Last Updated : 12 Jul, 2019 09:30 AM

 

Published : 12 Jul 2019 09:30 AM
Last Updated : 12 Jul 2019 09:30 AM

கலங்கடித்த மூன்று ஒன்றுகள்

மழைப்பொழிவால் ஆட்டம் நடக்காமல் நின்றுபோனால் இந்தியா இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும், இருபது ஓவர்களுக்குள் மழை வந்து ஆட்டம் ரத்தாகிவிட்டால் கோப்பையைப் பறித்துவிடலாம், தோனி ரன்அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்; எல்லா வேண்டுதல்களும் பகல் கனவுகளும் பொய்த்துவிட்டன. நியூஸிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தில் போராடித் தோற்றுவிட்டோம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக்கோப்பை எதிர்வரும் ஞாயிறோடு முடிகிறது என்றால், இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை உலகக்கோப்பை முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இதோ, ஞாயிறு அன்று எழுத நினைத்திருந்த கட்டுரையை இன்றே எழுதும்படி ஆகிவிட்டது.

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைமுறைக்கு வந்த பிறகாகவும், ஐபிஎல் போட்டிகளெல்லாம் வெறும் கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டதாலும், மிகப் பெரும் வியாபாரச் சந்தையாக கிரிக்கெட் உருமாறியிருப்பதாலும் இந்தப் பரிணாம வளர்ச்சியில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். அதற்காக மைதானத்தின் அமைப்பே பெருமளவில் மாறியது. எல்லைகளின் தூரம் குறைக்கப்பட்டது, சமதளமாக இருந்த மைதானம் சற்று சாய்வாகியது (ஒருகாலத்தில், மூன்று ரன்கள் எடுப்பதெல்லாம் அடிக்கடி நிகழும் சம்பவம். இப்போதோ டெஸ்ட் போட்டிகளில்கூட மூன்று ரன்களைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது), மிகக் கடுமையாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது (முன்பு, பந்து வீசும் அந்தக் கண நேரத்தின் நுட்பமான அணுகுமுறையில்தான் பேட்ஸ்மேனின் சாமர்த்தியம் இருந்தது. இப்போது பந்து எப்படி வீசப்படுகிறதோ அது ஒவ்வொன்றுக்கும் ஏற்றாற்போன்ற ஷாட்டை ரோபோபோல விளையாடப் பழகிவிட்டார்கள்).

ஒரு மனிதரால் வீசவே முடியாத வேகத்துக்கு  எல்லாம் பந்துகளை இயந்திரங்கள் மூலமாக வீச வைத்துக் கடுமையாகப் பயிற்சி எடுக்கும் காலம் இது. வித்தியாசமான கை அசைவுகளால் பந்து வீசும் மலிங்கா போன்றவர்களை எதிர்கொள்வதற்காகவே தனிப் பயிற்சிகளெல்லாம் உண்டு. பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் கிரிக்கெட்டை எதிர்கொள்ள ஒரு பந்து வீச்சாளருக்கு சிறப்புத் தகுதிகளெல்லாம் இப்போது அவசியம் வேண்டும்.

நீங்கள் 150 கிமீ வேகத்தில் பந்து வீசினால் மட்டும் போதாது; அப்படி வீசிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு பந்தை 110 கிமீ வேகத்துக்கு வீச வேண்டும் – இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் மெதுவாக வீசப்போகிறீர்கள் என்பது பேட்ஸ்மேனுக்குத் தெரிந்துவிடக் கூடாது. நீங்கள் சுழற்பந்து வீச்சாளராக இருந்தால், ஆஃப் ஸ்பின்னோ லெக் ஸ்பின்னோ தெரிந்தால் மட்டும் போதாது; இரண்டும் தெரிந்திருக்க வேண்டும். கூடவே கூக்லி, கேரம் என இன்னும் இன்னும் சரக்குகள் இருந்தால் பந்து வீச்சாளருக்கான ஆயுள் அதிகம். ஆக, ஒரு பந்து வீச்சாளராக இருப்பது போக ஒரு வித்தைக்காரராகவும் இருக்க வேண்டியிருக்கிறது.

ஒருவகையில், இந்தப் பரிணாம வளர்ச்சியால்தான் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியாவை அதன் ஆதிக்கத்திலிருந்து வீழ்த்துவது சாத்தியமானது எனலாம். நடுத்தர அணிகளிலிருந்து இந்தியா முதல் வரிசைக்கு முன்னேறி தொடர்ந்து அதைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததும், பங்களாதேஷ் போன்ற கடைசி வரிசை அணிகளெல்லாம் நடுத்தர இடத்துக்கு நகர்ந்ததும் முதல் தர அணிகளை வீழ்த்த முடிவதும் இதனால்தான் எனலாம். அதனால்தான், இந்த உலகக்கோப்பையின் எல்லா போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தோற்றிருந்தாலும்கூடப் பெரும்பாலான ஆட்டங்கள் அவர்களுக்குக் கௌரவமான தோல்வியாக இருந்தது. சிறப்பான அணியான தென்னாப்பிரிக்காவை விட ஆப்கானிஸ்தானுக்கு இது நல்ல தொடர்தான். இதெல்லாம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட சாத்தியமில்லாதது.

இந்தப் பின்னணியில்தான் நம்மால் இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சின் மகத்துவத்தை ரசிக்க முடிகிறது. இந்தியா-நியூஸிலாந்து அரையிறுதிப் போட்டியிலும் பந்து வீச்சாளர்களே றெக்கை கட்டிப் பறந்தார்கள். நியூஸிலாந்து டாஸ் வென்று தடுமாற்றத்தோடே ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் 3.3 ஓவர்களில் வெறும் 1 ரன்தான் எடுத்திருந்தது. ஒரு விக்கெட்டையும் பறிகொடுத்திருந்தது. 19-வது ஓவரிலிருந்து 27-வது ஓவர் வரை கேப்டன் வில்லியம்சனாலும் டெய்லராலும் வெறும் 20 ரன்களே எடுக்க முடிந்தது. 15-வது ஓவருக்குப் பிறகு 28-வது ஓவரில்தான் நியூஸிலாந்தால் பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்ப முடிந்தது.

அதேபோல, இந்திய அணியில் இந்த உலகக்கோப்பை முழுவதுமே பட்டையைக் கிளப்பிய முதல் மூன்று பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி மூவரும் நியூஸிலாந்தின் அபாரமான பந்து வீச்சுக்கு இறையானார்கள்.  எட்டு ஆட்டங்களில் ஐந்து நூறுகள் அடித்து, உலக சாதனை படைத்த ரோஹித் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். தன் வழக்கத்துக்கு மாறாக இந்தத் தொடர் முழுவதும் மிக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான இந்திய அணியின் கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், பந்த் இருவரையும் நம்ப முடியாது. பாண்டியாவோ தோனியோ ஏதாவது மாயம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆரம்பம் முதலே நியூஸிலாந்தின் பக்கம்தான் காற்று வீசியது. எப்படியேனும் அதிசயம் நேரும் சாத்தியம் இருப்பதுதான் கிரிக்கெட்டின் மகத்துவம். தோனியும் - ஜடேஜாவும் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்கள். 37-வது ஓவரிலிருந்து விளையாட்டு சூடுபிடிக்கத் தொடங்கியது. தோனி ஒரு ஒரு ரன்னாக ஓடி ஜடேஜாவுக்கு ஸ்டிரைக் கொடுத்துக்கொண்டிருக்க, ஜடேஜாவோ ஓவருக்கு ஒரு பந்தையாவது எல்லைக்கோட்டுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். ஈயாடிக்கொண்டிருந்த இந்திய ரசிகர்களின் முகங்களில் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

ஆனால், அது வெற்றிக் கொண்டாட்டத்தில் முடியவில்லை. ஒரு ரன் எடுக்கும் உத்தியை 45-வது ஓவருக்குப் பிறகு தோனி மாற்றியிருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருந்திருக்கக்கூடும். ஜடேஜா ஆட்டமிழப்பதற்கு முந்தைய ஹென்றியின் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் சாத்தியப்பட்டிருந்தால் ஆட்டம் மாறியிருந்திருக்கக்கூடும்.

49-வது ஓவரை பெர்குஸனுக்குப் பதிலாக நீஸம் வீசியிருந்தால் ஆட்டம் மாறியிருந்திருக்கக்கூடும். இருந்தாலும், வெற்றி தோல்வியில் என்ன இருக்கிறது? கடைசி வரை போராடியதுதான் இந்திய அணிக்கு விருது; மொத்தத்தில், இந்திய ரசிகர்களுக்கு இந்தத் தொடர் முழுதுமே திருப்தியான விருந்து!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x