Last Updated : 21 May, 2019 08:27 AM

 

Published : 21 May 2019 08:27 AM
Last Updated : 21 May 2019 08:27 AM

தேர்தல் பணியாற்றியவர்கள் என்ன கணிக்கிறார்கள்?

இந்திய மக்களவைத் தேர்தல் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், ஏராளமான கருத்துக்கணிப்புகள் கடந்த இரு நாட்களாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டீக்கடை முதற்கொண்டு எல்லா இடங்களிலும் யார் எவ்வளவு வெல்வார் என்பதுதான் பேச்சு. ஆளுக்கொரு கணக்கு, ஆளுக்கொரு கருத்து. அரசியல்வாதிகள் யாரிடம் கேட்டாலும், பொதுவாக வாக்குப்பதிவுக்கு முன் அவரவர் கட்சிகள், கூட்டணிகள் முழுத் தொகுதிகளை வெல்லும் என்று சொல்வது வழக்கம்.

‘சரி, வாக்குப்பதிவு முடிந்துவிட்டது; இந்த நிலையில் உங்கள் கணிப்பு இப்போது என்ன?’ என்று கட்சிக்கு ஒருவர் என்று தேர்தல் பணியாற்றியோரிடம் கேட்டுப் பார்க்க முடிவெடுத்தோம். “இது எங்கள் கட்சியின் கருத்து கிடையாது; என்னுடைய தனிப்பட்ட கணிப்பு அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு, வரிசையாக ஆளுக்கொரு கணக்குச் சொன்னார்கள். கணிப்புகளைப் பார்ப்போமா?

கூட்டணி ஆட்சி கூட்டாட்சிக்கு வித்திடும்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக.

யார் எவ்வளவு பெறுவார்கள்?

தேசிய அளவில், பாஜக அணி 160 வரை, காங்கிரஸ் அணி 200 வரை, மாநிலக் கட்சிகள் 185 வரை வெல்லும். தமிழக அளவில், திமுக அணி 38 வரை; அதிமுக அணி 3 வரை வெல்லும். சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக 20, அதிமுக 2 வெல்லும்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

மக்கள் மத்தியில் ஆளுங்கட்சியான அதிமுக மீது கடுமையான அதிருப்தியும், கோபமும் தெரிந்தது. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அணி அமோக வெற்றியைப் பெறும். பல்வேறு மாநிலங்களும், தேசிய இனங்களும் கொண்டது இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலவுணர்வு இன்று  அதிகரித்துவருகிறது. அகில இந்தியக் கட்சிகள் அந்தந்த மாநில நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்ற எண்ணமும் வலுப்பெற்றுவருகிறது. ஆகையால், மாநிலக் கட்சிகள் செல்வாக்குப் பெற்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற சூழலை நோக்கி இந்தியா காலடியெடுத்துவைக்க இத்தேர்தல் வழிவகுக்கும்.

தினகரன், சீமான், கமல்ஹாசன்?

தினகரன் நிற்பார். மற்ற இருவரும் சொல்லிக்கொள்ளும்படி நீண்ட தாக்கத்தை உண்டாக்க மாட்டார்கள்.

பாஜக ஆட்சி அமைக்கும்

கிறிஸ்டோபர், காங்கிரஸ்.

யார் எவ்வளவு பெறுவார்கள்?

தேசிய அளவில் பாஜக 220 வரை; காங்கிரஸ் 110 வரை; மாநிலக் கட்சிகள் 165 வரை வெல்லும். பாஜகவே ஆட்சி அமைக்கும் சாத்தியம் அதிகம். தமிழக அளவில், அதிமுக அணி 8; திமுக அணி 30 இடங்களில் வெல்லும். இடைத்தேர்தல் நிலவரத்தில் எனக்குத் துல்லியம் இல்லை.

எப்படிச் சொல்கிறீர்கள்?

இந்திப் படுகை முழுவதும் சுற்றியவன் நான். இந்தி மாநிலங்களில் பாஜக பலமாக இருக்கிறது. நாடு முழுக்க பாஜகவுக்கு எதிர்ப்பு இருந்தாலும், இந்தி மாநிலங்களில் ‘மோடிக்கு ஏன் இன்னொரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது?’ என்று நிறையப் பேர் பேசியதை நானே காதுபடக் கேட்டேன். உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, மத்திய பிரதேசம்; தவிர மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் பாஜகவுக்குத் தூக்கிக்கொடுக்கும். ஏனைய மாநிலங்களில் பெரிய அடி விழும். தமிழ்நாட்டில் ‘சமூக நீதிக்கு எதிரான சனாதன இயக்கம் பாஜக’ என்ற உணர்வு நன்றாக வேரூன்றியிருக்கிறது. ஆனால், ஏனைய மாநிலங்களில் அந்த விழிப்புணர்வு இல்லை. மகாராஷ்ரத்திலேயே அம்பேத்கரின் தாக்கம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது வருத்தமான உண்மை. காங்கிரஸ் தன்னுடைய பழைய தோல்வியிலிருந்து மீண்டு எழும். வாக்குவிகிதத்தில் பெரிய வளர்ச்சி இருக்கும் என்றாலும், அவை தொகுதிகளாக மாறும் என்ற நம்பிக்கை பல இடங்களில் இல்லை. நான் தேர்தல் பணியாற்றிய ஆந்திரத்திலேயே காங்கிரஸ் ஒரு தொகுதிகூடப் பெறாது என்பதை வருத்தத்தோடு சொல்ல வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் மீண்டும் நாட்டின் மையத்துக்கு வர இந்தத் தேர்தல் வழிவகுக்கும்.

தினகரன், சீமான், கமல்ஹாசன்?

கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள்; நீண்ட தாக்கத்தை உண்டாக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்

கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி.

யார் எவ்வளவு பெறுவார்கள்?

தேசிய அளவில், பாஜக 160 வரை; காங்கிரஸ் 110 வரை; மாநிலக் கட்சிகள் 275 வரை வெல்லும். தமிழக அளவில், அதிமுக அணி 4; திமுக அணி 34 இடங்களில் வெல்லும். இடைத்தேர்தலில், அதிமுக 3, திமுக 19 வெல்லும்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 2014-ல் பாஜக வென்றதற்குக் காரணம், ‘குஜராத்தில் வளர்ச்சியைக் கொண்டுவந்தவர் மோடி, அவர் வந்தால் பரவாயில்லை’ என்ற எண்ணம் நாடு முழுக்க மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டிருந்தது. விவசாயிகளும், சிறுகுறு தொழில் செய்பவர்களும்கூட நம்பி அவருக்கு வாக்களித்தனர். இம்முறை அவர் எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தி நாடு முழுக்க நிலவுகிறது. ஆகையால், அவருக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அதேசமயம், “இந்தி மாநிலங்களில் மோடியின் பிரச்சாரத்துக்கு இன்னும் மவுசு இருக்கிறது; அது பாஜகவுக்கு ஒரு கூடுதல் அனுகூலம்” என்று வடநாட்டுத் தோழர்கள் சொல்கிறார்கள். ஆகையால், இந்தி மாநிலங்களின் பலத்தில் தனிப்பெருங்கட்சியாக பாஜகதான் வரும் என்று நினைக்கிறேன். ஆனால், அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. மாநிலக் கட்சிகள் சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தினகரன், சீமான், கமல்ஹாசன்?

அதிமுகவின் வாக்குகளை தினகரன் கணிசமாகப் பிரிப்பார். சீமான், கமல் போன்றோர் திமுகவின் வாக்குகளைப் பிரிப்பார்கள். எனினும், குறிப்பிட்ட சதவிகித வாக்குகள் வாங்குவதை வைத்துக்கொண்டு இந்தக் கட்சிகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. ஒரு கட்சி தொடர்ந்து, சிறப்பாக இயங்க கூட்டுத் தலைமையும், நிர்வாக அமைப்பும், கீழே அடிப்படைக் கட்டமைப்பும் தேவை.

மாநிலக் கட்சிகள் மையத்துக்கு வரும்

வழக்கறிஞர் கே.பாலு, பாமக.

யார் எவ்வளவு பெறுவார்கள்?

தேசிய அளவில் பாஜக 270 வரை; காங்கிரஸ் 110 வரை; ஏனைய கட்சிகள் 165 வரை வெல்லும். தமிழக அளவில் அதிமுக அணி 24; திமுக அணி 14 இடங்களில் வெல்லும்; இடைத்தேர்தலில்: அதிமுக 19, திமுக 3 இடங்களில் வெல்லும்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

கருணாநிதி அளவுக்கு ஸ்டாலின் நம்பகமான, செயலாற்றல் மிக்க தலைவராக மக்களிடத்தில் தன்னை நிறுவிக்கொள்ளவில்லை; இந்த ஆட்சியே தொடர்ந்தால் போதும் என்ற மனநிலையே மக்களிடம் இருக்கிறது. பலமான வாக்குவங்கிகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியாக அதிமுக அணி இருப்பதால், நிறைய இடங்களில் வெற்றியைக் குவிக்கும். தேசியக் கட்சிகள் மாநில நலனில் நேரடி அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுக்க இருக்கிறது. எனவே, நாடு முழுக்கவே மாநிலக் கட்சிகளுக்கு ஆதாரமான மனப்போக்கு மக்களிடம் இருக்கிறது. எனவே, இம்முறை மாநிலக் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றிபெறும்.

தினகரன், சீமான், கமல்ஹாசன்?

டிடிவியைப் பொறுத்தவரையில் பெரியளவில் பேசப்பட்டார், பூதாகாரப்படுத்தப்பட்டார். ஆனால், சொற்ப சதவிகித வாக்குகளைத்தான் அவர் பெறுவார். ஒரு தொகுதியில்கூட அவர்கள் வெல்ல மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே பிடிக்காதவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இருக்கிறார்கள். அந்த வாக்குகளை இம்முறை சீமானும் கமல்ஹாசனும் பெறுவார்கள்.

தினகரன் கட்சி காணாமலாகும்

நாராயணன் திருப்பதி, பாஜக.

யார் எவ்வளவு பெறுவார்கள்?

தேசிய அளவில் பாஜக கூட்டணி 350 வரை, காங்கிரஸ் 40 வரை; மாநிலக் கட்சிகள் 140 வரை வெல்லும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கை பத்திலிருந்து இரண்டாகக் குறையும். தமிழகத்தில், அதிமுக அணி 15; திமுக அணி 25 வரை வெல்லலாம். சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 15, திமுக 5 இடங்களில் வெல்லும்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

மோடி அரசின் சாதனைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகள், பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்திலும் அதிமுக ஆட்சி உறுதியாகத் தொடரும். குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்கும் திமுகவின் கனவு பலிக்காது.

தினகரன், சீமான், கமல்ஹாசன்?

தினகரன், சீமான், கமல்ஹாசன் ஆகியோர் ஒரு இடத்தில்கூட வெல்ல மாட்டார்கள். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்றவை 5% வாக்குகளைப் பெறலாம். அதற்கு மேல் அவர்கள் பெற்றால், அது திமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவின் வாக்குகளில் கொஞ்சத்தை தினகரன் பிரிப்பார். அதனால்தான் அதிமுக கூட்டணிக்கு இடங்களைக் குறைத்திருக்கிறேன். ஆனாலும், தினகரன் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியாத சூழல் ஏற்படும் என்பதால், அக்கட்சியில் இருப்போர் தேர்தல் முடிந்ததும் அதிமுக பக்கம் திரும்புவார்கள்; அவர் கட்சி காணாமலாகும்.

சீமான் நீடிப்பார், கமல் காணாமல் போவார்

வைகைச் செல்வன், அதிமுக.

யார் எவ்வளவு பெறுவார்கள்?

தேசிய அளவில், பாஜக அணி 300 வரை; காங்கிரஸ் அணி 90 வரை, ஏனைய கட்சிகள் 60 வரை வெல்லும். தமிழக அளவில் அதிமுக அணி 34; திமுக அணி 4 வெல்லும். சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 18, திமுக 5 வெல்லும்.

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஆளும் அரசுகள் மீது கோபம் இருந்தால் எப்படியிருக்கும் என்பதைக் கடந்த தேர்தல்களில் நான் களத்தில் பார்த்திருக்கிறேன். இந்தத் தேர்தலில் ஆளும் அரசுகள் மீது மக்களுக்கு அத்தகைய கோபமெல்லாம் இல்லை. புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்றிருந்தாலும்கூட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிரச்சாரத்துக்கு மக்கள் ஆர்வமாக வந்தார்கள். அவர்கள் முகத்தில் கோபமோ விரக்தியோ இல்லை. மத்தியிலும் அப்படித்தான். எனவே, இந்த ஆட்சிகள் நிச்சயம் தொடரும்.

தினகரன், சீமான், கமல்ஹாசன்?

சீமான் கட்சியும், கமல் கட்சியும் தலா 4% வாக்குகள் வரை பெறும். தினகரனின் கட்சி 5% வாக்குகளைப் பெறும். கட்சியையும் ஆட்சியையும் தினகரன் கைப்பற்ற வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து, அவரது கட்சியில் உள்ள பலர் அதிமுகவுக்குத் திரும்புவார்கள். சீமான் கட்சி தொடர்ந்து நீடிக்கும். கமல் கட்சி இந்தத் தேர்தலுக்குப் பிறகு மங்கிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x