Published : 11 Oct 2018 09:29 AM
Last Updated : 11 Oct 2018 09:29 AM

‘நக்கீரன்’ கோபால் கைது: கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதல்!

நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநரை இணைத்துக் கட்டுரை எழுதியதற்காக ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியரும் பதிப்பாளருமான கோபால் கைதுசெய்யப்பட்டதும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பயன்படுத்தப்பட்டிருப்பதும் கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதலே அன்றி வேறில்லை. நல்லவேளையாக இந்த அடாவடியை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாத ‘நக்கீரன்’ இதழில் ஆளுநரைச் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கான எதிர் நடவடிக்கையாக கோபால் கைது நடவடிக்கையைக் கூறினாலும், அந்த இதழின் தொடர் விமர்சனங்களே இந்தக் கைதுக்கான அடிப்படை என்பது வெளிப்படை.

செய்திகளை அணுகுகையில், ஊடகங்கள் எந்த அளவுக்குள் மட்டும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழையலாம்; தனிப்பட்ட மனிதர்கள் மீதான தாக்குதல்களாக செய்திகளோ, கட்டுரைகளோ மாறிவிடாமல் இதழியலைக் கையாளலாம் என்ற விவாதங்கள் உலகெங்கும் காலம் நெடுக நடந்துகொண்டே இருக்கின்றன. எனினும், இது ஊடகங்கள் தம்மளவில் வகுத்துக் கொள்ள வேண்டிய சுயவரையறை. கருத்துச் சுதந்திரம் என்று வரும்போது, “பத்திரிகைகள் மிகவும் காரசாரமாகக் கருத்துகளை வெளியிடுவதோடு நில்லாமல், விஷயங்களைத் திரித்துக்கூறவும் விடப்படும்போதுதான் அவற்றுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று ஆகும்” என்ற தேசப்பிதா காந்தியின் கூற்றே அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பொதுச் சமூகத்துக்குமான வரையறை ஆகும்.

தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கான சுதந்திரம் என்றுமே பரந்து விரிந்ததாக இருந்ததில்லை. “நாட்டிலேயே ஊடகர்கள் அதிகமான அவதூறு வழக்குகளைச் சுமக்கும் மாநிலம்” என்ற பெயரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அடைந்ததை இங்கு நினைவுகூரலாம். 2011 - 2016 காலகட்டத்தில் மட்டும் ஊடகர்கள் மீது 213 வழக்குகள் தமிழ்நாட்டில் போடப்பட்டன.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், இந்தச் சூழல் மேலும் மோசமடைந்திருக்கிறது. நேர்வழியிலான தாக்குதல் மட்டுமின்றி பின்வழியிலான தாக்குதல்களையும் எப்படியெல்லாம் இந்த அரசு தொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு “விமர்சனபூர்வமாகச் செயல்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளை அரசு கேபிள் நிறுவனத்தைப் பயன்படுத்தி ஒளிபரப்பில் இருட்டடிக்கிறது அரசு” என்ற ஒரு குற்றச்சாட்டு போதும். தமிழக அரசின் இந்தப் போக்கில், இப்போது ஆளுநர் மாளிகையும் தன்னை இணைத்துக்கொண்டிருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும். ஜனநாயக விழுமியங்களைக் கீழே தள்ளும்.

குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களது பணியைத் தடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவான 124-ன் கீழ் ‘நக்கீரன்’ கோபால் மீது வழக்கு பதியப்பட்டதையும், கூடவே அந்த இதழில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் வேறு எந்த விதத்தில் புரிந்துகொள்வது? பத்திரிகை விநியோகஸ்தர்கள் மீதெல்லாம்கூட வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது அராஜகமே அன்றி வேறில்லை. ஆட்சியாளர்களும் ஆளுநரும் விமர்சனங்களுக்கு முகங்கொடுப்பவர்களாகத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.

இந்த விவகாரத்தில் மிகுந்த பாராட்டுக்குரியவர் சென்னை பெருநகரக் குற்றவியல் நடுவர்மன்ற நடுவர் கோபிநாத். அராஜகமான ஒரு கைது நடவடிக்கையை நிராகரித்து கோபாலை விடுவித்ததன் மூலம் தமிழ்நாட்டின் ஊடகச் சுதந்திரத்தை அவர் காத்திருக்கிறார். நாடு முழுவதுமே கருத்துரிமை பெரும் சவாலை எதிர்கொள்ளும் இக்காலகட்டத்தில், இந்தக் கைது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி, ஒரு தொற்றுவியாதிபோல பல மாநிலங்களுக்கும் பரவும் ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x