Published : 03 Jul 2017 09:09 AM
Last Updated : 03 Jul 2017 09:09 AM

புதிய வரிவிதிப்பு முறைக்கு மட்டும் அல்ல; புதிய அரசியல் கலாச்சாரத்துக்கும் இந்தியா தயாராக வேண்டும்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எனும் புதிய மறைமுக வரி அமைப்புக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா. சரக்கு மற்றும் சேவைகள் மீதான மத்திய வரிகள், மாநில வரிகள், உள்ளூர் வரிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாடு முழுவதையும் ஒரே சந்தைக்குள் கொண்டுசெல்வதன் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு, வரி இணக்கத்தையும் உறுதிசெய்யும் நோக்கத்தைக் கொண்டது இந்தப் புதிய வரிவிதிப்பு முறை. மேலும், சரக்குப் போக்குவரத்தில் ஊடுருவியிருக்கும் அரசு இயந்திரத்தின் லஞ்சக் கலாச்சாரத்துக்கும் இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ராஜீவ் காந்தி காலத்தில் தொடங்கப்பட்ட இதற்கான முயற்சி மன்மோகன் சிங் காலத்தில் உருப்பெற்று நரேந்திர மோடியின் காலத்தில் முழு வேகத்தில் முடிந்திருக்கிறது. நோக்கம் என்ற அளவில் நல்விளைவுகளை லட்சியமாகக் கொண்டிருந்தாலும் உண்மையான விளைவுகளை அது செயல்படுத்தப்படும் விதத்திலிருந்தே பெற முடியும்.

‘இது ஒரு வரலாற்றுத் தருணம் பொருளாதாரப் புரட்சி' என்ற தொனியில் அரசுத் தரப்பு பேசிவரும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறை தொடர்பாகப் பொருளாதார நிபுணர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் நடந்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதில் பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது என்றே குறிப்பிட வேண்டும். ஜிஎஸ்டி ஆதரவாளர்கள் பலரும்கூட “ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கான சரியான தருணமாக இது தெரியவில்லை. போதுமான முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை; தினமும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை டிஜிட்டல் வடிவில் பதிவுசெய்ய வேண்டிய ஜிஎஸ்டி வலைப்பின்னலின் மென்பொருள் முன்கூட்டியே போதுமான முறைகள் சோதித்துப் பார்க்கப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஓர் உதாரணம். மேலும், முழுக்கவும் மின்னணு முறைக்கு மாற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான இடைநிலை வணிகர்கள் இன்னமும் அதற்குத் தயாராகவில்லை என்பது மற்றொரு உதாரணம்” என்று சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜிஎஸ்டியின் தொடக்கக் கட்டம் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டதாகவே தெரிகிறது. பல வரிகள் இருப்பது, வரிகள் வகைப்படுத்தப்படுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்புப் பட்டியலில் அத்தியாவசியப் பொருட்களுக்கான, சேவைகளுக்கான வரிவிதிப்பு கூடுதலானதாக இருக்கிறது என்ற குரல் சாமானிய மக்கள் தரப்பிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் முறைசாராப் பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி ஏற்படுத்தவிருக்கும் விளைவுகள் எப்படியானதாக இருக்கும் என்று கவலை தெரிவிக்கும் குரல்களும் புறந்தள்ள முடியாதவை. எனினும், ஜிஎஸ்டி தன்னுடைய ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது - இந்தப் பிரச்சினைகள் அத்தனையும் களையக் கூடியவை என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் குறைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். குறைகளைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்முடைய பிரதான கவலை ஜிஎஸ்டி கொண்டுவந்திருக்கும் தற்காலிகச் சிக்கல்கள் அல்ல; மாறாக, ஜிஎஸ்டி மூலமாக மாநிலங்கள் கையிலிருந்து பெரிய அளவில் பறிபோயிருக்கும் வரிவிதிப்பு அதிகாரம் தொடர்பிலானது. மாநிலங்களின் உரிமைகள் சார்ந்து பெரிய இழப்பு இது.

அதுவும் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் ஏற்படும் இழப்புகளைச் சீர்செய்ய பெரிய அளவிலான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்ட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இனிவரும் காலங்களில் தேசத்தின் வரிகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றக் கூடிய ‘ஜிஎஸ்டி கவுன்சில்’ உண்மையாகவே ஒரு அதிகாரம் மிக்க அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்றால், மாநில முதல்வர்களின் யோசனைகளை பிராந்திய, அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அணுகக்கூடிய மனோபாவத்தை மத்திய அரசு பெற வேண்டும். ‘ஒரே தேசம், ஒரே வரி’ என்ற முழக்கத்திலுள்ள உறுதி ‘ஒரே தேசம், ஒரே மக்கள்’ எனும் மனப்பாங்கிலும் வர வேண்டும். அதேபோல, புதிய சூழலுக்கேற்ப எதிர்காலத்தை வடிவமைக்கப் புதிய திட்டங்களுக்கும் அணுகுமுறைக்கும் தமிழகம் தயாராக வேண்டும். குறிப்பாக, மாநிலங்கள் இடையேயான சுமுக உறவையும் உரையாடலையும் வளர்த்தெடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வெறும் புதிய வணிகக் கலாச்சாரத்தை மட்டும் அல்ல; புதிய அரசியல் கலாச்சாரத்தையும் இந்தியாவிடம் கோருகிறது என்ற உண்மைக்கு இந்திய அரசியல்வாதிகள் முகங்கொடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x