Published : 29 Aug 2018 08:55 AM
Last Updated : 29 Aug 2018 08:55 AM

மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதிப்புகளைக் களைய வேண்டும்!

கேரளமும் கர்நாடகத்தின் சில பகுதிகளும் மழை வெள்ளத்தால் உருக்குலைந்திருக்கும் நிலையில், மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் முறைகேடான நடவடிக்கைகளைக் களையும் பொருட்டு, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் விஷயங்களை மறுஆய்வுசெய்ய வலியுறுத்தியிருக்கிறார் கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ். இந்தச் சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு முக்கியப் பொறுப்பு வகிக்கும் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள், காட்கில் குழுவும் கஸ்தூரி ரங்கன் குழுவும் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், தங்களது வரைபடங்களை மீளாய்வு செய்ய வேண்டும்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மேற்குத் தொடர்ச்சி மலையின் பலவீனமான பகுதிகளைப் பாதுகாக்கச் சொல்லி மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு பரிந்துரைத்தது. கொள்கைகள் வகுப்பதில் கேரளம் கொண்டிருந்த குறுகிய பார்வையின் விளைவாகவே இப்போது இந்தப் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது என மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழுவின் தலைவர் மாதவ் காட்கில் சாடியிருக்கிறார்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆயத்தமாவதுதான் இம்மாநில அரசுகளின் முதன்மையான பணி. மனிதவள மேம்பாட்டையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமஅளவில் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், இந்தப் பணி எளிமையாக இருக்கப்போவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழுவும் (1,29,037 சதுர கி.மீ.) கஸ்தூரிரங்கன் குழுவும் (1,64,280 சதுர கி.மீ.) வரையறுத்திருக்கின்றன.

கேரளத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மேற்குத் தொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு குறிப்பிட்ட இடங்களில் 39 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், கஸ்தூரிரங்கன் குழு அடையாளம் காட்டிய சிறு மண்டலப் பகுதிகளில் 4 லட்சம் குடும்பங்களே இருக்கின்றன. இத்தகைய மக்கள்தொகை மாற்றங்களையும், மின்சாரப் பற்றாக்குறையையும் அதன் தேவையையும் கருதி எண்ணற்ற பெரிய அணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இனி, இதுபோன்ற திட்டங்களை உருவாக்கும்போது இயற்கையின் எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

புதிய அணைகளுக்கான திட்டங்களைக் கைவிட வேண்டும். மின் தேவைக்காக, பெரும் பாதிப்பு தராத பசுமைவழி சூரிய மின்உற்பத்தியைச் சாத்தியப்படுத்த வேண்டும். கேரளம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருக்கும் குவாரி, சுரங்கங்களை அடையாளம் கண்டு அவற்றை நிறுத்திவைக்க வேண்டும். மலைகளைக் குடையும் குவாரி, சுரங்கம் போன்றவை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதியளித்தால் அது நிச்சயம் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். காட்கில் குழு பரிந்துரைத்தவற்றை செயல்படுத்துவதுதான் சிக்கல்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி. இதன் மூலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நடைபெறும் முறைகேடான நடவடிக்கைகளையும் தவிர்க்க முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x