Published : 05 Feb 2018 09:05 AM
Last Updated : 05 Feb 2018 09:05 AM

தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டம்!

லங்கை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறி யிருக்கும் சட்டத் திருத்தம், தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தையே நிலைகுலைய வைக்கும் வகையில் அமைந் திருக்கிறது. வங்கக் கடலில் மீன்பிடிப்பின்போது இலங்கை எல்லைப் பகுதிக்குள் தவறிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு கடும் அபரா தம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகைசெய்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், சட்டரீதியாக மேலும் அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது இலங்கை அரசு.

இலங்கை அரசு 1979-ல் இயற்றிய மீன்பிடிப்பு மற்றும் கடல்வள ஆதாரங்கள் சட்டத்தின்படி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வருபவர் களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கவும் அபராதம் விதிக்கவும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அச்சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தமானது, இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரை அபராதம் விதிப்பதற்கு வகைசெய்துள்ளது. கடற்படையினருக்கு அதிகளவில் அதிகாரத்தை அளித்திருக்கும் இச்சட்டத் திருத்தம், அடிப்படைத் தேவைகளுக்காக உயிரைப் பணயம் வைத்து கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் தமிழக கடற்கரையோர மீனவர்களைக் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடியது. படகின் விலையைக் காட்டிலும் அதிக அபராதம் விதிப்பது மீனவர்கள் அவர்களது தொழிலைவிட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளிவிடும்.

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுகிறார்கள். நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் அனுபவித்துவருகிறார்கள். அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டுச் சீர்குலைக்கப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட துயரச் சம்பவங்களும்கூட அவ்வப்போது நடக்கின்றன. பாக் ஜலசந்தியைக் கடல் எல்லையாகக் கொண்டிருக்கும் இந்தியாவும் இலங்கையும், அந்தக் கடல் பகுதியில் காலம்காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்கள் குறித்து, ஒரு நல்ல தீர்வை இதுவரையில் எட்டவில்லை.

தமிழக மீனவர்கள் சுருக்கு மடி, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை தரப்பில் கூறப்பட்டது. இதை யடுத்து, அந்த வகையான வலைகளைப் பயன்படுத்துவதற்குத் தமிழக மீனவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இழுவை வலைகளையும்கூடப் பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை அரசு பிடிவாதம் பிடித்துவருகிறது. குறைந்தபட்ச காலமாவது அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்கூட இலங்கை அரசு மறுத்துவிட்டது.

இந்த சட்டத் திருத்தம் குறித்து பிரதமர், இலங்கை அரசிடம் பேச வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருக் கிறார். தமிழக அரசு, தனது வழக்கமான தயக்கத்தைக் களைந்து, தனது எதிர்ப்பைத் தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதே சமயம், காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசு ஏற்கெனவே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர முயற்சித்துவந்த நிலையில், இந்திய அரசு அதுகுறித்துப் போதிய அக்கறை காட்டவில்லை. இனியும் அந்தக் கால தாமதம் தொடரக் கூடாது. தமிழக மீனவர்களைக் கைவிட்டுவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x