Last Updated : 11 Apr, 2019 09:03 AM

 

Published : 11 Apr 2019 09:03 AM
Last Updated : 11 Apr 2019 09:03 AM

கருணாநிதியினுடையதா? ஜெயலலிதாவினுடையதா?- எது ஸ்டாலின் பாணி?

‘கற்பூரக் கனல் வார்த்தை தலைவர் சொல்லட்டும்’ என்றே பழக்கப்பட்டுப்போன திமுக தொண்டர்களைத் தட்டியெழுப்பிக் களத்துக்கு அனுப்பும் பொறுப்பில் தீவிரமாக இருக்கிறார் மு.க.ஸ்டாலின். பிரச்சாரக்களத்தில் அவரது அணுகுமுறை எப்படியிருக்கிறது?

கடின உழைப்புக்குப் பேர்போன தந்தை கருணாநிதியின் பெயரைக் கொஞ்சமேனும் தக்கவைத்திட கடுமையாக இயங்குகிறார் ஸ்டாலின். இரவில் எந்நேரம் தூங்கினாலும் அதிகாலையிலேயே எழுந்து, நடைபோவது ஸ்டாலினின் வழக்கம். இப்போது அதையே பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்.

ஓடிவருகிறான் உதயசூரியன்

எந்த ஊரில் தங்கியிருந்தாலும் அவ்வூர் வேட்பாளரை மட்டும் அழைத்துக்கொண்டு, அருகில் உள்ள சந்தை அல்லது கடைவீதிக்குப் போகிறார். அங்கே எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் வேட்பாளரைக் காட்டி ஓட்டுக்கேட்கிறார். நேரங்காலம் தெரியாமல் செல்ஃபி எடுப்பவர்களிடம்கூட அவர் கோபப்படுவதில்லை. சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார். ஓசூரில் ஒரு மூதாட்டி அவரது கன்னத்தைக் கிள்ளியது வைரலானது.

திருவாரூரில் பூணூல் அணிந்த பிராமணரிடமும் கைகுலுக்கினார், அதே வீதியில் மீன் வெட்டிக்கொண்டிருந்த இளைஞரிடமும் அதே சிரித்த முகத்தோடு கைகுலுக்கினார், மதுரையில் மு.க.அழகிரியின் படம் போட்ட டீசர்ட்டுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞரிடமும் அதே புன்சிரிப்பு. சாலையில் இறங்கவே தயங்குகிற தலைவர்களுக்கு மத்தியில் வீதியில் இறங்கி ஓட்டு வேட்டையாடும் அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு.

ஹோட்டலில் தங்கினாலும் கட்சிக்காரர்களின் வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவையே அவரும், குடும்பத்தினரும் சாப்பிடுகிறார்கள். மதுரையில் வேலுச்சாமி, ஓசூரில் பர்கூர் சுகவனம் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நிர்வாகியின் குடும்பத்தினர் பெருமையோடு சமைத்துப் பரிமாறுகிறார்கள்.

ஜெ பாணி பொதுக்கூட்டம்

சென்னையிலிருந்து தன் மனைவியுடன், தனி விமானத்தில் ஓசூர், சேலம், மதுரை, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்குச் செல்கிறார் ஸ்டாலின். தொகுதியில் பெரிய விடுதியில் தங்கும் அவர், அடுத்த சில நாட்களுக்கு சுற்றியுள்ள ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். காலை 10.30 மணிக்கு ஒரு ஊரில் என்றால், மாலை 5 மணிக்கு இன்னொரு ஊரில்.

ஊருக்கு வெளியே சுமார் 50 முதல் 100 ஏக்கர் இடத்தைப் பிடித்து பிரமாண்டப் பொதுக்கூட்டம். பகல் கூட்டத்துக்கு மேடைக்கு மட்டும் பந்தல் போடுகிறார்கள். மாலைக் கூட்டத்துக்கு மேடைக்குப் பந்தல் கிடையாது. பகல் கூட்டம் முடிய 12.30 மணிக்கு மேலாகிவிடுவதால் சுட்டெரிக்கும் வெயிலைத் தாங்க முடியாமல், பார்வையாளர்கள் தவிக்கிறார்கள். பார்வையாளர்களைப் பேச்சால் கட்டிப்போடுகிற வித்தை இன்னும் ஸ்டாலினுக்குக் கைவரவில்லை. பிரமாண்டக் கூட்டம் என்றாலும், அதுவும் ஊருக்கு வெளியில் நடத்தப்படுவதால் இதில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் கட்சிக்காரர்களும், கூட்டணிக்காரர்களும்தான். பொதுமக்களோ, அந்த வழியாகச் செல்வோரோ கூட்டம் கேட்பதாகவும் தெரியவில்லை; அப்படிக் கேட்க நினைத்தால்கூட இடம் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. காரணம், 11 மணி கூட்டத்துக்கு 8 மணிக்கே கட்சிக்காரர்களும் கூட்டணியினரும் அனைத்து நாற்காலிகளையும் ஆக்கிரமித்துவிடுகிறார்கள். ஒரு பெரிய குறை என்னவென்றால், ‘திமுக கூட்டம் என்றாலே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்தானா?’ என்று கேட்கிற அளவுக்கு இளைஞர்களைக் கூட்டத்தில் தேட வேண்டியிருக்கிறது.

என்ன பேசுகிறார் ஸ்டாலின்?

ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றுகிறார். மோடி தலைமையிலான மத்திய அரசையும், எடப்பாடி தலைமையிலான மாநில அரசையும் கடுமையாகச் சாடுகிறார். ‘மாநிலங்களே இல்லாத ஒற்றையாட்சியை அமைக்க முயல்கிறார் மோடி, மோடியா லேடியா என்று கம்பீரமாகக் கேட்ட ஜெயலலிதாவை மறந்துவிட்டு அதிமுகவை மோடியிடமும் அமித் ஷாவிடமும் அடகுவைத்துவிட்டார்கள் எடப்பாடி அணியினர், நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் வருவதால் மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும், மத்தியில் ராகுல் பிரதமராவார், ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலக வேண்டும் என்றால் அவரது ஆதரவாளர்களும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதே அவரது பேச்சின் மையமாக இருக்கிறது. கூடவே, திமுக மற்றும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள், வேட்பாளரைப் பற்றிய அறிமுகம், அவர் தொகுதிக்கு என்னென்ன செய்வார் என்பதையும் சொல்கிறார் ஸ்டாலின். சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி என்றால் அந்த வேட்பாளரையும் பக்கத்தில் நிறுத்தி ஓட்டுக் கேட்கிறார். முன்னெல்லாம் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிப் பேசுவார். இப்போது ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஏற்ப பேசுகிறார்.

இன்னமும் 1990 காலகட்டத்து மேடைப்பேச்சு பாணியிலேயே பேசுவதும், பழமொழிகள், இணைப்புச் சொற்களுடன் நீண்ட வரிகளாக அவரது உரை அமைந்திருப்பதும் சோர்வைத் தருகிறது. முன்பெல்லாம், ஸ்டாலின் பேச்சில் காரம் குறைவாக இருக்கும். இப்போது காரத்தைக் கூட்டிவிட்டார். முதல்வர் பற்றி பேசும்போது தனிப்பட்ட தாக்குதலாக மாறி நீதிமன்றமே கண்டிக்கும் அளவுக்குப் போய்விட்டது. காலையைப் போலவே மாலையிலும் வீதியில் இறங்கிப் பிரச்சாரம் செய்கிறார். பொதுக்கூட்டத்தைக்கூடக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் திறந்த வேனில் சாலை வழியாகப் பிரச்சாரம் செய்யலாம் என்று சொல்கிறார்கள் நிர்வாகிகள்.

ஊர் ஊராகப் போகும் உதயநிதி

மேடை எப்படியிருக்க வேண்டும், கூட்டத்தில் என்ன பேச வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலினுக்குச் சொல்லித்தர தேர்தல் பிரச்சாரத்தையே தொழில்முறையில் மேற்கொள்ளும் நிறுவனங்கள் வழிகாட்டுகின்றன. திமுக மேடை என்றால் நிறைய பேச்சாளர்கள் இருப்பார்கள், தலைவர் வரும் வரையில் ரசிக்க ரசிக்கப் பேசுவார்கள் என்ற மரபை அவர்கள் உடைத்துவிட்டார்கள். தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கென பிரச்சாரத் திட்டம் எதையும் கொடுக்கவில்லை திமுக. மாறாக, ஊர் ஊராக ஸ்டாலின் போகாத குறையைப் போக்க, திறந்த வேன் பிரச்சாரத்துக்கு உதயநிதியை அனுப்புகிறார்கள். கட்சிக்காரர்கள் கொண்டாட்டமாக அவரை வரவேற்றாலும் பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள். ‘ஸ்டாலினுக்கே இன்னும் குடும்ப அரசியல் எனும் குற்றச்சாட்டு நிழலாகத் தொடரும் நிலையில் அடுத்தது உதயநிதியை ஏன் இழுத்துவருகிறார்கள்?’ என்ற முணுமுணுப்பைத் தொண்டர்கள் மத்தியிலும் கேட்க முடிகிறது.

இன்றைக்குத் தமிழகத்தில் எந்தத் தலைவருக்கும் கூடாத அளவுக்குத் தனக்குக் கூட்டம் கூடுவதால், மகிழ்ச்சியோடு வலம்வருகிறார் ஸ்டாலின். கூட்டம் ஓட்டுகளாக மாறுமா என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்ல வேண்டும்.

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x