Published : 14 Aug 2015 08:36 AM
Last Updated : 14 Aug 2015 08:36 AM

நல்ல வாய்ப்பு இது!

நடக்கவே நடக்காது என்று நினைத்ததெல்லாம் இப்போது சாதாரணமாக நடக்கிறது. கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி நல்ல செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆறு மாதங்களாக இருந்ததைவிட, இப்போதைய விலை குறைவு என்பது ஒருபுறமிருக்க, மீண்டும் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் நெருக்கத்தில் இல்லை என்பதைச் சர்வதேச நிலவரங்கள் சொல்கின்றன.

ஒருகாலத்தில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை இன்னமும் தொடர்வதால், தொழில்துறை உற்பத்தி அதிகரிக்கவில்லை. அதனால், கச்சா எண்ணெய்க்குத் தேவையும் அதிகரிக்கவில்லை. இத்தகைய சூழலில், பாறை அடுக்குகளுக்குள் இருக்கும் கச்சா பெட்ரோலிய எண்ணெயை வெளியே எடுக்கும் நவீன தொழில்நுட்பம் காரணமாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. எனவே, எண்ணெய் சந்தையில் அமெரிக்கா வாங்குவது கணிசமாகக் குறைந்திருக்கிறது. இன்னொருபுறம், தன்னுடைய அணு நிலையங்களைச் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுக்குத் திறந்துவிட ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. விளைவாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலகுகின்றன. நீண்ட காலமாக, வருவாய்ப் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டிருக்கும் ஈரான், தனது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எண்ணெய் ஏற்றுமதியைப் பெருமளவில் அதிகரிக்கவிருக்கிறது. மற்றொருபுறம், சவூதி அரேபியா தன்னுடைய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் திறனைப் பல மடங்கு பெருக்கியிருக்கிறது.

சமீபத்திய வரலாற்றில் இருந்திராத வகையில், ‘ஒபெக்’ நாடுகள் அமைப்பு உற்பத்திசெய்யும் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் அளவு உச்சபட்சத்தைத் தொட்டிருக்கிறது. ஆக, எண்ணெய் விலை சரிகிறது; மேலும் சரிந்தாலும் ஆச்சரியமில்லை.

எண்ணெய் விலையின் வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தில் தாறு மாறான விளைவுகளை உருவாக்குகிறது. தொழில் வளம் குறைந்து, விலைவாசி உயர்வை எதிர்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஏற்றம் பெறும். கச்சா எண்ணெயின் விலை 10% அளவுக்குக் குறைந்தால், ஐரோப்பியப் பொருளாதாரம் 0.1% அளவுக்கு அதிகரிக்கும் என்பது ஒரு மதிப்பீடு. அங்கே அப்படி. அதேசமயம், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இது கசப்பான செய்தி. அதிலும் ரஷ்யா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை ஒவ்வொரு டாலராகக் குறையக் குறைய, ரஷ்யாவுக்கான எண்ணெய் வருவாய் மட்டும் 200 கோடி டாலர் மதிப்புக்குக் குறைந்துகொண்டே வருகிறது. எண்ணெய் விலை இப்படியே குறைந்துகொண்டிருந்தால், ரஷ்யப் பொருளாதார வளர்ச்சி 0.7% அளவுக்குச் சுருங்கிவிடும் என்று உலக வங்கி எச்சரித்திருக்கிறது.

இந்தியாவுக்கு இது நல்ல காலம். தன் எண்ணெய்த் தேவையில் 75%-க்கு இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாட்டுக்கு இது எவ்வளவு பெரிய அனுகூலம் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. எண்ணெய் விலை குறைவதால் வெளிவர்த்தகப் பற்றுவரவில் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும். அத்துடன் அரசின் பெட்ரோலிய மானியச் சுமையும் குறையும். ஆக, பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த இது நல்ல வாய்ப்பு.

சர்வதேச விலைக்கேற்ப ஜூலையில் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைத்தது. மக்கள் அதை எதிர்பார்க்கவில்லை. மாறாக, சீர்திருத்தத்தை எதிர்பார்க்கின்றனர். மொபெட்டுகளுக்கும் சொகுசு கார்களுக்கும் ஒரே விலை எரிபொருள் அநியாயம். பொதுப் போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில், தனி நபர் போக்குவரத்துக்கான பெட்ரோல் நுகர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் சீர்திருத்தத்தை அரசு மேற்கொள்ள சரியான தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x