Published : 26 Apr 2019 09:25 AM
Last Updated : 26 Apr 2019 09:25 AM

360: கர்நாடகத்தின் ‘அரிசி’யல்

கர்நாடகத்தின் ‘அரிசி’யல்

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவளித்து ஆட்சியில் அமர வைத்தது காங்கிரஸ். மக்களவைத் தேர்தலையும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து சந்தித்திருக்கிறது. இதற்கிடையில், முதல்வராகும் தனது விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமய்யா. மீண்டும் முதல்வரான பிறகு, ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்டுவரும் 7 கிலோ அரிசியை 10 கிலோவாக உயர்த்திக்கொடுப்பேன் என்று வாக்குறுதியையும் இப்போதே கொடுத்துவிட்டார். கர்நாடகத்தில் தற்போது வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு ‘அன்ன பாக்யா’ திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 7 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் குமாரசாமி. ஆனால், அந்த அறிவிப்புக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அந்த முடிவைக் கைவிட்டார். 2013-ல் சித்தராமய்யா முதல்வராகப் பதவிவகித்தபோது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, கிலோ ரூ.1 என்ற விலையில் 30 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அரிசியோடு இணைந்தது சித்தராமய்யாவின் அரசியல். இப்போது அவர் கொடுத்திருக்கும் அரிசி வாக்குறுதி, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.

95 வயதிலும் அசரடிக்கும் வி.எஸ்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 95 வயதிலும் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பல பேரணிகளை நடத்திய வி.எஸ்., இந்தத் தேர்தலில் ஒன்றிரண்டோடு நிறுத்திக்கொண்டுவிட்டார். அவர் மேடையேறும்போதெல்லாம், ‘தீர சகாவே வியெஸ்ஸே, இனியும் இனியும் முன்னோட்டு’ என்று தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்தன. முன்புபோல எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் இப்போது அவர் மேடையேறுவதில்லை. ஆனால், குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம்கொடுத்து உச்சரிக்கும் அவரது வழக்கமான பேச்சு நடைக்கு மாறிவிடுகிறார். பேசும் இடங்களிலெல்லாம் அவருக்கு வரவேற்பு இருந்தாலும் கட்சிக்குள் அவரை ஓரம்கட்டிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில்கூட அவரது பெயர் இடம்பெறவில்லை. கட்சிக்குள் பினராயியின் கையே ஓங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x