Published : 18 Apr 2019 11:30 AM
Last Updated : 18 Apr 2019 11:30 AM

இதுதான் இந்த தொகுதி: பொள்ளாச்சி

பொள்ளாச்சியின் மத்தியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் கல்வெட்டின் கூற்றுப்படி 1,000 ஆண்டுகள் தொன்மையானது பொள்ளாச்சி. நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் பல ஜமீன்களின் ஆளுமையின் கீழ் இருந்தன. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது பொள்ளாச்சி.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மாசாணியம்மன் கோயில்,  பேரூர் ஆதீனம் ஆகியவை புகழ்பெற்றவை. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

பொருளாதாரத்தின் திசை: தமிழகத்தில் அதிக அணைகளைக் கொண்ட மக்களவைத் தொகுதி என்பதால், தென்னை, திராட்சை, நிலக்கடலை, மக்காசோளம், காய்கறிகள், தேயிலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் அதிகம் தேங்காய் விளையும் பகுதி இது.

உலகளவில் தென்னை நார் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 60%. அதில் தமிழகத்தின் பங்கு40%. தமிழகத்தின் தென்னைநார் உற்பத்தியின் 80% பொள்ளாச்சியில்தான் நடக்கிறது. ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்குத் தென்னைநார் பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன. திராட்சை, தேயிலை கொப்பரை உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகுக்கிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள் : திராட்சைக்குப் போதுமான விலை இல்லாமை, காட்டு யானைகள் தொந்தரவு, பாதிப்புக்குள்ளாகும் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காதது என பல பிரச்சினைகள் உண்டு. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட சாலைகளிலிருந்து கிளம்பும் புழுதி மக்களைப் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

கிணத்துக்கடவு பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தக்காளி குளிர்பாதனக் கிடங்கு செயல்பாட்டில் இல்லை. பல கிராமங்களில் குப்பைக் கிடங்குகள் இல்லாததால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு கடுமையானது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

நீண்ட காலக் கோரிக்கைகள்: கோவை, திருப்பூர் மாவட்ட ‘பிஏபி’ திட்ட விவசாயிகளின் 60 ஆண்டு காலக் கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டம் இன்னும் ஆய்வு நிலையில்தான் உள்ளது. கேரளத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் இன்னும் கனவாகவே உள்ளது.

தென்னை நார் சார்ந்த பொருட்களைப் பரிசோதிக்க உலகத் தரம் வாய்ந்த ஆய்வகம், தென்னை நார் பொருட்களைக் கொண்டுசெல்ல தனி சரக்கு ரயில் ஆகியன நீண்ட காலக் கோரிக்கைகள். வால்பாறை சுற்றுலா தல மேம்பாடு, தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, எஸ்டேட் சாலைகள் சீரமைப்பு, தென்னை நார் வணிகத்துக்கு ஜிஎஸ்டி சலுகை என பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன.

ஒரு சுவாரஸ்யம்: 1951, 1957, 1962 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் சி.சுப்பிரமணியம் மட்டுமே மத்திய அமைச்சராகி உள்ளார். ஏழு முறை இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்று இருந்தாலும் இந்தத் தொகுதியின் அதிமுக எம்.பிக்களுக்கு ஒருமுறைகூட மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: பொள்ளாச்சியில் கொங்கு வேளாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அருந்ததியர்கள், செட்டியார்கள், நாயுடு சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். வட மாநிலத்தவர், மலையாளிகள் என பிற மாநிலத்தவர்களின் வாக்குகளும் உள்ளன.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக ஏழு முறை வென்றுள்ளது. 1977-ல் கே.ஏ ராஜு இந்தத் தொகுதியில் அதிமுகவின் வெற்றிக் கணக்கைத் தொடங்கிவைத்தார். 1984-ல் அக்கட்சியின் ஆர்.அண்ணாநம்பி வென்றார். அதன் பின்னர் 1989, 1991 தேர்தல்களில் அதிமுகவின் ராஜாரவிவர்மா, 1998-ல் தியாகராஜன், 2009-ல் கே.சுகுமார், 2014-ல் சி.மகேந்திரனும் வெற்றிபெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x