Published : 09 Nov 2018 09:51 AM
Last Updated : 09 Nov 2018 09:51 AM

முதல் உலகப் போர்: உயிர்நீத்த இந்திய வீரர்களை நினைவுகூர்வோம்!

முதல் உலகப் போர் நிறைவுபெற்ற தினத்தை (1918 நவம்பர் 11) பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் கொண்டாடிவரும் நிலையில், இப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவஞ்சலிகள், சிலை திறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸில் நவம்பர் 11-ல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இந்தியப் போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்துவைக்கிறார். முதல் நினைவுச் சின்னம் பெல்ஜியம் நாட்டில் 2002-ல் திறந்துவைக்கப்பட்டது. இது இந்திய வீரர்களின் தீரத்துக்குக் கிடைத்திருக்கும் கெளரவம்!

மனிதகுலம் அதுவரை கண்டிராத பேரழிவாக முதல் உலகப் போர் கருதப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய போரில், 2.1 கோடிப் பேர் காயமடைந்தனர். இந்தப் போரில், பிரிட்டன் படைகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பெல்ஜியத்தில் மட்டும் 1,30,000 இந்தியச் சிப்பாய்கள் போரிட்டனர். அவர்களில் 10,000-க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர். ஜெர்மனி உள்ளிட்ட மைய நாடுகளின் படைகளோடு போரிட்டு 74,000-க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் பிரிட்டனில் மரணமடைந்தனர். இனம், நிறம், மொழி அடிப்படையிலான வேறுபாடுகளின் காரணமாகக் கடுமையான பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் இந்திய வீரர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

இந்தப் போரில் பிரிட்டிஷ் அரசின் சார்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பதை இந்திய அரசியல் பூர்ஷ்வாக்கள் தொடக்கத்தில் வரவேற்கவே செய்தனர். பாலகங்காதர திலகர் போன்றோர்கூட இந்தியர்கள் போர்ப் பயிற்சி பெற்றால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ராணுவத்தை வலுப்படுத்த உதவும் என்று கருதினர். ஆனால், ஏராளமான இந்தியர்கள் மரணமடைந்த செய்திகள் வெளியாகத் தொடங்கியதும் இந்த மனநிலை மாறியது. இதன் விளைவாக இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு போரில் ஈடுபடுத்துவதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பியதும், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்ததும் வரலாறு.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன், இனி எந்த நாட்டுக்கு ஆதரவாகவும் போரில் இறங்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. அணிசாரா இயக்கமும் உருவானது. அது நம்முடைய வெளியுறவுக் கொள்கையின் மூல மந்திரமாகவும் மாறியது. இன்றைக்கு உலக அளவில் போரில் கலந்துகொள்ளாவிட்டாலும், அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஐநா-வின் முயற்சிகளில் பங்கேற்க இந்தியா தயங்குவதில்லை. அதேசமயம், 1914 முதல் 1918 வரையில் நடந்த முதல் உலகப் போரில் நேரடியாக ஈடுபட்டு ஏராளமான வீரர்களை இழந்ததைப் போன்ற தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் இந்தியா தொடர்ந்து கவனமாகவே இருந்துவருகிறது. இந்த நிலைப்பாடு தொடர வேண்டும். மனிதசக்தியைக் கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் நாம் கைவிடக் கூடாது. இந்திய வீரர்களுக்குச் செய்யும் உயர்ந்தபட்ச மரியாதையாக அது இருக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x