Published : 13 Feb 2018 09:30 AM
Last Updated : 13 Feb 2018 09:30 AM

கோவா சுரங்க உரிமங்கள் ரத்து: சரியான தீர்ப்பு!

கோவா அரசு முறையாகப் பரிசீலிக்காமல் வழங்கிய புதிய சுரங்க குத்தகை உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருப்பது, உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. நிலம், நீர், காற்று ஆகிய மூன்றையும் நஞ்சாக்கும் வகையில் வரம்பின்றி மேற்கொள்ளப்பட்ட இரும்புக் கனிம அகழ்வுப் பணி, அம்மாநில அரசைத் தவிர மற்ற அனைவருக்கும் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பு பாஜக தலைமையிலான கோவா அரசுக்கு உரிய பாடத்தைத் தந்திருக்கிறது.

சுரங்க குத்தகை உரிமங்களை வழங்குவதற்கான கொள்கையை 04.11.2014-ல் கோவா அரசு வெளியிட்டது. உரிமங்களைக் கோரி விண்ணப்பிக்கலாம் என்று மறுநாளே விளம்பரம் செய்தது. விண்ணப்பங்களைப் புதியனவாகப் பரிசீலித்து வழங்க புதிய விதி களையும் வழிமுறைகளையும் அது கடைப்பிடிக்கவேயில்லை.

12.01.2015-ல் ஒரே நாளில் 31 பேருக்கு அனுமதி அளித்தது. மத்திய அரசின் சுரங்க, கனிமங்கள் (வளர்ச்சி, முறைப்படுத்தல்) திருத்த அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்னதாக இவை வழங்கப்பட்டுள்ளன. இவை உட்பட மொத்தம் 88 சுரங்க குத்தகை உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறது.

சுரங்க குத்தகைக்குப் புதிதாக மனுக்களைப் பெற்று, மாசுக் கட்டுப் பாடு தொடர்பான புதிய விதிமுறைகள், வழிமுறைகளுக்கு ஏற்ப விண்ணப்பங்களைப் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. கோவாவில் இரும்புக் கனிமம் திறந்த சுரங்கங்களில் இருந்து அப்படியே அள்ளி எடுக்கப்பட்டு, லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.

எடுத்துச் செல்லப்படும் கனிமங்கள் போகும் வழிகளில் எல்லாம் கொட்டியும் காற்றில் பறந்தும் வீணாகின்றன. சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் இது ஏற்படுத்தும் ஆபத்தால் ஏற்படும் விளைவுகளைக் கணக்கிட்டால், சுரங்க உரிமங்கள் மூலம் இதர வகைகளிலும் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகமிக சொற்பமே.

எதிர்காலங்களில் இவ்வித சுரங்கங்களுக்கு உரிமம் வழங்கும் போது கனிமத்தின் விலை, சர்வதேசச் சந்தையில் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆகியவற்றை மட்டும் கருத்தில்கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு, சுகாதாரப் பாதிப்பு போன்றவற்றையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் வன விலங்கு நல வாரியம் போன்ற அமைப்புகளின் ஒப்புதலின்றியே கோவாவில் சுரங்க உரிமங்கள் பெறப்பட்டன. இப்போதும் அதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஒப்புதலும் பெறப்படவில்லை. இத்தகைய விதிமீறல்களை அனுமதிக்கவே கூடாது.

கோவாவில் வேலைவாய்ப்புக்கும் அந்நியச் செலாவணி ஈட்டலுக்கும் சுற்றுலாத் தொழில் இருக்கிறது. அத்தொழிலை மேம்படுத்தினாலே ஏராளமான வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருவார்கள். சுரங்கத் தொழிலில் கிடைக்கும் வேலைவாய்ப்பு தற்காலிகமானது.

எல்லா கனிமங்களும் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு, வேலைவாய்ப்பும் அந்நியச் செலாவணி ஈட்டலும் வற்றிவிடும். அப்போது மாநிலமும் எதற்கும் பயன்படாமல் பாழ்பட்டுவிடும். கோவாவின் நீண்டகால நன்மை கருதி, கோவா மாநில அரசு விவேகமான முடிவை எடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x