Published : 10 Oct 2018 09:25 AM
Last Updated : 10 Oct 2018 09:25 AM

ரஷ்யாவுடன் ஒப்பந்தம்: ராஜீய உறவுகளில் இந்தியாவின் சமநிலை!

ராணுவத் தளவாடங்கள், விண்வெளித் துறை உட்பட ரஷ்யாவுடன் இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருப்பதன் மூலம், தனது ‘அணி சாரா’ தன்மையையும் வெளியுறவு ராணுவத் துறைகளில் கடைப்பிடிக்கும் சுதந்திரக் கொள்கைகளையும் இந்தியா மீண்டும் உறுதிசெய்திருக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் ரஷ்யாவை ராணுவரீதியாக நெருங்கும் வேளையில், அமெரிக்காவுடன் மட்டும்தான் இந்தியா நட்புறவைப் பேணுகிறது என்ற எண்ணத்தை மாற்றவும் இந்த ஒப்பந்தங்கள் வழிசெய்துள்ளன.

இந்த ஒப்பந்தங்களின்படி, ‘எஸ்-400’ ஏவுகணைகள் தொகுப்பை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. வான் வழி ஏவப்படும் எந்தவித ஆபத்தையும் அடையாளம் கண்டு வழியிலேயே மறித்து அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் ரூ.40,000 கோடியில் வாங்கப்படுகின்றன. ‘எஸ்-400’ ஏவுகணைகள் ஒப்பந்தம் சர்வதேச அரங்கில் ஏற்படுத்தவிருக்கும் புவிஅரசியல் விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று சொல்லலாம். ரஷ்யாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் சில துறைகளில் ஆழப்படுத்த விரும்புவதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது இந்தியா.

ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் ராணுவ, வர்த்தக உறவு வைத்துக்கொண்டால் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா பிற நாடுகளை எச்சரித்திருந்த நிலையிலும், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிடமிருந்து ராணுவத் தளவாடங்களை அதிக அளவில் கொள்முதல் செய்யும் இந்தியா, எந்த நாட்டுக்கும் கட்டுப்பட்டதல்ல என்பது இச்செயலால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பாதுகாப்புத் தேவைகளுக்கானவற்றை உரிய நாடுகளிடமிருந்து பெறும் சுதந்திரத்தை விட்டுத்தர இந்தியா தயாராக இல்லை. ‘எஸ்-400’ ஏவுகணைகளை இந்தியா பேரம் பேசியபோது ஹெலிகாப்டர்கள், ரகசியமாகப் பறந்துசென்று தாக்கும் போர் விமானங்கள், துப்பாக்கிகள் போன்றவற்றைத் தங்களிடமிருந்தே வாங்கிக்கொள்ளுமாறு ரஷ்யா வற்புறுத்தியது. இந்தியா அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தங்கள் தவிர, இந்தியரை ரஷ்ய விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பவும், மேலும் ஒரு அணு மின்சக்தி நிலையத்தை இந்தியாவில் நிறுவவும் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 1,000 கோடி டாலர்களுக்கும் குறைவாக இருப்பதை உயர்த்தவும், ரஷ்ய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் ஒப்புக்கொண்டுள்ளனர். பெட்ரோலியத் துறையிலும் ஒப்பந்தத்தை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபரையும், இம்மாதம் ரஷ்ய அதிபரையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் அதிபரையும், சந்தித்து, இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஈரான், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய மூன்றுமே நட்பு நாடுகள்தான் என்றாலும், எதனுடன் நட்பு அதிகம் என்று அறிந்துகொள்ள பிற நாடுகளும் ஆர்வமாக இருக்கின்றன. ராஜீய உறவுகளில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் பலனை இது உணர்த்துகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x