Published : 22 Jun 2018 07:52 AM
Last Updated : 22 Jun 2018 07:52 AM

கொலம்பியாவில் ஆட்சி மாற்றம்: அமைதி ஏற்பட வழிவகுக்குமா?

தெ

ன்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், 54% வாக்குகள் பெற்று அதிபராகியிருக்கிறார் ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த இவான் தூகே (41). ‘கொலம்பியா புரட்சிகர ஆயுதப்படைகள்’ (ஃபார்க்) எனும் மார்க்சிய கொரில்லா அமைப்புடன் கொலம்பிய அரசு மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு நடந்திருக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. முன்னாள் கொரில்லா உறுப்பினரான கஸ்தாவா பெட்ரோவுக்கு 42% வாக்குகளே கிடைத்திருக்கின்றன. கொரில்லா குழுக்களுக்கு எதிரானவரான இவான் தூகே அதிபராகியிருக்கும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முந்தைய அதிபர் ஹுவான் மானுவல் சாந்தோஸ் முன்னெடுத்த அமைதி ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்காவுக்கும், கரீபியன் பகுதிகளுக்கும் மிகப் பெரும் நிதி ஆதாரமாக உள்ள இண்டெர்-அமெரிக்கன் டெவலப்மெண்ட் வங்கியுடன் பல்லாண்டு கால வேலை அனுபவம் தூகேவுக்கு உண்டு. இதன் மூலம், பழமைவாதியான தூகே முன்னெடுக்கவிருக்கும் பொருளாதாரத் திட்டங்கள் எப்படி அமையும் என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். தூகேவின் நெடுநாள் வழிகாட்டியும், 2002-லிருந்து 2010 வரை எட்டு ஆண்டுகள் அதிபராக இருந்தவருமான அல்வாரோ ஊர்ஜிபே, தூகேவின் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. அமைதி ஒப்பந்தத்துக்கான வாக்கெடுப்பை வெகு தீவிரமாக எதிர்த்துவந்தவர் ஊர்ஜிபே. எனவே, கிளர்ச்சியாளர்களுடனான அமைதி ஒப்பந்தத்துக்கு தூகே ஒத்துழைப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒரு அதிபராக, நடுநிலையான நிலைப்பாட்டை எடுப்பதற்கு தூகே அதிகமாகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஃபார்க் அமைப்பானது அதே பேரில் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியது. இக்கட்சியிலிருந்து ஒருவரை அதிபர் தேர்தலுக்காக நிறுத்தியது. ஆனால், ஃபார்க் வேட்பாளர்கள் கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளானதால் தேர்தலிலிருந்து அவர் விலகிவிட்டார். இதனால், அமைதி ஒப்பந்தம் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது.

கொலம்பியா கடந்த அரை நூற்றாண்டு காலமாக மோசமான கொடூரங்களைச் சந்தித்திருக்கும் நிலையில், நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஃபார்க் அமைப்புடனான ஒப்பந்தத்தைத் துணிச்சலுடன் சாத்தியமாக்கினார் சாந்தோஸ். அந்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் மோதல்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள், பலரும் அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். இப்படி ஒரு கொடுமையான துயரத்துக்குப் பிறகுதான் மக்களிடையே அமைதி நிலவும் சூழல் வாய்த்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் கண்டிருக்கும் கொலம்பியாவில் அமைதிக்கான சூழல் வலுக்குமா அல்லது பலவீனமடையுமா என்பது மிக முக்கியமான கேள்வி. கொலம்பியர்களின் கனவுகளை நிதர்சனமாக்குவதில் எவ்வளவு தூரம் பயணிக்கவிருக்கிறார் என்பதைக் கொண்டே புதிய அதிபர் தூகே மதிப்பிடப்படுவார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x