Published : 06 Aug 2018 09:15 AM
Last Updated : 06 Aug 2018 09:15 AM

வன்கொடுமை தடைச் சட்டம்: சரியான திசையில் செல்கிறது மத்திய அரசு!

பட்டியல் இன மக்கள் – பழங்குடிகளின் நலனைக் காக்கும் வகையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது என்று மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும்வகையில் உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையின் விளைவாகத் தன்னெழுச்சியான போராட்டங்கள் உருவாகின.

ஆகஸ்ட் 9-ல் நாடு தழுவிய முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியும் இக்கிளர்ச்சியில் இறங்கவிருப்பதாக எச்சரித்ததை அடுத்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம் ஆட்சேபகரமான தனது தீர்ப்பின் மூலம் மூன்று அம்சங்களை வலியுறுத்தியிருந்தது.  ‘பட்டியல் இனத்தவர் தரும் புகாரின் பேரில் குற்றச்சாட்டு பதியப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்ற சட்டப் பிரிவு இருந்தாலும், புகாரில் தகுதி இல்லை என்றால், முன் ஜாமீன் தரலாம்.

அரசு ஊழியர் மீதுதான் புகார் என்றால்,  பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரி அந்தக் கைது நடவடிக்கை சரி என்று ஏற்புரை வழங்க வேண்டும்; அரசு ஊழியர் அல்லாதவர் மீது புகார் என்றால், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கைதுக்கு ஒப்புதல் தர வேண்டும். புகார்கள் மீது ‘முதல்கட்ட’ விசாரணை நடத்தப்பட வேண்டும் (கைது நடவடிக்கைக்கு முன்பு)’ என்று தீர்ப்பு வரிசைப்படுத்தியது.

இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களும் மத்திய அமைச்சரவையால் கைவிடப்படுகின்றன. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் தரும் புகாரின் பேரில் கைதாகிறவருக்கு முன் ஜாமீன் கிடையாது. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படுவதற்கும் முன்னதாக, அந்தப் புகாரின் மீது முதல்கட்ட விசாரணை ஏதும் நடத்தப்பட மாட்டாது. வன்கொடுமை தடைச் சட்டப்படி ஒருவரைக் கைதுசெய்ய அரசு அதிகாரியின் ஒப்புதலோ, மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரின் ஒப்புதலோ தேவையில்லை.

தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டால் அப்பாவிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருக்க நியதிகளை வகுக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் நிலையாக இருந்தாலும் தீர்ப்பு வெளிவந்தவுடன், ‘அந்தச் சட்டமே தவறாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று பலர் பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில், பட்டியல் இனத்தவர்களும் பழங்குடிகளும் இச்சட்டப்படி புகார்கள் அளிப்பதே குறைவு.

அப்படியே பதிவாகும் புகார்களின் மீது நடவடிக்கைகளும் குறைவு. அவை தொடர்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதும் மிகமிகக் குறைவு. நிஜ வாழ்க்கையில் பட்டியல் இனத்தவரும் பழங்குடிகளும் இன்னமும் பல வகைகளிலும் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது. சாதி காரணமாக ஒரு பகுதி மக்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படும் நிலையில், தவறுசெய்கிறவர்கள் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.

பட்டியல் இனத்தவர், பழங்குடிகளின் நலனைக் காப்பதுடன் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தாங்களாகவே முன்வந்து உதவுவதும் அரவணைப்பதும் பிற சமூகங்களின் கடமை. தேசத் தந்தை காந்தி தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தது அதைத்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x