Published : 31 Jan 2017 10:21 AM
Last Updated : 31 Jan 2017 10:21 AM

ஆம் ஆத்மி கட்சியின் கனவு பலிக்குமா?

ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாபில்தான் ஆம் ஆத்மி கட்சி மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 2013-ல் வெற்றி பெற்றிருந்தாலும், மத்திய ஆட்சிக்கு உட்பட்ட அந்த நேரடிப் பிரதேசத்தை ஆளுவதல்ல அர்விந்த் கேஜ்ரிவாலின் நோக்கம் என்பதை அடுத்து வந்த மக்களவைப் பொதுத் தேர்தல் காட்டியது. டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் - பாஜக ஆகியவற்றுக்கு மாற்றுக் கட்சியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டது. அது அடுத்தகட்டத்தை நோக்கி நகர ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. அதற்கான வாய்ப்பாகவே பஞ்சாபை அது பார்க்கிறது.

முன்னதாக, மக்களவைப் பொதுத் தேர்தலிலேயே தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார் அர்விந்த் கேஜ்ரிவால். நாடு முழுக்கக் கட்சியை நிறுத்திய அவருடைய எதிர்பார்ப்பு அப்போது பொய்த்துப்போனது. பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு தொகுதிகள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாகவே இப்போது சிரோமணி அகாலி தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மீது அதிருப்தி அடைந்துள்ள பஞ்சாபிகள், தங்களுடைய கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி இப்போது கவனம் செலுத்திவருகிறது.

‘ஒவ்வொரு தொகுதியிலும் அர்விந்த் கேஜ்ரிவாலே வேட்பாளராகப் போட்டியிடுவதாகக் கருதி வாக்களியுங்கள்’ என்று டெல்லி மாநிலத் துணை முதல்வர் சிசோடியா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பஞ்சாப் முதலமைச்சராகிவிட வேண்டும் என்ற ஆசை கேஜ்ரிவாலுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டபோது, இல்லையென்று பதில் அளித்திருக்கிறது அக்கட்சி. அதேசமயம், மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ஒரு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாமலும் அது தவிக்கிறது. பிரச்சாரத்தில், பஞ்சாப் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, போதை மருந்துகளை விற்பனை செய்யும் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை குறித்துப் பேசும் அக்கட்சி, கூடவே காங்கிரஸ் மீண்டும் அங்கு ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக 1984 சீக்கியர் படுகொலைகளையும் நினைவுகூர்கிறது.

பாஜக, காங்கிரஸுக்கு மாற்று என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ள அர்விந்த் கேஜ்ரிவால் நினைக்கிறார் என்றாலும், டெல்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய சாதனைகள் என்று எதையும் அவர் செய்யவில்லை என்பதுதான் பெரிய பிரச்சினை. டெல்லியில் முதல்வருக்கான அதிகாரம் குறைவு, பாஜகவின் குடைச்சல் போன்ற சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், பேசும் அளவுக்குக் காரியங்கள் நடக்கவில்லை என்பதும் உண்மை. இப்படிப்பட்ட சூழலில், பஞ்சாப் என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதே ஆம் ஆத்மி கட்சி வெறும் டெல்லி கட்சியா, அகில இந்தியாவுக்குமான கட்சியா என்பதைத் தீர்மானிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x