Published : 31 May 2016 09:49 AM
Last Updated : 31 May 2016 09:49 AM

அரசு நில விற்பனையில் கவனம் தேவை

மத்திய அரசுக்கும் அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமாக, அதே சமயத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை அடையாளம் கண்டு, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கோ, தனியார் துறைக்கோ விற்பது என்று மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசுத் துறை நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள தனிப்பட்ட சொத்துகளை விற்று, புதிய திட்டங்களின் முதலீட்டுக்கு அந்த வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய வரவு-செலவு அறிக்கையில் கூறப்பட்டதையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கருதலாம். இதையடுத்து, அரசிடமும் அரசுத் துறை நிறுவனங்களிடமும் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களின் அளவு, பரப்பு, இடங்கள் போன்றவற்றை அடையாளம் காண ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

அரசுத் துறைக்குச் சொந்தமான எதையும் ஒட்டுமொத்தமாகத் தனியார் வசம் கையளிக்க, நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்குக் கிடைத்த எதிர்ப்பால் மோடி அரசு தயங்குகிறது. அரசின் இயற்கை வளங்களைப் பகிர்ந்து வழங்குவதில் அரசு அதிகாரிகளின் விருப்ப அதிகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வெளிப்படையாக நடந்துகொள்ளவும் ஒரு குழுவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. மத்திய அரசின் நிலங்கள் எவ்வளவு என்பதைத் தெரிவித்ததுடன், அவற்றில் எத்தனை மற்றவர்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றன என்றும் அறிக்கை அளித்தது. அதில், பாதுகாப்பு (ராணுவ) துறைக்குச் சொந்தமான 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 11,000 ஏக்கர் நிலம் மற்றவர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் நிலங்களைச் செயற்கைக்கோள் உதவியுடன் அடையாளம் கண்டு வரைபடம் தயாரித்தால், அதில் அரசிடம் இருக்கும் நிலங்களும் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களும் தெரிந்துவிடும் என்று அந்தக் குழு பரிந்துரைத்திருந்தது. நிலத்தைக் குத்தகைக்குக் கொடுக்காமல் அப்படியே விற்றுவிட வேண்டும் என்றும், மின் ஏலம் மூலம் அதை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்திருந்தது. நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் திருத்துவது என்று அரசு மேற்கொண்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தின் ஒரு சிறு பகுதிதான் இந்தப் பரிந்துரைகள். விவசாய நிலங்களை குடிவாரதாரர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க நீதி ஆயோக் தயாரித்த குடிவாரதாரர் மாதிரிச் சட்டமும், மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேங்கியிருக்கிறது.

ஒரு துறையிடம் அல்லது நிறுவனத்திடம் பயன்படாமல் இருக்கும் நிலம் இன்னொரு துறைக்கோ, நிறுவனத்துக்கோ தேவைப்படும்போது கொடுத்து வாங்கிக்கொள்வதால் இரட்டிப்புப் பலன் உண்டு. நிலத்துக்கான விற்பனை மதிப்பை நிர்ணயிப்பதில்தான் இதில் பிரச்சினை ஏற்படுகிறது. அரசு நிர்ணயிக்கும் விலையை அரசியல் கட்சித் தலைவர்களும், தணிக்கை அதிகாரிகளும் உற்றுக் கவனிக்கிறார்கள். அரசு நிலத்தை விற்பதிலும், ஏலத்தில் விடுவதிலும் ஏற்படும் தாமதம் இன்னொரு பிரச்சினை. விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடெட் (வி.எஸ்.என்.எல்.) என்ற அரசு நிறுவனத்தின் ஒரு பகுதியை டாடா குழுமத் தொழில் நிறுவனம் 2002-ல் வாங்கியது. ஆனால், அரசு தன்னுடைய உபரி நிலத்துக்கு மதிப்பு போடுவதற்குக் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தன. எனவே, அரசின் உபரி நிலங்களை விற்பது, ஏலம் விடுவதில் அரசு கவனத்துடன் நடந்துகொள்வது முக்கியம். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த அரசு மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதே இந்த அனுபவங்கள் சொல்லித்தரும் பாடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x