Published : 05 Apr 2019 09:10 AM
Last Updated : 05 Apr 2019 09:10 AM

360: அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள்

மத்திய பிரதேசத்தில் இடஒதுக்கீட்டு அரசியல்

கடந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை மக்களவைத் தேர்தலிலும் தக்கவைக்க மத்திய பிரதேச காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கிறது. 29 மக்களவைத் தொகுதிகளில் பாதிக்கும் மேல் கைப்பற்ற வேண்டும் என்பது காங்கிரஸின் இலக்கு. ஆட்சிக்கு வந்தவுடனேயே, 50 லட்சம் விவசாயிகளின் கடன் ரத்து உத்தரவில் முதலமைச்சர் கமல்நாத் கையெழுத்திட்டார். முதியோர் ஓய்வூதியம் ரூ.300-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. நகர்ப்புறங்களில் தொழில் திறனுள்ளவர்கள் வேலையற்றிருந்தால் மாதம் ரூ.4,000 தரும் திட்டமும், உள்ளூர் இளைஞரைப் புதிதாக வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடிக்காக பட்ஜெட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பிரிவினருக்கும் நாங்கள் என்னென்ன செய்திருக்கிறோம் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீட்டை 14%-லிருந்து 27% ஆக உயர்த்தி மார்ச் 8-ல் அவசரச் சட்டம் பிறப்பித்தது மத்திய பிரதேச அரசு. ஆனால், உயர் நீதிமன்றம் அதற்குத் தடையாணை பிறப்பித்துவிட்டது. ‘நாங்கள் வழங்கினோம், நீதிமன்றம் தடுத்திருக்கிறது’ என்று அதையே தங்களுக்கு வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

அப்பாக்களுக்காகக் களமிறங்கும் வாரிசுகள்

மும்பை எல்லைக்குள் அடங்கிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வாரிசுகளும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். பொதுக்கூட்ட மேடைகளிலும் தெருமுனைப் பிரச்சாரங்களிலும் வாரிசுகளின் பேச்சுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. மும்பை வடகிழக்குத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) சார்பில் சஞ்சய் தீனா பாட்டீல் போட்டியிடுகிறார். சஞ்சயின் மகளும் சட்டக் கல்லூரியில் முதலாண்டு மாணவியுமான ரஜூல் பாட்டீல், அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கங்கள், ரயில் நிலையங்கள் என அப்பாவுக்காக வாக்கு சேகரிக்கிறார். ‘ஏற்கெனவே சமூகப்பணி செய்கிறேன். தந்தையைப் போல நானும் அரசியலுக்கு வருவேன்; சமூக சேவைக்கு அரசியல் தொடர்பு பெரிதும் உதவுகிறது’ என்கிறார் ரஜூல். மும்பை வடமேற்குத் தொகுதியில் சிவசேனை சார்பில் போட்டியிடும் கஜானன் கீர்த்திகரின் மகன் அமோல் கீர்த்திகர், இளம் வாக்காளர்களையும் முதல் முறை வாக்களிக்கவுள்ளோரையும் இலக்குவைத்துச் சந்திக்கிறார். மும்பை தென் மத்திய மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஏக்நாத் கெய்க்வாட்டுக்கு ஆதரவாக அவரது மகள் வர்ஷா, மும்பை வடகிழக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரீட் சோமய்யாவுக்கு ஆதரவாக அவரது மகன் நீல் சோமய்யா, மும்பை தெற்குத் தொகுதி சிவசேனை வேட்பாளர் அர்விந்த் சாவந்துக்காக அவருடைய மகன் சின்மய் சாவந்த் என்று வாரிசுகளின் பிரச்சாரத்தில் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறது மும்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x