Published : 20 May 2019 08:16 AM
Last Updated : 20 May 2019 08:16 AM

மீண்டும் தலையெடுக்கும் கோத்தபய ராஜபட்ச

ஆர்.என்.சர்மா

இலங்கை உள்நாட்டு இறுதிப்போரில் விஸ்வரூபம் எடுத்திருந்த கோத்தபய ராஜபட்ச, அதற்குப் பின் அவரது ஆட்சி பறிபோன நிலையில் செயலற்றுப்போயிருந்தார். இப்போது, ஈஸ்டர் தினத்தன்று நடந்த படுகொலைக்குப் பிறகு மீண்டும் கோத்தபய ராஜபட்ச தலையெடுத்திருக்கிறார். “இலங்கையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன். அதிபரான பிறகு இலங்கையின் உளவுப் பிரிவை வலுப்படுத்துவேன், ஒற்றர்கள் எண்ணிக்கையைக் கூட்டுவேன், மத பயங்கரவாதத்துக்கு இடமில்லாமல் அழிப்பேன்” என்று அறிவித்திருக்கிறார் கோத்தபய ராஜபட்ச.

“2011-ல் எனது பதவிக்காலத்தில் நாடு முழுவதிலும் 5,000-க்கும் மேற்பட்ட உளவாளிகளை நியமித்திருந்தேன், உளவுப் பிரிவை வலுவாகக் கட்டமைத்திருந்தேன். உளவாளிகளில் அரபி உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் தெரிந்தவர்கள் இருந்ததால், மதம் சார்ந்த தீவிரவாதிகளை அடையாளம் கண்டு ஒடுக்க முடிந்தது. 26 ஆண்டுகளாக இலங்கை அரசுக்குப் பெரிய சவாலாக இருந்த தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டனர்” என்று தனது பதவிக்காலத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டிருப்பவர், தற்போதைய ஆட்சியாளர்களைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்.

“புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் நான் ஏற்படுத்தியிருந்த உளவுப் பிரிவுக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டனர். ஏராளமான உளவாளிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது ராணுவத்துக்கும் அரசுக்கும் தெரியாமல் போனது. மத, மொழிச் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற புதிய அரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்று காவலையும் கண்காணிப்பையும் தளர்த்தினர். போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்போம் என்றனர். மனிதநேயம் பேசி உளவுப் பிரிவின் முக்கியத்துவத்தை மறந்தனர். அதன் விளைவு, நாடு முழுவதும் இப்போது அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காகி இருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த தாக்குதலை யார் நடத்தினார்கள், எப்படி நடத்தினார்கள், ஏன் நடத்தினார்கள் என்று எதுவுமே தெரியாமல் அதிபர் ஒரு பக்கமும் பிரதமர் ஒரு பக்கமும் விழித்தனர். இலங்கையில் தாக்குதல் நடைபெறப்போகிறது என்று இந்திய உளவுத் துறை 15 நாள்களுக்கு முன்னால் எச்சரித்திருந்தும் ஆட்சியாளர்கள் விழிப்படையவில்லை. இந்நிலை நீங்க நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு உளவுப் பிரிவை வலுப்படுத்துவேன், தீவிரவாதிகளை ஒடுக்குவேன்” என்று பேட்டியளித்திருக்கிறார் கோத்தபய.

பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த உள்நாட்டுப் போரின்போது தமிழர்கள் மீது ராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதற்காகவும், சித்திரவதை முகாம்களில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்காகவும் விசாரணை நடைபெற வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உண்மை, நீதிக்கான அமைப்பு என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

லசந்த விக்ரமசிங்க என்ற புலனாய்வுப் பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மகள் அகிம்சா விக்ரமதுங்க அளித்த மனுவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்காக கலிபோர்னியாவில் விசாரணைக்கு வருகிறது. இவ்விரண்டுமே மகிந்த ராஜபட்ச ஆட்சிக்காலத்தில் நடந்தவை. அண்ணனைத் தொடர்ந்து அவரது தம்பியும் அதிபர் பொறுப்பைக் கைப்பற்ற ஆசைப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x