Published : 24 Dec 2018 09:37 AM
Last Updated : 24 Dec 2018 09:37 AM

பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு!

பாரீஸ் பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் தெளிவற்ற சூழல் நிலவிவந்த நிலையில், சமீபத்தில் போலந்தின் கடோவிஸ் நகரில் நடந்த பருவநிலை மாநாட்டில் விதிகளை உருவாக்குவதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான செயல்திட்டங்களை உருவாக்குவதில் இருந்த சந்தேகங்களை ஒதுக்கிவிட்டுச் செயலில் இறங்குமாறு மக்கள் கொடுத்த அழுத்தம் பலன் தந்திருக்கிறது.

சமீபத்தில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு ஏற்க மறுத்ததும், பருவநிலை மாறுதலை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதியை வழங்கும் விஷயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பின்வாங்கியதும் ஏமாற்றம் தந்தன. இந்நிலையில், பருவநிலை மாறுதல்கள் தொடர்பாக அரசுகளுக்கு இடையிலான குழு கூடி சிறப்பு அறிக்கையை அளித்துள்ளது. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் கார்பன் வெளியீடுகள் குறித்தும் அது எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தொழில்துறைப் புரட்சி தொடங்குவதற்கு முன்னதாக உலகில் நிலவிய தட்பவெப்ப நிலையை மீட்டெடுக்க, 2010-ல் வெளியான கார்பனில் 45% அளவை 2030-க்குள் குறைத்தாக வேண்டும். இந்தியா உள்ளிட்ட எல்லா பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இது மிகப் பெரிய சவாலாகும்.

இந்தப் பின்னணியில், இந்தியா பல முனைகளிலும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். சூரிய ஒளியிலிருந்தும் காற்றின் விசையிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதைப் பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும். மின்உற்பத்திக்கு நிலக்கரியைச் சார்ந்திருப்பது படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். சர்வதேச அளவில் பசுமைத் தொழில் திட்டங்களுக்கு நிதியைத் திரட்ட வேண்டும்.

2020 முதல் பாரீஸ் ஒப்பந்தம் அமலாகத் தொடங்குவதால் ஏற்படப்போகும் சமூக விளைவுகள் குறித்து, கடோவிஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதிநிதிகள் நியாயமான கவலைகளை எழுப்பினர். உலக அளவில் இப்போது கார்பன் வெளியேற்றம் நபர்வாரியாக சராசரி 4.2 டன்களாக இருக்கிறது. இந்தியாவில் இது 1.2 டன்களாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் கார்பன் அதிகரிப்பு 2018-ல் 6.3% என்ற அளவை எட்டியது. எனினும், நாம் மிகவும் குறைவாகத்தான் கரிப்புகையை வெளியிடுகிறோம் என்றெல்லாம் கணக்குப் பார்க்கும் நேரம் இதுவல்ல.

பருவநிலை இப்படியே உயர்ந்தால் கடல் நீர்மட்டம் அதிகரித்துப் பல தீவு நாடுகள் நீரில் மூழ்கிவிடும். எந்த நாடும் பாதிப்பு அடையாமலிருக்க இந்த விதிகளையும் திட்டங்களையும் எல்லா நாடுகளும் ஒருசேர அமல்படுத்துவது அவசியம். கார்பனை வெளியேற்றும் புதிய தொழிற்சாலைகள், புதிய பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவது பலன் தரும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை சீனா அதிகரித்துவருகிறது. அமெரிக்காவின் பல மாநிலங்களும் அரசின் திட்டத்துக்காகக் காத்திராமல் தாங்களாகவே இதில் ஆர்வமுடன் இறங்கிவிட்டன. இந்தியா இதில் தீவிரம் காட்டினால் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதுடன், இந்திய நகரங்களைச் சூழ்ந்துவரும் காற்று மாசு உள்ளிட்டவற்றையும் படிப்படியாகக் குறைத்து ஒழித்துவிட முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x