Published : 10 Aug 2018 09:30 AM
Last Updated : 10 Aug 2018 09:30 AM

ஐரோப்பிய நாடுகளின் உறவைப் பேணுவது பிரிட்டனின் புதிய சவால்!

ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதில் பிரிட்டன், குழப்பத்தைச் சந்தித்துவரும் நிலையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானை, பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்ட பிரிட்டன், அதே ஐரோப்பிய நாடுகளுடன் தனித்தனியாக இணக்கமான உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது. மெக்ரானை தெரசா மே சந்தித்திருப்பது இந்த முயற்சியின் ஒரு பகுதி என்றே பார்க்கப்படுகிறது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையில் (மக்களவை) பிரெக்ஸிட் முடிவு நூலிழையில் ஒப்புதல் பெற்றது. தெரசா மேயின் டோரி (கன்சர்வேடிவ்) கட்சி மட்டும்தான் அதை ஆதரித்திருக்கிறது. இதற்கிடையே, பிரிட்டனில் அங்கம் வகிக்கும் அயர்லாந்து குடியரசும் வடக்கு அயர்லாந்தும் எல்லைப்புற வர்த்தகத்தைத் தடையில்லாமல் மேற்கொள்ளலாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பிரதிநிதி மைக்கேல் பர்னியர், நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். பிரெக்ஸிட் தொடர்பான பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வு காணப்படும் வரையில் இதைத் தற்காலிக ஏற்பாடாக வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அயர்லாந்து குடியரசுக்கும் வடக்கு அயர்லாந்துக்கும் இடையில் வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதை ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும்கூட விரும்பவில்லை. ஆனால், இதற்காக பிரிட்டன் முன்வைத்துள்ள யோசனையில் தெளிவில்லை. அயர்லாந்து குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்குப் பொதுவான கட்டுப்பாட்டு வரம்பில் வடக்கு அயர்லாந்தும் சேர்ந்துகொள்ளலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. இதை பிரிட்டன் உடனே நிராகரித்துவிட்டது. பிரிட்டன் ஏற்கும்படிக்குத் தங்கள் யோசனை அடங்கிய வாசகத்தை மேம்படுத்தத் தயார் என்று பர்னியர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் சரக்குகளை மட்டும் தடையில்லா வர்த்தகத்துக்கு உட்படுத்தலாம் என்று பிரிட்டன் ஒரு யோசனையைத் தெரிவித்தது. அதாவது சேவைகள் தொடர்பாகப் பேசி தனி ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், சரக்கு வியாபாரத்தைத் தடையில்லாமல் தொடரலாம் என்பதே அந்த யோசனை. இதை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துவிட்டது. “சரக்குகளும் சேவைகளும் இணைந்ததுதான் பொருளாதாரம். சேவைகளுக்குத் தடை விதித்துவிட்டு சரக்குகளை மட்டும் தடையில்லாமல் பரிமாறிக்கொண்டுவிட முடியாது” என்று நிராகரித்துவிட்டார் பர்னியர்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடாகச் சென்று பேசி, ஐரோப்பிய கண்டத்தின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று தெரசா மே கருதியிருந்த நிலையில் பர்னியரின் வார்த்தைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கின்றன. பர்னியரின் கருத்துகளுக்கு மாறாக பிரிட்டனின் கோரிக்கையை மெக்ரான் ஏற்பார் என்பதும் நிச்சயமில்லை. இந்நிலையில், அக்டோபரில் ஐரோப்பிய உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் பிரெக்ஸிட் தொடர்பான தெளிவான உடன்படிக்கையை தெரசா மே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவில்லை என்றால், 2019 மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் தூக்கி வீசப்படலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x