத்தையொட்டிய விடுமுறை காரணமாக தேவைப்பட்ட வகையில் அவை பூர்த்தியாகவில்லை’ என்று நீதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி 5, 6 தேதிகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மூத்த நீதிபதிகளும் கூடி பெயர்களை மீண்டும் பரிசீலித்தனர். இடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து மதன் பி. லொக்கூர் ஓய்வுபெற்றதால், இந்த மறுபரிசீலனை அவசியப்பட்டதாகக் காரணம் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் அடங்கியது ‘கொலீஜியம்’. அதன் முடிவுகள் சந்தேகத்துக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி

ஆர்.எம்.லோதா சரியாகவே கூறியிருக்கிறார். சில ஆலோசனைகள் முற்றுப்பெறவில்லை என்று வைத்துக்கொண்டாலும்கூட, ஒரேயொரு நீதிபதி ஓய்வுபெற்றுவிட்டார் என்பதற்காகத் தேர்வுக் குழு எடுத்த முடிவைத் திரும்பப் பெற்றுவிட வேண்டுமா?

இந்த முடிவைக் கேட்டு நீதிமன்ற வட்டாரங்கள் அமைதியிழந்து காணப்படுவதில் வியப்பேதும் இல்லை. கடந்த நவம்பர் மாதம்கூட, தேர்வுசெய்யப்படாமல் விடுபட்ட நீதிபதி மகேஸ்வரி எல்லா வகையிலும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பொருத்தமானவர் என்பது மட்டுமல்ல, அதற்கு உரிய தகுதிகளும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைவிட பணிமூப்பு குறைந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கிறார். நீதிபதி கன்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை - அவருக்குப் போதிய பணிமூப்பு இல்லை என்பதைத் தவிர.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட பணிமூப்பு மட்டும் தகுதியாகக் கருதப்படக் கூடாது என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. கன்னாவைவிட பணிமூப்புள்ள மூன்று நீதிபதிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் வேறு மாநிலங்களில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகவே இருக்கின்றனர். தேர்வுக் குழுவின் தேர்வும், தன்மையும் எப்படிப்பட்டவை என்ற கேள்விகளை இது மீண்டும் எழுப்பியிருக்கிறது.

தேர்வுக் குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் பொதுவெளியில் வெளியிடுவதால் ஓரளவுக்கு வெளிப்படைத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் மர்மமாகவே இருக்கின்றன என்ற கருத்து எளிதில் மறைந்துவிடாது. இப்போது எழுந்துள்ள இந்த சர்ச்சை உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்புக்கு நன்மையைச் செய்யவில்லை என்பது மட்டும் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x