Published : 25 Apr 2019 09:06 AM
Last Updated : 25 Apr 2019 09:06 AM

முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்!

வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம்.

கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தது. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம், காபிர் என்ற பிரிவினைப் போக்கை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்திவிட்டது. அன்று நாம் சாப்பிட்ட நாரிசா் சோறு, பராத் ரொட்டி போன்ற எல்லாவற்றையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கிறபோது எனது ஆடையைப் பற்றி கேள்வி எழுப்பாத மதரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவை அணிந்துவந்தால்தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றன.

பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கிற அவளது மகளுக்குக் கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவைப் போர்த்தி அனுப்பிவைக்கும் சூழல் இலங்கையிலே நிலவுகிறது.

சகிப்புத்தன்மையற்ற வஹாபியிஸத்தின் கொடூரங்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோய் முற்றித்தான் பயங்கரவாதமாக இன்று மாறி உயிர்களைப் பலிகொண்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. சில குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனிமேலும் சவுதியின் கைக்கூலிகளாகச் செயல்படும் இத்தீவிரவாதப் போக்கைக் கண்டுகொள்ளாமல்விடுவது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது. ஆகையால், நம்மைச் சுற்றி என்ன நடந்தது, எப்படியெல்லாம் நாம் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதை உணருங்கள்; நம் தலைமுறைகளைக் காப்பாற்ற முனையுங்கள்.

- பாத்திமா மாஜிதா, இலங்கை தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர்.

- முகநூல் பதிவில் இருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x