Last Updated : 05 Apr, 2019 09:12 AM

 

Published : 05 Apr 2019 09:12 AM
Last Updated : 05 Apr 2019 09:12 AM

தினகரனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது!- நவநீதகிருஷ்ணன் பேட்டி

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக அட்வகேட் ஜெனரல், டிஎன்பிஎஸ்சி தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் நவநீதகிருஷ்ணன். தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். காவிரி விவகாரத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என்ற மிரட்டலும், காஷ்மீர் விவகாரத்தில் அவர் பாடிய எம்ஜிஆர் பாடலும் பிரசித்தம். இப்போது ஒதுங்கியிருக்கிறாரா? பேசலாம்.

தேர்தல் களத்தில் உங்களைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது மன வருத்தமா?

அம்மா காலத்தில் இருந்தே சொன்ன வேலைகளைச் செய்வதும், கூடமாடச் செல்வதும்தான் என் வழக்கம். தனித்துப் பிரச்சாரம் செய்த அனுபவம் எனக்குக் கிடையாது. அலுவலகம் சார்ந்த பணிகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது.

அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் முக்கியமான காரணியாக டி.டி.வி.தினகரன் இருப்பார் என்றும், தஞ்சை, திருச்சி தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிட்டதற்குக்கூட அதுவே காரணம் என்றும் சொல்கிறார்களே?

புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் போற்றிப் பாதுகாத்த இரட்டை இலையை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஆர்.கே.நகரில் நடந்த விபத்தை, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருத்திப்பார்க்கக் கூடாது. அவரால் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன், தஞ்சைத் தொகுதியைக் கேட்டதால் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அதேபோல, தேமுதிகவும் வற்புறுத்திக் கேட்டதால் திருச்சியை விட்டுக்கொடுத்தோம். யாருக்கும் பயப்படுகிற நிலையில் அதிமுக இல்லை.

ஆனால், தினகரனுக்குக் கூடுகிற கூட்டம், முதல்வர் பழனிசாமிக்கு வருவதில்லை என்கிறார்களே?

தஞ்சாவூரில் முதல்வரின் பிரச்சாரத்தில் உடன் பயணித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவருக்கு நல்ல கூட்டம் கூடியது. ஒரு ஊருக்கு ஓரிடம்தான் என்றில்லாமல், பத்துப் பன்னிரெண்டு இடங்களில் முதல்வர் பேசுகிறார். ஒவ்வொரு இடத்திலும் கூடிய கூட்டத்தைக் கணக்கிட்டால், தினகரனெல்லாம் அவரது பக்கத்திலேயே நிற்க முடியாது. வேண்டுமென்றால் பாருங்கள், 40-க்கு 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x