Published : 19 Jul 2018 09:29 AM
Last Updated : 19 Jul 2018 09:29 AM

சென்னை வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்!

சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றிய மிக முக்கியமான ஒரு அறிக்கையை நடந்து முடிந்த சட்ட மன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று தாக்கல் செய்திருக்கிறது தமிழக அரசு. “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாகத் தண்ணீரைத் திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம்” என்பதை தலைமைக் கணக்காயர் மற்றும் தணிக்கையாளரின் (சிஏஜி)  அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது. வெள்ளச் சேதத்துக்குக் காரணம் தமிழக அரசின் பொறுப்பின்மைதான் என்பது உறுதியாகியிருக்கிறது. 2016 மார்ச் மாதத்தில் அளிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையை இவ்வளவு காலமும் வெளியிடாத தமிழக அரசு, இப்போது அதைப் பெயரளவுக்கு அவையில் சமர்ப்பித்துவிட்டு, அது பற்றிய விவாதத்தைத் தவிர்த்திருக்கிறது.

சென்னையை வெள்ளம் சூறையாடிய நாட்களை ஒருநாளும் தமிழ் மக்களால் மறக்க முடியாது. இந்தியாவின் வசதிமிக்க நகரங்களில் ஒன்று ஒரே நாளில் தீவாகி, அதன் குடிமக்கள் குடிநீருக்குக்கூட வழியின்றி அகதிகளைப் போலத் திரிய நேர்ந்த நாட்கள் அவை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை இழந்தனர். உயிரிழந்தவர்கள், வீடிழந்தவர்கள் பட்டியல் தனி. இத்தனைக்கும் உடனடிக் காரணம், உரிய முன்னெச்சரிக்கை இன்றி நிர்வாகம் செய்தது - விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரைத் திறந்துவிட்டது. நீண்டநாள் காரணம், வளரும் சூழலுக்கேற்ப சென்னையின் கட்டுமானத்தை விரிவாக்காதது. “இது இயற்கைப் பேரிடர் அல்ல; மனிதக் குற்றம், அப்பட்டமான படுகொலை” என்று அப்போதே எதிர்க்கட்சிகளும் சூழல் அமைப்புகளும் குற்றம்சாட்டின. அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யில்லை உண்மைதான் என்பதை சிஏஜியின் அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையாகப் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பேச வேண்டிய அரசோ ஆய்வறிக்கையை மூடிமறைத்து அமுக்கிவிட எத்தனிக்கிறது. கடுமையான கண்டனத்துக்குரியது இது.

அதிமுக அரசு சென்னை வெள்ளத்துக்குப் பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இனியொருமுறை இத்தகைய அவலம் நேராத வகையில், சென்னையின் கட்டுமானத்தை விரிவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், அறிவியலாளர்கள் என்று எல்லாத் தரப்புகளுடனும் பேசி விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி, பணிகளை முன்னெடுக்க வேண்டும். அடையாறு, கூவம், கொசஸ்தலை மூன்று நதிகளுமே சென்னையை அர்த்தப்படுத்துகின்றன. அந்த மூன்று நதிகளையும் சாக்கடைகளாக மாற்றிவிட்டு, சென்னையும் சென்னைவாசிகளும் நல்வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியாது. சென்னையின் நீர்நிலைகள் மேலாண்மையிலும், குப்பை - கழிவுநீர் மேலாண்மையிலும் ஒரு தீர்க்கமான மாற்றுச் செயல்திட்டம் தேவைப்படுகிறது. மக்களையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டிய அந்தச் செயல்திட்டத்துக்கு அரசு முதலில் பொறுப்பேற்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x