Published : 25 Apr 2019 12:00 AM
Last Updated : 25 Apr 2019 12:00 AM

காவிரி - வைகை இணைப்புக் கனவு சாத்தியமாகுமா?

குடிநீருக்காகத் திண்டாடும் நிலையிலும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம். இந்நிலையில், கோதாவரி காவிரி போன்ற நதிகள் இணைப்பு குறித்த திட்டங்கள் பற்றிய சிந்தனைகள், தமிழகத்தின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

நதிகள் இணைப்புத் திட்டங்கள் விவாதத்துக்குரியன என்றாலும், மாநிலங்களுக்கு இடையிலான பல நூறு கோடி ரூபாய்க்கான இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, அந்தந்த மாநிலங்கள், தமது எல்லைக்குள் ஓடும் நதிகளை இணைத்தால், இவை மிகப் பெரிய அளவில் நீராதாரத்தைப் பெருக்கி நீர்ப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும். அடுத்தடுத்து மாநிலங்களுக்கு இடையேயும் தேசிய அளவிலும் நதி நீர் இணைப்பைச் செயல்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதற்கு அடித்தளமாகவும் அமையும்.

தமிழகத்தின் நிலவியல்

நதி நீர் இணைப்பின்போது பழைய மற்றும் புதையுண்ட நதிகளின் பாதைகளையும், வறண்ட நதிகளின் பாதைகளையும் பயன்படுத்தி அவற்றின் மூலம் நதிகள் இணைப்பைச் செயல்படுத்துவது எளிது. அதற்கான அறிவியல் கண்ணோட்டத்தை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தொலையுணர்வுத் துறை ஆராய்ச்சிக் குழு நடத்திய செயற்கைக்கோள்சார் ஆய்வுகள் காண்பிக்கின்றன.

நதிகள் இணைப்பைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் நிலவியல் அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாகவும் நதி நீர் இணைப்புக்கு வாய்ப்பானதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான நதியான காவிரியில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு, பெரும் அளவிலான நீர் கடலிலே கலக்கிறது. அதேசமயம், தென் தமிழ்நாட்டில் உள்ள நதிகள் வறண்டு கிடக்கின்றன. ஆகவே, ஒருங்கிணைந்த நதிகள் இணைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு அவசியமான திட்டங்களில் ஒன்று.

தமிழ்நாட்டின் நிலப்பகுதி கிழக்கு நோக்கி சரிவாக இருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் பொன்னையாறு, காவிரி, புதுக்கோட்டை வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகள் அனைத்தும் மேற்கிலிருந்து உருவாகி வங்காள விரிகுடா நோக்கி கிழக்காக ஓடிக் கடலில் கலக்கின்றன. ஆனால், கிழக்கு நோக்கிய நிலச்சரிமானம் குறைவானதாக இருப்பதால் இந்நதிகள் நின்று நிலைத்து ஓடி மேற்கே தங்களது இளநிலையில் அதிகமான அரிப்பையும், நடுப்பகுதியில் தங்களது பக்குவப்பட்ட நிலையில் வளைந்து, நெளிந்து ஓடி, நிலத்தை அரித்தும், மணலைத் தங்களது இருமருங்கும் கொட்டியும், கிழக்கே தங்களது முதுநிலையில் படுகைகளை உருவாக்கியும் உள்ளன. மேலும், புவியியல் அமைப்பு மற்றும் செயல்பாடுகளால் காலம்தோறும் தங்களது பாதைகளை மாற்றிக்கொண்டும் உள்ளன என்பதை செயற்கைக்கோள்கள் காட்டும் புதையுண்ட நதிகள் மூலம் அறிய முடிகிறது.

காவிரியின் பாதைகள்

குறிப்பாக, முன்பு வடக்கே ஒகேனக்கல்லிலிருந்து சென்னை வரை ஓடி பின்னர் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிராப்பள்ளி சமவெளியில் புகுந்த காவிரி நதி, முதலில் தெற்கே வேம்பனுர் வழியே தற்கால புதுக்கோட்டை வெள்ளாறு வழியாக ஓடி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காவிரிப் படுகைப் பகுதியில் தெற்கிலிருந்து வடக்காக அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, பழம் காவிரி ஆகிய பாதைகளில் ஓடி சுமார் 750 ஆண்டுகட்கு முன்பு கொள்ளிடமாக நிலைகொண்டுள்ளது. உண்மையில், காவிரி இந்தப் பாதைகளில் ஓடி புதையுண்ட பின்னர் அந்தப் பாதைகளில்தான் மேற்சொன்ன நதிகளெல்லாம் தற்போது பாய்கின்றன.

புதையுண்ட நதிகளின் பாதைகளையும், தற்போது வறண்டு கிடக்கும் நதிகளின் பாதைகளையும் பயன்படுத்தி நதிகளை இணைத்து, காவிரிப் படுகைப் பகுதியை வளப்படுத்துவதோடு தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீர்வளத்தில் தன்னிறைவு பெற முடியும். மேலும், சில பகுதிகளில் இணைப்புக் கால்வாய்களை அமைத்து காவிரியை வைகையோடு இணைக்கலாம். இந்த இணைப்பின் மூலம் காவிரிக்கும் வைகைக்கும் இடையில் உள்ள நதிகளின் பாதைகளிலும் அவற்றின் புதையுண்ட பாதைகளிலும் நீரை ஓடச்செய்யலாம்.

எப்படி இணைக்கலாம்?

வடக்கே முக்கொம்பு மற்றும் கல்லணை அணைகளில் காவிரியின் வெள்ள நீரைக் கட்டுப்படுத்தி காவிரிப் படுகைப் பகுதிகளில் உள்ள புதையுண்ட காவிரியின் கிளை நதிகளில் ஓடச்செய்யலாம். அக்னியாறு, அம்புலியாறு பாதைகளில் வெள்ள நீரைத் திருப்பிவிடலாம். உபரி வெள்ள நீரை வடக்கே முக்கொம்பிலிருந்து தெற்கே வேம்பனூர் வரை காணப்படும் காவிரியின் பழைய புதையுண்ட பாதை வழியாகக் கொண்டுசெல்லலாம். வேம்பனூருக்குத் தெற்கே ஒரு அணையைக் கட்டி வேம்பனூரிலிருந்து புதுக்கோட்டை வெள்ளாற்றின் பாதையிலும் அதன் படுகையில் காணப்படும் புதையுண்ட பாதைகளிலும் கொண்டுவந்த உபரி வெள்ள நீரை ஓடச்செய்யலாம்.

வேம்பனூரிலிருந்து பொன்னமராவதி வழியாக திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வரை சுமார் 4௦ கிமீக்குக் கால்வாய் அமைத்து மணிமுத்தாறு நதிக்கு உபரி வெள்ள நீரைக் கொண்டுசெல்லலாம். அங்கே திருப்பத்துருக்குத் தென்மேற்கே ஒரு அணை கட்டி, கொண்டுசென்ற நீரை மணிமுத்தாற்றின் வறண்ட பாதை வழியாக ஓடச்செய்யலாம். திருப்பத்தூர் அருகே இருந்து மதுரைக்கு மேற்கு வரை சுமார் 40 கிமீக்குக் கால்வாய் அமைத்து வெள்ள உபரி நீரைக் கொண்டுசென்று வைகையில் விடலாம். அங்கிருந்து வைகையின் வறண்ட பாதையில் ஓடவிட்டு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள வைகைப் படுகையில் உள்ள வைகையின் புதையுண்ட கிளை நதிகள் மற்றும் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குளங்களில் நீரை நிரப்பலாம்.

இதுபோன்று காவிரியை வைகையுடன் இணைத்தால் மிகப் பெரிய நீர் வள மேலாண்மையைத் தமிழ்நாட்டில் கட்டமைக்க முடியும். இத்திட்டத்தால், காவிரியில் வெள்ளத்தைத் தடுக்க முடியும். அக்னியாறு, அம்புலியாறு, புதுக்கோட்டை வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை போன்ற வறண்ட நதிகளை வளமுறச்செய்ய முடியும். தென் தமிழ்நாட்டின் படுகைப் பகுதிகளில் உள்ள சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் நீர்வளத்தைப் பெருக்க முடியும். காவிரி மற்றும் வைகை நதிப் படுகைகளில் மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை முழுமையாகச் சரிசெய்யவும் முடியும்.

- இராமசாமி, மாண்புமிகு பேராசிரியர், தொலையுணர்வுத் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: smrsamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x