Published : 20 May 2019 08:14 AM
Last Updated : 20 May 2019 08:14 AM

ஆட்டத் திருப்பர்கள்: காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வாரா குமாரசாமி?

மத்தியில் பாஜக இல்லாத ஆட்சியை அமைக்க மாநிலக் கட்சிகளுடன் காங்கிரஸ் பேசிவரும் வேளையில், கர்நாடகத்தில் தனது கூட்டணியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைத் தக்கவைத்துக்கொள்வதே அதற்குச் சவாலாக மாறியிருக்கிறது. 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். எடியூரப்பாவும் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், கடைசிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் பதவியிலிருந்து விலகிவிட்டார். மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் வாய்ப்பைக் கொடுத்துவிட்டு, கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது காங்கிரஸ். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் நடுவே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்துகொண்டே இருக்கிறது. நீறுபூத்த நெருப்பு, மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது.

தொகுதிப் பங்கீட்டிலேயே முட்டல்களும் மோதல்களும் தொடங்கிவிட்டன. தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று ராகுலிடம் புகார் சொன்னார் தேவ கவுடா. அப்புறம், ராகுல் தலையிட்டுப் பேசிய பிறகுதான் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்கள்.

தொடரும் மோதல்

சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிராக நின்ற இரண்டு கட்சிகளின் ஊழியர்களும் அந்தச் சூடு ஆறும் முன்னரே, மக்களவைத் தேர்தலில் இணைந்து எப்படி வேலைசெய்வார்கள்? அதுதான் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் முக்கியப் பிரச்சினை. தேர்தல் பிரச்சாரங்களில் இரண்டு கட்சிகளுக்கும் நடுவே இணக்கத்தை ஏற்படுத்த தேவ கவுடா தொடர்ந்து முயன்று பார்த்தார். ஆனால், இன்னொரு பக்கம் கட்சித் தலைவர்களுக்கு நடுவிலேயே வார்த்தைப் போர் முற்றிப்போய்விட்டது. கர்நாடகத்தின் இந்நாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா இருவருமே ஒருவருக்கொருவர் சூடான வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.

மறுவாக்குப் பதிவுக்காக சின்சோலி சட்டமன்றத் தொகுதியில் பேசிய கர்நாடக முதல்வர், மல்லிகார்ஜுன கார்கேயின் பணிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை, முதல்வராவதற்கான வாய்ப்புகளை கார்கே பல தடவை தவறவிட்டிருக்கிறார் என்றார் குமாரசாமி. “தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவும் அப்படியொரு வாய்ப்பைத் தவறவிட்டவர்தான். ஆனாலும், ஒவ்வொன்றுக்கும் நல்ல நேரம் வந்தே தீரும்” என்று பதிலடி கொடுத்தார் சித்தராமையா.

கட்சியைக் கைப்பற்றுவதில் ரேவண்ணா, குமாரசாமி இருவருக்குமிடையே இன்னும் போட்டி முடிவுக்கு வந்துவிடவில்லை. இருவரின் மகன்களும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். தேவ கவுடாவின் தொகுதியான ஹாசனில் ரேவண்ணாவின் மகன் ப்ரஜ்வால் போட்டியிட்டிருக்கிறார். தேவ கவுடா, தும்கூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

தனது கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. கார்கே, கர்நாடகத்தின் மிக உயர்ந்த தலைவர் என்று பதில் சொல்லியிருக்கிறார் குமாரசாமி. தனது கருத்துகளை அரசியல் லாபங்களுக்காகத் திரிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

யாருடைய குரல்?

இதற்கிடையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான பசவராஜ் ஹொரட்டி, “காங்கிரஸ் சகிப்புத்தன்மை இல்லாமலும் ஒத்துழைப்பு கொடுக்காமலும் நடந்துகொள்கிறது. முதல்வர் குமாரசாமி நல்லாட்சி நடத்துகிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அவரைச் செயல்பட அனுமதிக்கவில்லை. இப்படியே தொடர்ந்தால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையிலான உறவில் பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது.

கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சித்தராமையா இருப்பதையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவரான விஷ்வநாத். கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்ச கொள்கைத் திட்டத்தை வரைவதற்கு சித்தராமையா தடையாக இருக்கிறார் என்றும், அவருக்குப் பதிலாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான குண்டு ராவே ஒருங்கிணைப்புக் குழு தலைவராகப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக அல்லாத ஆட்சியை மத்தியில் அமைப்பதற்கு முயன்றுவருகிறோம். இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களுக்குள் பிணக்குகளை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் குமாரசாமி. அவர் சமாதானம் பேசுவதுபோல தோன்றினாலும் அவரது கட்டுப்பாட்டை மீறி கட்சியின் மற்ற தலைவர்கள் வாய் திறப்பார்களா என்பது நியாயமான சந்தேகம்தான்.

குமாரசாமிக்கு எப்படியாவது முதல்வராகத் தொடர வேண்டும் என்று ஆசை. சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வராக வேண்டும் என்று ஆசை. அதன் காரணமாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி என்பது வெறும் பெயரளவுக்குத்தான் அமைந்திருக்கிறது. இரண்டு கட்சிகளுமே கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை.

ஏமாற்றிய கூட்டணி

மக்களவைத் தேர்தலில் மைசூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கட்சி ஊழியர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப் போல மாண்டியா தொகுதியில் போட்டியிடும் குமாரசாமியின் மகன் நிகிலுக்கு வாக்களிக்காமல், சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது. தேர்தல் கூட்டணி என்பதே இருவரது வாக்கு வங்கியையும் ஒன்றுசேர்த்து எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதுதான். ஆனால், கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் வைத்துக்கொண்டிருக்கும் கூட்டணி என்பது வெறும் பெயரளவிலான கூட்டணியாகவே அமைந்துவிட்டது.

225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவுக்குத் தற்போது 104 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸுக்கு 78. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37. இடைத்தேர்தல் நடக்கும் குண்ட்கோல், சின்சோலி தொகுதிகள் இரண்டும் காங்கிரஸ் வசமிருந்தவை. அந்தத் தொகுதிகளில், ஒருவேளை பாஜக வெற்றிபெற்றால் தொடர்ந்து சும்மா இருக்கவும் செய்யாது. இரண்டாவது ஆட்டத்துக்குத் தயாராகக்கூடும்.

மாநிலத்திலும் ஆட்சியைத் தங்கள் கைக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறது காங்கிரஸ். மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதுடன் மத்திய ஆட்சியிலும் பதவிகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறது மதச்சார்பற்ற ஜனதா தளம். எப்படியாவது, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை உள்ளே கொண்டுவந்து காங்கிரஸை முதலில் அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று நினைக்கிறது பாஜக. ஆக, எப்படிப் பார்த்தாலும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஒட்டி, கர்நாடக அரசியல் களத்தின் காட்சிகள் மாறும் சாத்தியங்கள் வெளிப்படுகின்றன; தேசிய அளவிலும் ஆட்டத்தைத் திருப்பும் ஆட்களின் பட்டியலில் குமாரசாமியும் ஒருவராக இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x