Published : 06 Jun 2019 09:00 AM
Last Updated : 06 Jun 2019 09:00 AM

தியானன்மென் சதுக்கத்தில் கரைந்த ஜனநாயகக் கனவு!

யாங்ஸி ஆற்றின் நீராவிப் படகில் இருந்த சிகை திருத்தும் கூடத்தில் முடிவெட்டிக்கொண்டிருந்தபோது ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு வெளியானது: “தலைநகர் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் கலகங்களைத் தூண்டிவிட்டதாக 21 மாணவர்களைக் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் இதோ.” அதில் எனது பெயர்தான் முதலில் இருந்தது.

அது 1989 ஜூன் மாதம். ஜனநாயக உரிமைகள் கோரி பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஏழாவது வாரத்தில், ராணுவ டாங்கிகளையும் கவச வாகனங்களையும் அனுப்பி கொடூரமாக அப்போராட்டத்தை ஒடுக்கியது அரசு. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவனான நான், அதிகாரிகளின் கைகளில் சிக்காமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தேன். பெய்ஜிங்கின் பயங்கரம் இந்த ஊர் வரை விரைவாகப் பரவும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

போராட்டம் தொடங்கிய பின்னணி

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் ஹூ யாவோபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 1989 ஏப்ரல் 17-ல் ஒன்றுகூடினோம். “மேற்கத்திய நாடுகளின் பாணியில் சீனத்திலும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்” என்று சொன்னதற்காகத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் யாவோபாங்.

அஞ்சலிக் கூட்டத்தில், நாட்டின் பிரச்சினைகளைப் பேசத் தொடங்கியதும் எனக்குள் இருந்த சுயகட்டுப்பாடுகள் தளர்ந்துவிட்டன. சீன அரசின் ஊழல்களைக் கண்டித்தும், ஜனநாயக சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தவும் பல்கலைக்கழகத்திலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள தியானன்மென் சதுக்கத்துக்கு ஊர்வலமாகச் செல்வோம் என்றேன்.

அன்றிரவே பல்கலைக்கழக வளாகத்தை விட்டு நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறி தியானன்மென் சதுக்கத்தில் போய் அமர்ந்துகொண்டோம். வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் மாணவர்கள் பெருந்திரளாக வந்து சேர்ந்தனர். சமூகத்தின் வெவ்வேறு தரப்பிலிருந்து பலரும் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். பெய்ஜிங்கில் மூண்ட இப்போராட்டம் மெல்ல மெல்ல சீன நகரங்கள் முழுவதும் பரவியது.

அங்கே முகாமிட்டிருந்தபோது ‘பெய்ஜிங் மாணவர்கள் சுயேச்சைக் கூட்டமைப்பு’ தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அக்கூட்டமைப்பு ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுடன் பேச முயன்றது. எங்கள் போராட்டம் கம்யூனிஸ்ட் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என்று அஞ்சியதால், ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அறிவித்தார்கள். தலைநகர் சுற்றிவளைக்கப்பட்டது.

சதுக்கத்திலிருந்து வெளியேறிவிடுவோம் என்றேன். பிற மாணவர் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். அன்றிரவு ஓய்வு எடுப்பதற்காகப் பல்கலைக்கழகம் சென்றேன். அன்று பின்னிரவில் மாணவர்கள் மீது துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். கம்யூனிஸ்ட் கட்சி தன்னைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் போராடினோமே தவிர, அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அல்ல; ராணுவ வன்முறை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது. பிறகு, நான் தலைமறைவானேன். என் போராட்ட சகாக்கள் ஒருவர் பின் ஒருவராகப் பிடிபட்டு கைதுசெய்யப்பட்டார்கள். என்னையும் கைதுசெய்வார்கள் என்று தெரிந்தும் பெய்ஜிங் செல்ல முடிவெடுத்தேன். ஜூலை 2 அன்று நான் காரில் போகும்போது காவல் துறையினர் என்னை அடையாளம் கண்டு விரட்டிவந்து பிடித்தனர்.

மேலும் விரிவடைந்த ஜனநாயகக் கனவு

43 மாதங்கள் சிறையில் கழித்தேன். 1993-ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சீனா முதல் முறையாக விருப்பம் தெரிவித்தது. அச்சமயத்தில் நான் விடுவிக்கப்பட்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கைதுசெய்யப்பட்டேன். 11 ஆண்டுகள் சிறைவாசம். அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சீன வருகையையொட்டி 1998-ல் மீண்டும் விடுதலை. அதன் பிறகு அமெரிக்காவுக்கே வந்துவிட்டேன். இனி நாடு திரும்ப முடியாதபடி என் தாய்நாடு எனக்குத் தடை விதித்துவிட்டது.

30 ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயக உரிமைகளுக்காக நாங்கள் நடத்திய போராட்டம் தோல்வி அடைந்ததற்கு மக்களிடமிருந்து முழு அளவிலான ஆதரவு எங்களுக்குக் கிடைக்காததுதான் காரணம். ஜனநாயக மாற்றங்களை எப்படிக் கொண்டுவரப் பாடுபட வேண்டும் என்ற புரிதலும் எங்களுக்கு இல்லாமல் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தாராள உணர்வாளர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்று கட்சிக்குள் சீர்திருத்தங்களைத் தொடங்குவார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்களின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்.

தியானன்மென் சதுக்கப் படுகொலைகள் நடந்த சில ஆண்டுகளுக்குள் எல்லா மேற்கத்திய நாடுகளும் விதித்திருந்த தடைகளை விலக்கிக்கொண்டு சீன அரசுடன் சுமுக உறவுகொள்ள ஆரம்பித்தன. வர்த்தகமும் முதலீடும் அதிகரித்தால் சீனா தனது சர்வாதிகாரத் தன்மையைக் குறைத்துக்கொள்ளும் என்று அவை நம்பின. ஆனால், இந்த முதலீடுகள் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பாக்கெட்டுகளை நிரப்பின; அதிருப்தியாளர்களின் குரல்களை ஒடுக்கவும், நாட்டின் வெளியுறவு செல்வாக்கை வலுப்படுத்தவும் உதவின.

சீனாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட விருப்பம் நிறைவேறாத கனவாகவே இன்றுவரை நீடிக்கிறது. ஆனால், அந்த விருப்பம் மேலும் வலுவடைந்திருக்கிறது. தியானன்மென் படுகொலைச் சம்பவம் பற்றி சிறு குறிப்புகூட இல்லாமல் வரலாற்றுப் புத்தகங்களை எழுதியிருக்கிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. சமூக ஊடகங்களில் அதைப் பேசுவதற்குக்கூட அனுமதி இல்லை.

இப்போதைய தலைமுறை தெளிவாக இருக்கிறது. அரசு எப்படி மூளைச்சலவை செய்தாலும் அதில் மயங்கிவிடுவதில்லை. மேற்கத்திய நாடுகளைப் பற்றி எங்களைவிட அவர்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத்தரும் என எங்களுக்குத் தவறான நம்பிக்கைகள் இருந்தன. இப்போதைய இளைஞர்கள் யதார்த்தவாதிகளாக இருக்கிறார்கள். வாய்ப்புகள் வாய்க்கும்போது, அரசுக்கு எதிராக அவர்களும் கிளர்ந்தெழுவார்கள்.

ட்ரம்ப்பிடம் ஒரு வேண்டுகோள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்போது வர்த்தகப் போர் மூண்டுள்ளது. சீனாவில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள இது நல்ல வாய்ப்பு.

1990-களில் ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ என்ற அந்தஸ்து வேண்டும் என்று சீனா கோரியபோது, மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டப்படி எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளை அமெரிக்கா வலியுறுத்தியது. அரசியல் நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய சீன அரசு, என் போன்ற அதிருப்தியாளர்களைச் சிறையிலிருந்து விடுவித்தது.

வர்த்தகம் வேறு, மனித உரிமை விவகாரம் வேறு என்றான பிறகு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இப்போது அதிருப்தியாளர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தேசியத் தொலைக்காட்சிகளில் ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் அரசியல் கருத்துகள் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகின்றன.

சீனாவுக்கு எதிராக எடுத்துள்ள ட்ரம்ப்பின் கடுமையான முடிவுகள், நாளை என்னவாகுமோ தெரியாது; இன்றைக்கு அது பலனளிக்கிறது. மக்களை உளவுபார்க்கவும் கட்டுப்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று சீனாவிடம் அமெரிக்கா கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் மிகச் சிறிய காலமே நடந்த ஓர் இயக்கம் என்னைப் பெரிய மனிதனாக்கிவிட்டது. எப்போதும் வரலாற்றுப் புத்தக வாசகனாகவும் கூச்ச சுபாவம் உள்ளவனாகவும் இருந்த என்னைப் பல லட்சம் போராட்டக்காரர்களுக்குத் தலைமை தாங்கும் இடத்துக்குக் கொண்டுசென்றது. இதற்காக நான் அதிக விலை கொடுத்திருக்கிறேன். இளமையில் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்ததுடன், நோயில் விழுந்துவிட்ட பெற்றோரைப் பார்க்க தாய்நாட்டுக்குத் திரும்ப முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறேன். இதில் வலி அதிகம் என்றாலும், ஜனநாயகத்துக்காகப் போராடியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்!

- வாங் டேன்

© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x