Last Updated : 15 May, 2019 04:01 PM

 

Published : 15 May 2019 04:01 PM
Last Updated : 15 May 2019 04:01 PM

உன் கால் பிடித்துவிடணும் அப்பா!’’ - சூர்யா பாலகுமாரன் நெகிழ்ச்சிப் பதிவு

எழுத்தாளர் பாலகுமாரனின் நினைவு நாள் இன்று (15.5.19). இந்த நாளில், அவரின் மகன் சூர்யா பாலகுமாரன், தன் முகநூலில் தந்தை குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

பாத்துக்கோப்பா. அம்மா வந்தாச்சு, நான் போயிட்டு சாயந்திரம் வந்துட்றேன் என்று கூறிவிட்டு நான் ICUவை விட்டு வெளியேறியபோது, மேற்கூறியவைக்கு எந்தப் பதிலும் கூறாமல் கண்கள் மூடியபடி அமைதியாக உட்கார்ந்திருந்தது மட்டும் இன்று வரை நினைவிலேயே இருக்கிறது.

நேற்று மதியத்திலிருந்து மீண்டும் மீண்டும் அதே நினைப்பு. ஒரு வாரமாக இன்று, இதேநாள், சென்ற வருடம் என்ன நடந்தது, என்ன செய்தோம் என்ற அதே தவிப்பு. போன வருஷம், இந்த மாசம் அப்பா நம்மகூட இருந்தால்ல, சந்தோஷமா பேசிண்டிருந்தால்ல, வெளிய கூட போயிட்டு வந்தோமே என்று மாத ஆரம்பத்திலிருந்தே உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு நெருடல். அந்தக் கடைசி ஒரு நிமிஷம் உன் கூட இல்லையே என்கிற ஒரே குற்ற உணர்ச்சி, வருடம் முழுவதும் உறுத்திக்கொண்டிருக்கிறது.

 

அம்மா, பெரியம்மா முகத்தில் இறுக்கம் சூழ்ந்துகொண்டிருக்க, வீடு முழுவதும் உறவுக்காரக் கூட்டம் அலை மோதியது. இல்லம் அயானின் ரகளைபுரமாக மாறியது. சந்தோஷத்தின் உச்சஸ்தாயியைத் தொட்டு விளையாடிக்கொண்டிருந்த அயானின் மேல், மெதுவாக கவனம் திரும்பியது. அவனுக்காக சிரித்தது, அவனுடன் சேர்ந்து எகிறி குதித்து விளையாடியது.

வர இருக்கும் வாசகர்களுக்கும், வழித்தொண்டர்களுக்கும் தருவதற்கு அப்பா படம் போட்ட 300க்கும் மேலான பைகளை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்த கோயில் பிரசாதங்களால் நிரப்பிக்கொண்டிருந்தோம். ஒரு குடும்பம் முழுவதும் ஓரிடத்தில் உட்கார்ந்து சுற்றி, அமர்ந்து வேலைசெய்வது என்பது மிகப்பெரிய சந்தோஷம். ஏழு எட்டு பேராக வட்டமாக அமர்ந்து ஒருவர் இனிப்பு வைக்க, அடுத்தவர் விபூதி குங்குமம் பொட்டலம் வைக்க, என் கையில் ஒரு கோயிலின் ஸ்தல வரலாறு மடித்துப் போடும் பொறுப்பு. அரை மணி நேர சந்தோஷத்திற்குப் பிறகு மீண்டும் உன் நினைப்பு. இந்த சந்தோஷம் உன்னால தானே, நீ விட்டுட்டுப் போனது தான, நீ கத்துக்குடுத்துட்டுப்போனதுதான என்கிற பரிதவிப்பு.

கொத்தாக இன்னும் கொஞ்சம் ஸ்தலவரலாறைக் கையில் கொடுத்து, அப்பா ரூம்ல கொஞ்சம் பை இருக்கு அதுல இன்னும் இதை வைக்கல. சட்டுன்னு மடிச்சு வெச்சுட்டு வந்துரு என்று அக்காள் ஆணையிட, அப்பாவின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டேன். மாட்டியிருக்கும் படத்தை ஒரு முறை கண்ணோடு கண் பார்த்து சம்மணமிட்டேன். ஒவ்வொரு காகிதமாக மெதுவாக மடித்து, அதை லாவகமாக சொருகி ஒரு முறை அனைத்து பைகளையும் சரிபார்த்து மூச்சு விட, முழம் நீள பேப்பரைப் பிரித்து, என்ன என்று படிக்கத் தோன்றியது. புன்னை நல்லூர் மாரியம்மனின் ஸ்தல வரலாறு. சோழ தேசத்து காவல் தெய்வத்தின் கதை.

கூட்டத்திலிருந்து என்னை ஒதுக்கிவைத்து, கூச்சலில் இருந்து தள்ளிவைத்து, தனியாக ஒரு அறையில் அமரச்செய்து, இதைப்படி, இவளை கெட்டியா புடிச்சுக்கோ என்று நீ கூறியதாகவே மனம் அந்தத் தருணத்தை ஏற்றுக்கொண்டது. வருஷாப்திகம் முடிந்தவுடன் சென்று வரவேண்டும் என்று தோன்றியது. இன்னும் எத்தனை எத்தனை கட்டளைகள், செயல்கள், திட்டங்கள், வாழ்வியல்கள் அணு அணுவாக உந்தன் நினைப்புடனே நடக்கும், நகரும்?

இதுவே கடமை. இதுவே காரணம். இதுவே கர்மா என்று மறுநொடி மனது வார்த்தைகளை அடுக்கி வைத்தது. தரையில் அமர்ந்தபடி கண்களை மூடி உன் கட்டிலில் தலை சாய்த்து கைகளை நீட்ட, உன் கால்கள் கிடக்கும் இடம் தென்பட்டது. உனக்கு கால் பிடித்து விட வேண்டும் என்று தோன்றியது. வெறும் மெத்தையை தடவிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தேன்.

இவ்வாறு சூர்யா பாலகுமாரன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x