Published : 23 Jul 2018 09:12 AM
Last Updated : 23 Jul 2018 09:12 AM

கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்! 

கும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம். ‘‘பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைக் கும்பல்கள் சட்டத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொள்வதை மத்திய - மாநில அரசுகள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது'’ என்று உச்ச நீதிமன்றம் முன்னர் கண்டித்தது. மாவட்டம்தோறும் ஒரு அதிகாரி இந்தப் படுகொலைகளைத் தடுக்க நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதற்குப் பிறகு, பசு குண்டர்களின் அராஜகத் தாக்குதல்கள் குறைந்தன. இப்போதோ, ‘குழந்தைகளைக் கடத்துகிறவர்கள்’ என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவிகளைக் கொல்வது அதிகமாகிவருகிறது.

குழந்தைகளைக் கடத்துகிறவர்கள் குறித்து மக்களிடையே பரவும் வீடியோ காட்சிகளும் குறுஞ்செய்திகளும்தான் கும்பல் கொலைகளுக்கு முக்கியக் காரணம் என்று அரசும் காவல் துறையும் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட முடியாது. சமூகத்தில் கும்பல்கள் பெற்றுவரும் ஊக்கத்தையும் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பசு குண்டர்களின் அராஜகங்களுக்கும் கும்பல் கொலைகளுக்கும் தொடர்பு உள்ளது. ‘‘நடப்பு சமூக-பொருளாதாரக் கட்டமைப்பும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் மத அடிப்படையில் அணிதிரள்வதும் காரணங்கள்’' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய 45 பக்க உத்தரவில் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சகிப்புத்தன்மை இல்லாததால் உருவாகும் வெறுப்புணர்வுக் குற்றங்கள், சித்தாந்த ஆதிக்க உணர்வு, பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றை வளரவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறது. “இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும், நடந்தால் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு,  “கும்பல்கள் சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொல்வதைத் தனிக் குற்றமாகவே இனி கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறது. இதற்கென்று தனிச் சட்டம் இயற்றினால்தான் இதில் ஈடுபடுவோருக்கு அச்சம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இது வரவேற்புக்குரியது. “கொலை செய்பவர்களை மட்டும் தண்டிப்பதுடன் நில்லாமல் வதந்திகளைப் பரப்புவோர், அடிக்கத் தூண்டுவோர், முன்னின்று இவற்றைச் செய்வோர் ஆகியோரையும் தண்டிக்க வேண்டும். இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபடுவோரை மட்டுமின்றி, தடுக்கத் தவறியோர், கொலைகாரர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தத் தவறியோர் போன்றோரும் தண்டனைக்குரியவர்களா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். கும்பல் கொலைகள் நடக்காமல் தடுப்பதும், நடந்தால் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் அமைப்பின் கடமை” என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. பிற மதங்களின் மீது வெறுப்பு, சமூகத்தின் பன்மைத்தன்மையை ஏற்க மறுப்பு, வேற்றுமையில் ஒற்றுமையைக் காண விரும்பாத போக்கு ஆகியவற்றால்தான் மனிதர்கள், மனிதப் பண்பையே இழந்துவிடுகிறார்கள். பல்லாண்டுகள் போராடி நாம் பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் என்று எல்லாவற்றையும் அழித்துவிடக்கூடியவை இந்த அராஜகக் கும்பல்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். அபாயகரமான இந்தப் போக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு மாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x