Published : 12 Oct 2018 09:28 AM
Last Updated : 12 Oct 2018 09:28 AM

மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமா ஐந்து மாநிலத் தேர்தல்கள்?

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்குத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் நடத்தப்படும் இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கலாம் என்ற வகையிலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பலமாக உள்ள மாநிலங்கள் என்ற வகையிலும், இந்தத் தேர்தலை தேசிய முக்கியத்துவத்தோடு கட்சிகளும் ஊடகங்களும் அணுகிவருகின்றன.

ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மூன்றிலும் பாஜக காங்கிரஸ் நேரடியாக மோதுகின்றன. மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பதால், இவ்விரு மாநிலங்களிலும் இயல்பாகவே ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி நிலவுகிறது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றும் கலாச்சாரம் வாக்காளர்களிடம் இருக்கிறது. ஆகையால், இந்த மூன்று மாநிலங்களிலுமே காங்கிரஸுக்கு ஒரு சாதகம் இருக்கிறது. அதேசமயம், 1999 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த மத்திய பிரதேசமும் ராஜஸ்தானும் அதற்கு ஓராண்டுக்கு முன் நடந்த சட்ட மன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்குத்தான் பெருவாரியாக வாக்களித்தன என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சி மீது எழுந்த அனுதாப அலை அப்போது இதன் பின்னணியில் இருந்தது. தெலங்கானா, மிசோரம் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் அளவுக்கு பாஜக வலுவான கட்சி கிடையாது என்றாலும், மாநிலக் கட்சிகளிடம் அங்கே கடுமையான போராட்டத்தை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வெளியாகிவரும் தேர்தல் கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸால் பெரிய வெற்றிகளைப் பெற முடியும் என்றால், மக்களவைத் தேர்தலுக்கான மகா கூட்டணியை அமைப்பதில், தொகுதி உடன்பாடு பேரத்தில் அதன் கைகள் ஓங்க இந்த வெற்றிகள் உதவலாம். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு மிக நெருக்கமான இத்தேர்தல்களிலும்கூட ஒரு வலுவான கூட்டணியைப் பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸால் அமைக்க முடியாதது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவே. பாஜக பெரும்பாலான மாநிலங்களில் உட்கட்சிப் பூசல்களை எதிர்கொள்வது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது ராஜஸ்தான் ஒரு சிறந்த உதாரணம். உபி, பிஹார், மகாராஷ்டிரம்போல பெருவாரி மக்களவை இடங்களைக் கொண்ட மாநிலங்கள் இவை அல்ல என்றாலும், இந்தத் தேர்தலில் அடையும் வெற்றி தோல்விகள் நிச்சயம் மோடியின் பிம்பத்துடன் தொடர்புபடுத்தப்படும். அதன் எதிரொலி மக்களவைத் தேர்தலில் இருக்கும். ஆக, மக்களவைத் தேர்தல் முடிவு செல்லும் திசையை இத்தேர்தல்களின் முடிவைக் கொண்டு கணக்கிடலாம் என்றாலும், இந்தத் தேர்தல்களின் முடிவுகளையே அப்படியே மக்களவைத் தேர்தலின் முடிவும் எதிரொலிக்கும் என்ற கணக்கு அர்த்தமற்றது என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x