Published : 29 Nov 2014 08:54 AM
Last Updated : 29 Nov 2014 08:54 AM

குழந்தைகள் எனும் குறியீடு!

குழந்தைகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை தந்து அவற்றைக் காக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இயற்றி 25 ஆண்டுகளாகி விட்டன. அந்த நோக்கத்தில் சர்வதேச சமூகம் வெற்றி கண்டுவிட்டதா? யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 1990-2013 காலத்தில் 50% குறைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறது. அதே வேளையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை 1990-ல் 13% ஆக இருந்தது 2014-ல் 19% ஆகி விட்டது என்கிறது. குழந்தைகளின் நலனுக்காக நிதி உதவி செய்யும் நாடுகள் தங்களுடைய பங்களிப்பைக் குறைத்துவிட்டதால் குழந்தைகள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது என்றும் யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமைகள் எப்படி? மத்திய, மாநில அரசுகள் இயற்றிய சட்டங்கள் எந்த அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றன அல்லது காற்றில் பறக்க விடப்படுகின்றன? கால் நூற்றாண்டுக்கு முன்பைவிட சிசு மரணங்கள் குறைந்துள்ளன. குழந்தைகளின் உயிரிழப்பு குறைக்கப் பட்டிருக்கிறது. எழுத, படிக்கக் கற்றவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவையெல்லாம் பரவாயில்லை என்று நாம் ஆறுதல் அடைந்துகொள்ள உதவும் விஷயங்கள். ஆனால், இந்தக் கால் நூற்றாண்டில் நம் எல்லோருடைய கவனத்துக்கும் அப்பாற்பட்டு, வெட்டவெளியில் வீதிகளில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகமயமாக்கலின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள தாராளமய, தனியார்மயக் கொள்கைகளால் லட்சக்கணக்கான கிராம வாசிகள், பழங்குடியினர் தங்களுடைய வசிப்பிடங்களைவிட்டு வேலை தேடியும், பசியாறவும் தங்களுக்கு அறிமுகமே இல்லாத இடங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர், குழந்தைகளுடன். உலகில் உள்ள வளரும் நாடுகளில், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், அவற்றில் 35% இந்தியாவில்தான் இருக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவால் உள்ள உலகக் குழந்தைகளின் எண்ணிக்கையில் 40% இந்தியாவில்தான் உள்ளன. பள்ளியில் சேரும் 70% குழந்தைகள் பள்ளியிறுதி வகுப்புக்கு முன்னதாகவே படிப்பை நிறுத்திவிடுகின்றனர். படிப்பை நிறுத்தும் 66% குழந்தைகள் பெண்களாகவே இருக்கின்றனர். உலகிலேயே சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் முதலிடம் இந்தியாவுக்குத்தான்.

இந்த அவல நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல; சமூகத்தின் அலட்சியமும் முக்கியக் காரணம். வீட்டைவிட்டு இறங்கினால், எங்கு வேண்டுமாலும் குழந்தைத் தொழிலாளர்களைக் காணலாம் என்கிற அளவுக்குக் குழந்தைத் தொழிலாளர் முறை வீரியமாக இருப்பதைக்கூடக் கண்டும் காணாமல் அனுமதிக்கிறோமே நாம்? அதைத் தடுக்கக்கூடச் சின்ன அளவில் நம்மால் எதையும் செய்ய முடியவில்லையே, என்ன காரணம்? அடிப்படையில் நமக்கே அக்கறை இல்லை என்பதுதானே காரணம்? அது உறைக்கத் தொடங்கினால், இந்த வயதில் ஒரு குழந்தை ஏன் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு, கடைக்கு வர நேர்கிறது; அதன் குடும்ப வறுமைக்கு என்ன காரணம், அரசால் ஏன் இவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வைக் காண முடியவில்லை; எந்தக் கொள்கைகள் இவர்களை இந்த நிலையிலேயே வைத்திருக்கின்றன என்கிற ஏனைய விஷயங்கள் யாவும் உறைக்கும். இதற்கெல்லாம் நாமும் ஒருவகையில் காரணம் என்பதும் புரியும்.

ஒரு நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குச் சரியான குறியீடு அந்நாட்டிலுள்ள குழந்தைகளின் நிலை. குழந்தைகளை வீதியில் நிற்கவிடும் ஒரு நாடும் சமூகமும் ஒருபோதும் பெருமை பேச முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x