Published : 13 Dec 2018 10:45 AM
Last Updated : 13 Dec 2018 10:45 AM

மீண்டெழும் கை!

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பாஜக மேற்கொண்ட பிரச்சாரத்துக்கு ஏற்ப அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துவந்த காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் எழுச்சி தந்திருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள். ராகுல் காந்தி கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற முதலாமாண்டு நாளில் வெளியான தேர்தல் முடிவுகள், புதிய தலைமையின் வல்லமையைப் பறைசாற்றுவதோடு, ‘இந்தியாவின் தவிர்க்க முடியாத அங்கம் காங்கிரஸ் என்ற பெருமையையும் மீட்டெடுத்திருக்கிறது. மிக முக்கியமான விஷயம், பாஜக தன்னுடைய கோட்டையாக மாற்றிவிட்ட இந்தி பிராந்தியங்களில் காங்கிரஸின் மூன்று வெற்றிகளும் அமைந்திருப்பது.

மத்திய பிரதேசமும், அதனிடமிருந்து பிரிந்த சத்தீஸ்கரும் 15 ஆண்டுகளாக பாஜக கையில் இருந்தன. மத்திய பிரதேசத்தில் இப்போதும்கூட பாஜக 41% வாக்குகளைப் பெற்றிருக்கிறது; காங்கிரஸ் 40.9% வாக்குகளையே பெற்றிருக்கிறது என்றாலும், பாஜகவைக் காட்டிலும் கூடுதலான தொகுதிகளை வென்றதால் அங்கு ஆட்சி அமைக்கிறது. மேலும், 2013 தேர்தலுடன் ஒப்பிட 3.8% வாக்குகளை பாஜக அங்கே இழந்திருக்கிறது. மாறாக, காங்கிரஸ் 4.6% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. சத்தீஸ்கரில் பாஜகவைவிட 10% வாக்குகளை அதிகம் பெற்றிருப்பதோடு, மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான தொகுதிகளிலும் வென்றிருக்கிறது காங்கிரஸ். ராஜஸ்தானில் இந்தத் தேர்தலில் பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸ் வெறும் 0.5% வாக்குகளை மட்டுமே அதிகம் வாங்கியிருக்கிறது என்றாலும், 2013 தேர்தலுடன் ஒப்பிட அதன் வாக்குவீதம் 6.2% உயர்ந்திருக்கிறது; பாஜகவுக்கு 6.4% சரிந்திருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்தமுள்ள 65 மக்களவைத் தொகுதிகளில் 62 தொகுதிகளை 2014 தேர்தலில் பாஜக வென்றது என்பதிலிருந்து இந்தச் சரிவு அதை எவ்வளவு பாதிக்கக்கூடியது என்பதை நுட்பமாக அறியலாம்.

தேர்தல் முடிவை வெகு கவனமாக ஆராய்ந்தால் 2019 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றிகள் போதுமானதாக இருக்காது. அதேசமயம், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்க இந்த முடிவுகள் போதுமானவை. தெலங்கானாவிலும், மிசோரத்திலும் காங்கிரஸுக்குக் கிடைத்த தோல்வியின் கசப்பை, இந்த மூன்று மாநில வெற்றிகள் போக்கிவிடும்.

தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தெலங்கானா தனி மாநிலமாக அமைவதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதோடு, புதிய மாநிலத்தை வளர்ச்சிப் பாதை நோக்கியும் செலுத்தியவர் என்ற வகையில் சந்திரசேகர ராவுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி எதிர்பார்த்தது, நியாயமானது. 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளைத் தந்த மாநிலம் ஒன்றுபட்ட ஆந்திரம். அந்தக் கணக்கை மனதில் வைத்து தெலுங்கு தேசத்துடன் இங்கு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது காங்கிரஸ். ஆனால், ஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்கத் தடையாக இருந்தவர் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ற பழைய வரலாற்றைத் தோண்டியெடுத்து, அதையே காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான பெரும் ஆயுதமாக மாற்றினார் சந்திரசேகர ராவ். விளைவாக, தனித்து நின்றால் வெல்லும் சாத்தியமிருந்த தொகுதிகளையும் இங்கே இழந்திருக்கிறது காங்கிரஸ்.

சிறிய மாநிலமான மிசோரத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசை இழந்திருப்பது, ஒட்டுமொத்த சூழலில் அதற்குப் பெரிய இழப்பு இல்லை என்றாலும், மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு அது கொடுத்திருக்கும் விலை இது. 2014 பேரிடிக்குப் பின் கட்சியை வெற்றி நோக்கி அழைத்துச்செல்வதில் பெரும் உழைப்பைக் கொடுத்துவரும் ராகுல் காந்தி, கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நிர்வாகம் சிறப்பாக நடப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். சமீப காலத்தில் ஆட்சியிலிருந்த எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் முதல்வர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. சமாஜ்வாடி கட்சியும் அதை வழிமொழிந்திருப்பது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து பயணிப்பதற்கான அச்சாரமாக அமையலாம். அப்படி அமைந்தால், இந்தி மாநிலங்களில் பாஜகவுக்குப் பெரும் சவாலாக அது அமையும்.

ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் கவனமாகப் பரிசீலித்தால், பாஜக படிப்படியான சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை உணரலாம். இதற்கு முன்னதாக நடந்த மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலேயே இதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டன. இந்த முடிவுகள் மேலும் அதை உறுதிப்படுத்துகின்றன. வெறும் மாநில அரசுகளின் ஆட்சி மீதான அதிருப்தியை மட்டுமே இத்தோல்விகள் வெளிப்படுத்தவில்லை. சொல்லப்போனால், மத்தியில் பாஜக அரசு எடுத்துவரும் தவறான முடிவுகளுக்கான விலையையும் சேர்த்தே மாநிலத் தலைவர்கள் தந்திருக்கிறார்கள்.

நாட்டு மக்களின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லை. பணமதிப்புநீக்கமும், ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கமும் ஏற்படுத்தியிருக்கும் தேக்கங்கள் வேலைவாய்ப்புகளைக் காணாமலாக்கிவருகின்றன. கிராமப்புற மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக விவசாயிகள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கான எந்தச் செயல்திட்டமும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மக்கள் நலப் பிரச்சினைகளில் கவனம் காட்டுவதை விட்டுவிட்டு, சமூக ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் செயல்களில் ஈடுபடும் சங்கப் பரிவாரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது அரசு. பெரும் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு இது பெரிய எச்சரிக்கை சமிக்ஞைதான். காங்கிரஸ் வழியாக அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x