Published : 15 Jun 2018 09:43 AM
Last Updated : 15 Jun 2018 09:43 AM

உயிரி எரிபொருள் கொள்கை: அரசின் நல்முயற்சி!

உயிரி எரிபொருள் தொடர்பான தேசியக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவின் எண்ணெய்த் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலம் அரிய அன்னியச் செலாவணியைக் கொடுத்து வாங்கப்படுகிறது. இந்நிலையில் எத்தனால் போன்ற உயிரி எரிபொருள் தயாரிப்புக்கும் பயன்பாட்டுக்கும் அளிக்கும் ஊக்குவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை. உயிரி எரிபொருளை இந்தியாவுக்குள் பயன்படுத்தத் தடையாக இருந்த அம்சங்கள் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.

இதுவரையில் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை மட்டும்தான் பெட்ரோலில் கலக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க, எத்தனால் தயாரிப்புக்கு எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்பதில் அரசு தாராளம் காட்டியிருக்கிறது. புதிய கொள்கைப்படி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், மழை-ஈரம்-பூஞ்சைகளால் சேதமடைந்த உணவு தானியங்கள், உருளைக் கிழங்கு, நகர்ப்புற திடக் கழிவு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலைக் கூடப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதனால், உயிரி எரிபொருள் தயாரிப்புச் செலவு குறையும், நுகர்வோர்களின் வாங்கும் வரம்பில் விலை இருக்கும்.

அதிக விலை கிடைப்பதால் சாராய ஆலைகளுக்கு எத்தனாலை விற்கவே சர்க்கரை ஆலைகள் விரும்பும். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களில் கலப்பதற்கு எத்தனால் தேவை என்று கேட்காமல் இல்லை. ஆனால், அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருப்பதால் எத்தனால் இல்லாமலேயே விற்கின்றனர். அப்படியும் 2017-18-ல் 150 கோடி லிட்டர் எத்தனால் விற்கப்பட்டது. அதற்கு ஈடான அன்னியச் செலாவணி மதிப்பு ரூ.4,000 கோடி. வேளாண் துறையிடமிருந்து வேளாண் கழிவுகளைக் கொள்முதல் செய்து அதிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். வட இந்தியாவில் வைக்கோல் எரிப்பு போன்றவை குறைவதால் சுற்றுச்சூழல் நஞ்சாவதும் கணிசமாகக் குறையும்.

உயிரி எரிபொருளைப் பயன்படுத்த அரசின் கொள்கை அனுமதித்தாலும் தொழில்நுட்ப ரீதியாகவும், செலவு ரீதியாகவும் அது கட்டுப்படியாவதாக இருப்பது அவசியம். உயிரி எரிபொருள் தயாரிப்புக்கான வாய்ப்புகள் காரியசாத்தியமுள்ள வகையில் விவசாயிகளுக்குப் பட்டியலிடப்பட வேண்டும். எத்தனால் தயாரிப்புக்கான மூலப்பொருள் கிடைப்பதை எளிதாக்கிவிட்டாலும், தயாரிக்கப்படும் எரிபொருள் தேவைப்படுவோருக்கு எளிதில் கிடைப்பதையும் உறுதி செய்தாக வேண்டும். இந்த நோக்கில்தான், உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட ரூ.5,000 கோடி முதலீட்டுக்கு புதிய கொள்கை வகை செய்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இது தொடர்பாக அரசு ஊக்குவிப்புச் சலுகைகளையும் வழங்கவிருக்கிறது. இத்துறையில் தனியார் முதலீட்டுக்கு உள்ள கொள்கைத் தடைகளையும் அரசு நீக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரி எரிபொருள் தயாரிப்பில் நினைத்தபடி சாதிக்க முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x