Published : 08 Nov 2016 08:57 AM
Last Updated : 08 Nov 2016 08:57 AM

மாநிலங்கள் தம் பங்குக்குக் குரல் கொடுக்க வேண்டும்!

பொதுச் சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பில் கையாளப்பட வேண்டிய வரி விகிதங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. இந்த வரியை யார், எப்படி வசூலிப்பது என்பதை இறுதிசெய்ய வேண்டியதுதான் எஞ்சி நிற்கிறது. நம் நாட்டின் பன்முகப் பொருளாதார, அரசியல் தன்மைகள் காரணமாக எளிதில் செயல்படுத்தக்கூடிய வழிமுறையை ஏற்பதில் மேலும் விவாதங்கள் நடத்த வேண்டியிருக்கிறது. ‘செஸ்’ என்று அழைக்கப்படும் கூடுதல் வரியை விதிக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த மாநிலங்கள்கூட, புதிய உத்தேச வரி விகிதங்கள் பற்றிய மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்ட பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் அப்படி ‘செஸ்’ விதித்துக்கொள்ளவும், அதில் திரட்டப்படும் தொகை முழுவதையும் மாநிலங்கள் இழக்கும் வருவாயை ஈடுகட்டப் பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளன.

இப்போதைக்கு, ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் அதிகம் நுகரும் பொருட்களுக்கு வரியே விதிக்காமல் 0% ஆக விட்டுவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த நிலையில் உள்ள பண்டங்களுக்கு அதிகபட்சம் 5% மட்டும் வசூலிக்கப்படும். பிறகு 12%, 18%, 28% என்ற விகிதங்களில் நிர்ணயிக்கப்படும். தங்கத்தின் மீது எவ்வளவு வரி விதிப்பது என்று முடிவுசெய்யப்படவில்லை. இந்த 4 வரி விகிதங்களுடன் 0% மற்றும் தங்க வரி ஆகியவற்றைச் சேர்த்தால் 6 வரி விகிதங்கள் வருகின்றன. மக்களிடையே வருமானத்தில் பெருத்த வேறுபாடுகளும் விநோதமான நுகர்வுப் பழக்கங்களும் நிலவுவதால், ஒரே வரி விகிதம் மட்டும் எதிர்காலத்திலாவது அமைவது நல்லது. அடுத்த வேலை அந்தந்த வரி விகிதத்துக்கு உரிய பொருட்களைப் பட்டியலிடுவதாகும். அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வரிவிதிப்பு அமைவது முக்கியமானது.

வரி விகிதங்கள் தொடர்பாகக்கூடக் கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இனி மேற்கொள்ளப் படவிருக்கும் வரி வசூலிப்பு அதிகாரத்தில்தான் மாநில அரசுகள் விழிப்போடு இருக்க வேண்டும். ரூ.1.5 கோடி விற்று முதல் மதிப்புக்குக் குறைவாக இருப்பவற்றை மாநில அரசுகள் வசம் ஒப்படைத்துவிடலாம் என்ற யோசனை நிலவுகிறது. இவ்வாறு ரூ.1.5 கோடிக்குள் மாநில அரசு, அதற்கும் மேற்பட்ட தொகைக்கு மத்திய அரசு என்ற ஏற்பாட்டைப் பலர் விரும்பவில்லை. குளிர்காலக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக நவம்பர் 24-ல் பொதுச் சரக்கு - சேவை வரிப் பேரவை மீண்டும் கூடுவதற்குள் இதில் இறுதி முடிவு ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். மாநிலங்கள் தம் உரிமைக்கு உறுதியான குரல் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தனக்கு இருக்கும் கூடுதல் கடமையைத் தமிழக அரசும் மறந்துவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x