Published : 18 Apr 2019 11:38 AM
Last Updated : 18 Apr 2019 11:38 AM

360: ஒவ்வொரு முறை தேர்தல் நாளிலும் ஷ்யாம் சரணை நினையுங்கள்

ஷ்யாம் சரண் நேகி. மனிதருக்கு வயது என்ன தெரியுமா? 102. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் (1951-1952) ஓட்டு போட்ட முதல் வாக்காளர் எனும் பெருமைக்குரியவர் ஷ்யாம் சரண் நேகி. அதைத் தாண்டி இன்னொரு பெருமையும் அவருக்கு உண்டு - அதுதான் நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது. எல்லாத் தேர்தல்களிலும் இடையறாது வாக்களித்துவருகிறார் இவர்.

முதல் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவின் பெரும் பகுதி 1952 பிப்ரவரியில் நடந்தாலும், இமாச்சல பிரதேசத்தின் பருவநிலையைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே அங்கு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. 1951 அக்டோபர் 25-ல் நடந்த வாக்குப் பதிவில் முதல் ஆளாக ஓட்டு போட்டவர் ஷ்யாம் சரண் நேகிதான். ஓய்வுபெற்ற ஆசிரியரான அவர் மே 19-ம் தேதிக்காக இப்போது காத்திருக்கிறார். ஆமாம், இமாச்சல பிரதேசத்தில் அன்றுதான் வாக்குப் பதிவு.

“இளம் வாக்காளர்களுடன் இணைந்து வாக்களித்து நல்ல அரசை உருவாக்குவதில் என் பங்களிப்பைச் செலுத்துவேன்” என்கிறார் மூத்த குடிமகன் எனும் வார்த்தைக்கு மிகப் பொருத்தமான இந்த முதுமகன்!

 

அன்றாட வாழ்க்கையை வாழவே அரசியல் வேண்டியிருக்கிறதே... எப்படி தேர்தலை விட முடியும்?

மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதி கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கிறது. அப்பகுதியின் நீராதாரத்தில் 5.5% மட்டுமே மிஞ்சியிருக்கிறது. ஜயாக்வாடி அணை உட்பட அந்தப் பகுதியின் முக்கியமான அணைகளில் நீர் இருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டது. அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு சராசரியைவிடக் குறைவாக மழை பெய்த நிலையில், 26 மாவட்டங்களைச் சேர்ந்த 151 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மராத்வாடா பகுதியில் விவசாய நிலங்கள் பிரதானமாக உள்ள எட்டு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் தினமும் 2,185 லாரிகள் மூலம் குடிநீர் வழங்க மகாராஷ்டிர அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. மராத்வாடா, புணே, விதர்பா பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. புணேயில் 39.9 டிகிரி செல்சியஸுக்கு அடித்த வெயிலுக்குக் கன மழையே வந்துவிட்டது.

மத்திய பிரதேசத்தின் கர்கோன் நகரில் அதிகபட்சமாக 45.2 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது. ஹரியாணாவின் குருகிராமின் 732 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 25% சாலைகள் போடப்பட்டிருக்கின்றன என்கிறது குருகிராம் நகராட்சி மேம்பாட்டு வாரியம் சார்பில் டெல்லியைச் சேர்ந்த திட்டம் மற்றும் கட்டிடக்கலை கல்வி அமைப்பு. இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

அனைத்துத் தரப்பினருக்குமான நகரம் என்பது 10% நிலங்களை மட்டுமே சாலைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதுதான் நிபுணர்கள் முன்வைக்கும் வாதம். பள்ளிகள், பூங்காக்கள், சமூக மையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலங்களில் பெரும் பகுதியைச் சாலைகளுக்காக ஒதுக்கிவிட்டால் நகரம் நரகமாகிவிடும் என்பதே நிபுணர்களின் குற்றச்சாட்டு.

அது மட்டுமல்ல, குருகிராம் சாலைகளில் பாதசாரிகளுக்கு என்று வசதிகள் இல்லை. நகரின் மக்கள்தொகையில் 10% மட்டுமே இருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள்தான் இந்தச் சாலைகளால் அதிக அளவு பயனடைகிறார்கள். குருகிராமில் பொதுப் போக்குவரத்து மிகக் குறைவு என்பது இன்னொரு பிரச்சினை.

“நாம் அன்றாடம் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழவே இந்நாட்களில் போராடவும் அரசியல் விழிப்புணர்வோடு மக்களைக் கை கோக்கவும் வேண்டியிருக்கிறதே, தேர்தலை எப்படிப் புறக்கணிக்க முடியும்?” என்று கேட்கிறார்கள் இதற்கான போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் மக்கள் அமைப்பினர். பிரச்சினைகள் நம்மையும் சுருட்டும் நாட்கள் தொலைவில் இல்லை. அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x