Published : 04 May 2018 08:12 AM
Last Updated : 04 May 2018 08:12 AM

நெல்லை மாணவர் தற்கொலை: மதுக் கடைகளை மூடுமா அரசு?

நெ

ல்லையைச் சேர்ந்த மாணவர் தினேஷ், தனது தந்தையின் குடிப் பழக்கத்தால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழகத்தில் குடிப் பழக்கம் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். தனது மரணத்துக்குப் பிறகாவது மதுக் கடைகளை முதல்வர் மூடுவாரா என்று தற்கொலைக் கடிதத்தில் அந்த மாணவர் விடுத்திருக்கும் வேண்டுகோள் அத்தனை எளிதில் கடந்துபோகக் கூடியதல்ல.

தமிழகத்தில் 1.25 கோடி குடிநோயாளிகள் உள்ளனர். மதுப் பழக்கத்தால் கொலைகள், தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து நடக்கின்றன. குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் எண்ணிக்கையே 4,000-ஐத் தாண்டிவிட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அன்றாடம் விபத்துகள் நடக்கின்றன. ஒருபக்கம் குடிப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பாடம் எடுத்துவிட்டு, மறுபக்கம் மதுக் கடைகளை அரசே நடத்துவது குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். எனினும், மதுக் கடைகளை மூடும் விஷயத்தில் அரசு அக்கறை காட்டவே இல்லை.

நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக் கடைகளை மூட வேண்டும் என்று 2017-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 3,000 மதுக் கடைகள் மூடப்பட்டன. பின்னர், அந்தக் கடைகள் வேறு இடங்களில் திறக்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக அறிவிக்கப்பட்டு, மேலும் புதிய கடைகள் திறக்கப்பட்டன. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘மாநகராட்சி, நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆனால், இன்னொருபுறம் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. இதன் மூலம், மதுக் கடைகளை மூடும் விவகாரத்தில் தன்னுடைய இரட்டை முகத்தைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

அரசின் வருவாய் குறையும் என்று கூச்சமே இல்லாமல் காரணமும் சொல்கிறது. மக்கள் அழிவின் மூலம் கிடைக்கும் வருமானம் தனக்கு முக்கியம் என்று அரசு கருதுவதைவிட அவல நிலை ஏதுமில்லை. தமிழகத்தில் தினேஷ் போன்ற எத்தனையோ பேர் தங்கள் உறவினர்களின் குடிப் பழக்கத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள். இனியும் மதுக் கடைகளை மூடுவதில் அக்கறை காட்டவில்லை என்றால், இந்த அரசை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x