Published : 05 Apr 2019 07:48 AM
Last Updated : 05 Apr 2019 07:48 AM

தமிழ்ச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதே என் நோக்கம்- ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’க்கு அண்ணா அளித்த பேட்டி

அண்ணா தந்த பேட்டிகளில் முக்கியமான ஒன்று என ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’க்காகப் பத்திரிகையாளர் ஏ.எஸ்.ராமனுக்கு அளித்த இந்தப் பேட்டியைச் சொல்லலாம். அந்நாட்களில  இந்தியா முழுவதிலும், அறிவுஜீவிகளால் வாசிக்கப்படும் பத்திரிகையாகக் கொண்டாடப்பட்ட ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’யின் 13.04.1969 தேதிய இதழில் அண்ணா மறைவுக்குப் பிறகு வெளியான இந்தப் பேட்டி, ‘இந்தியா- பாகிஸ்தான்’ மோதலுக்கு வெகுநாட்களுக்கு முன், சென்னையில் அண்ணாவின் வீட்டில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் நிருபர் ராமன். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே.

காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. இந்தியாவிலேயே மிகவும் அவதூறாகப் பேசப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானது இந்தப் பெயர்;தென்னிந்தியாவைச் சேர்ந்த துடிப்பான சமூக - அரசியல் இயக்கத்தின் தலைவருடைய பெயர். ஆம் - திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அரசியல் கட்சியல்ல - மாபெரும் மக்கள் இயக்கம். கறுப்பும் சிவப்பும் கலந்த திமுக கொடியைப் பற்றி ஒரு வார்த்தை. இக்கொடியில் உள்ள கறுப்பு, சமூகத் தீமைகளையும் இந்த நாட்டில் நிலவும் அநீதிகளையும் குறிக்கிறது. சிவப்பு நிறமோ இந்த நிலையை மாற்ற மக்களிடையே தோன்றி வளரும் புரட்சிகர உணர்வை உணர்த்துகிறது. தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள அதே நிறங்கள்தான் திமுக கொடியிலும் இடம்பெற்றுள்ளன. திராவிடர் கழகத்தின் கொடி முழுவதும் கறுப்பாகவும் நடுவில் மட்டும் சிவப்பு நிற வட்டமும் இருக்கும்.

திமுகவுக்கு இப்போது தமிழ் மக்களிடையே உருவாகியிருக்கும் செல்வாக்கானது முன்னுதாரணம் அற்றது. உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், தங்களுடைய ‘அண்ணன்’ இடும் கட்டளை எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றத் தயங்காதவர்கள் என்பது வெளிப்படை.மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததற்குக்கூடத் தங்களுடைய கட்சிதான் காரணம் என்று திமுகவினர் பெருமை பாராட்டுகின்றனர்.காரணம், அங்கே நடந்த மாபெரும் பொதுக்கூட்டங்களில் தமிழர்களிடையே உரையாற்றி அண்ணாதுரை எழுச்சியூட்டினார்.

அண்ணாதுரை அதிகமாக அவதூறுக்குள்ளானதற்கு, அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதே காரணம் என்று சொல்லலாம். அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்குக் காரணம், திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ராமசாமியின் ‘வழிகாட்டல்படி’ அவருடைய பாணியிலேயே அரசியலில் ஈடுபட்டதுதான். ஆனால், பெரியார் மீது இன்னமும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் அண்ணாதுரை.

தேச விரோதமான இயக்கத்தின் - எதிர்மறைக் கருத்துகளையே விதைப்பது என்று வழக்கமாகச் சித்திரிக்கப்படும் ஒரு கட்சியின் -தலைவரை முழுவதும் ஆதரித்துப் பேசுகிறேன் என்று வாசகர்கள் என்னைக் குற்றஞ்சாட்டாமல் இருப்பார்களாக! அண்ணாதுரைக்காகப் பரிந்து பேசுவது யாருக்கும் இங்கே அவ்வளவு எளிதாக இருக்காது.தொலைநோக்குப் பார்வை இல்லாத பிற்போக்குவாதி என்றே அண்ணாதுரையைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.உண்மை அதுதானா? குறுகிய பார்வையுள்ள பிற்போக்குவாதியா அண்ணாதுரை? ஆம், பொதுவெளியில் அவருக்குள்ள பிம்பத்தைப் பார்த்து மதிப்பிட்டால், அப்படித்தான் தெரிவார். ஆனால், அவரை உண்மையிலேயே தெரிந்துகொண்டுவிட்டால், ‘சாமானியர்களின் மனங்களில் வாழும் மிகப் பெரிய ஆளுமை அவர்’ என்று புரியும்.

தன்னுடைய உண்மையான தோற்றங்களை மறைக்க முகமூடி ஏதும் அணிய வேண்டிய அவசியம் இல்லாதவர் அண்ணாதுரை. எளிதில் நெருங்க முடிந்த, எதையும் தெளிவாகச் சொல்லிப் புரியவைக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் அண்ணாதுரையைப் போல மிகச் சிலர்தான் இருப்பார்கள். இருந்தாலும், அவரைப் பற்றித்தான் அவதூறாகவும் அபாண்டமாகவும் கருத்துகளைப் பரப்பியுள்ளனர். இதற்கு வன்மம்,அகந்தை, அறியாமை ஆகியவைதான் காரணம்.

அண்ணாதுரையை விமர்சிப்பவர்கள் அனைவரும், ‘அவர் முன்னேற்றத்துக்கு எதிரானவர்’ என்பார்கள் - காரணம், அவர் காங்கிரஸை எதிர்ப்பதால்! ‘அவர் கலாச்சாரத்துக்கு எதிரானவர்’ என்பார்கள் - காரணம்,அவர் பிராமணியத்தை எதிர்க்கிறார்! ‘அவர் இந்திக்கு எதிரானவர்’ என்பார்கள் – காரணம், அவர் மோசடியான ஒருமைப்பாட்டை எதிர்க்கிறார்! ‘அவர் கடவுளுக்கு எதிரானவர்’ என்பார்கள் - காரணம், அவர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார்!

அண்ணாதுரையின் ஆதரவாளர்களோ இந்தியாவுக்கு இப்போது மிகவும் அவசியமான தலைவர் அண்ணாதுரை மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கின்றனர். உண்மை என்பது இவ்விரு எதிரெதிர்க் கருத்துகளுக்கும் இடையில்தான் இருக்கிறது. ஒரு அரசியல்வாதியாக இருப்பதால்,அண்ணாதுரையைப் பொறுத்தவரை வரம்பின்றி வையும் வசவாளர்கள்,வாழ்த்தும் தம்பிகள் என்று இரு தரப்புக்கும் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது.அரசியல்வாதிகள் ஆகிவிட்டாலே எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து தூற்றப்படுவதும், ஆதரவாளர்களால் போற்றப்படுவதும் வாழ்க்கையாகிவிடுகிறது.

அண்ணாதுரையைச் சந்திப்பதே சுவாரஸ்யமானது. அவருடைய மனதுக்குப் பிடித்த விஷயங்களை - ஆனால், மற்றவர்கள் வெறுக்கும் விஷயங்களை -குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தால் வெகு அழகாக, ஆர்வமாக விவாதிப்பதில் வல்லவர். திண்மையான அவரது தோற்றத்துக்குப் பின்னால் விவரிக்க முடியாத ஒரு அருங்குணம் உங்களை ஈர்த்து, அவருடைய திறமை,நேர்மை குறித்து யாராவது, ஏதாவது சொல்லி, அதனால் உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகக் கரைத்துவிடுகிறது.

அண்ணாதுரையின் அறிவுக்கூர்மையானது, தான் கொண்ட கொள்கை மீது அவருக்குள்ள பிடிப்பினால் பட்டை தீட்டப்பட்டதாக ஜொலிக்கிறது.ஆகவே, தன்னுடைய பணிகளிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் முழுவதும் எதிர்மறையான அணுகுமுறைகளை அவர் கடைப்பிடிப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்றாலே, சிறிதளவு எதிர்மறையாகப் பேசுபவராகவோ சிந்திப்பவராகவோ இருந்துதான் தீர வேண்டும். ஆனால், அண்ணாதுரையோ மற்றவர்களின் மாயைகளை உடைத்துத் தகர்ப்பதுடன், தானும் எந்த மாயையிலும் சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்கிறார். இனி பேட்டிக்குள் செல்வோம்.

லுங்கி அணிந்துகொண்டு வெற்று மார்புடன் உட்கார்ந்திருக்கும் அண்ணாதுரை, வாயில் வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்.தலையை நிமிராமலேயே எதிரிலிருந்த பிரம்பு நாற்காலியைச் சுட்டிக்காட்டியபடி, “அமருங்கள்” என்கிறார். சில காகிதங்களில் கையெழுத்திட்டுக்கொண்டிருக்கிறார். தாள்களைப் பார்த்தபடியே, “நாம் ஒன்றும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் இல்லையே?” என்கிறார். “நிச்சயமாக இல்லை, இருந்திருந்தால் உங்களைப் பேட்டிகாண வருவேனா?” என்கிறேன். “இதைக் கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.தங்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களைப் பத்திரிகை ஆசிரியர்கள் பேட்டிகாணவே கூடாது” என்கிறார் அண்ணாதுரை. “என்னை வியப்படையவைக்கும் அல்லது கோபப்படவைக்கும் தலைவர்களை மட்டுமே பேட்டிகாண்பது என் வழக்கம் - காரணம், இரண்டுமே புரிதல் அடிப்படையிலானது” என்கிறேன். “புத்திசாலித்தனமான கொள்கை,நான்கூடப் பின்பற்ற வேண்டியது. நாம் ஒருவருக்கொருவர் புதியவர்கள் அல்ல என்று சொன்னேனே அது எதைப் பற்றி என்று ஊகித்துவிட்டீர்களா?” என்று கேட்கிறார் அண்ணாதுரை. அப்போது எல்லா காகிதங்களிலும் கையெழுத்திட்டு முடித்துவிட்டார். அவரது உதவியாளர் அவற்றைச் சரிபார்க்கிறார். பதிலுக்குக் காத்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டு அவரே பேசுகிறார், “நாம் இருவருமே பத்திரிகை ஆசிரியர்கள்; காஞ்சிபுரத்திலிருந்து ‘காஞ்சி’ என்ற தமிழ் வார இதழை நடத்திவருகிறேன். அதுவொன்றும் மோசமான பத்திரிகை இல்லை என்றே கருதுகிறேன்.”

எவ்வளவு பிரதி விற்கிறது?

குறைவில்லை. ஒரு பத்திரிகையின் தரம் அது எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதில் இல்லை. உங்களுடைய வாரப் பத்திரிகை விதிவிலக்காக இருக்கலாம். சஞ்சிகைகளுக்காகச் செலவிட எனக்கு ஓய்வு நேரமே இல்லை. அரசியல்வாதியின் நேரம் எதுவும் அவருக்குச் சொந்தமில்லை பாருங்கள்.

நீங்கள் எப்போதும் வேலைசெய்துகொண்டே இருக்க வேண்டும்,இல்லையா?

ஆம், ஆட்சிப்பொறுப்பில் உள்ள கட்சி, எங்களை எப்போதும் வேலைசெய்ய வைத்துக்கொண்டே இருக்கிறது.

திரு. அண்ணாதுரை, உங்களது கட்சி ஏன் இப்படி வசைபாடப்படுகிறது?

அப்படியா? என்னுடைய கட்சி மக்களால் பழிக்கப்படுகிறது என்று இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். எது எப்படியோ,உண்மையில் எங்களுக்கே அச்சம் ஏற்படும் அளவுக்கு மக்களிடம் நாங்கள் பிரபலமாகிக்கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் பின்னால் இருக்கின்றனர். அவர்கள் எவ்வளவு உணர்ச்சிமயமானவர்கள் என்பதையும்,அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நம்மால் எளிதில் ஊகிக்க முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா! இப்படிப்பட்ட கட்சித் தொண்டர்களின் ஆர்வம், ஆற்றல் ஆகியவற்றை அமைதியான முறையில் ஆக்கபூர்வமான பணிகளில் திருப்பிவிடுவது சாதாரணமான வேலையல்ல.

உங்களுடைய கொள்கைகள் எதிர்மறையாக இருக்கின்றன என்கிறார்கள். உங்கள் கருத்து?

பிற கட்சிகளுடையதைப் போல ஒரு பகுதி எதிர்மறையாகவும், ஒரு பகுதி நல்லதாகவும் இருக்கலாம்.

திமுக எப்படித் தோன்றியது? நீங்களோ உங்களுடைய மூத்த சகாக்களில் எவராவதோ, எப்போதாவது காங்கிரஸில் இருந்திருக்கிறீர்களா?

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்தவர்கள்தான் திமுகவைத் தொடங்கினோம். திராவிடர் கழகமானது திராவிட நாடு என்ற கொள்கைக்கு அதீத முக்கியத்துவம் தந்தது. 1949 செப்டம்பர் 17-ல் திமுக தொடங்கப்பட்டது. மாவட்ட அளவில் முன்னாள் காங்கிரஸ்காரர்கள் பலர் திமுகவில் இடம்பெற்றுள்ளனர். நான் காங்கிரஸில் இருந்ததே இல்லை.

தொடக்கக் காலத்தில் உங்களுடைய கட்சியின் முக்கிய லட்சியங்கள் என்ன?

1) திராவிட நாடு, 2) ஜனநாயகம், 3) சோஷலிஸம். காங்கிரஸைப் பொறுத்தவரை ‘ஜனநாயக சோஷலிஸம்’ என்பது வெறும் கோஷம்தான்.ஜனநாயகம், சோஷலிஸம் என்பது எங்களைப் பொறுத்தவரை வாழ்க்கை முறை. சாதி இல்லாத, வர்க்கம் இல்லாத சமூகத்தைப் பிரச்சாரம், சட்டம் ஆகியவற்றின்மூலம் உருவாக்குவோம். இவைதான் எங்களுடைய முக்கிய லட்சியம். ‘திராவிட நாடு’ கோரிக்கையை இப்போது திரும்பப்பெற்றுவிட்டோம். இது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனப் படையெடுப்பின்போது உணர்ந்தோம். பிரிவினைவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கொண்டுவந்த தடைச் சட்டமும் நாங்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முக்கியக் காரணம். இதற்கிடையே நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துவிட்டோம். உண்மையில், சீனப் படையெடுப்பின்போது தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவது தற்கொலைக்குச் சமமானது. திராவிட நாட்டுக்காக நாங்கள் நடத்திய போராட்டத்தைத் திரும்பப்பெறுகிறோம் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பினோம். எனவே, 1963 ஜூனில் எங்களுடைய கட்சியின் சட்டதிட்டங்களை இப்போது நிலவும் சூழலுக்கேற்ப முழு மனதுடன் திருத்தினோம். இப்போது எங்களுடைய அழுத்தமெல்லாம் நான்கு திராவிடத் தென்னிந்திய மாநிலங்களும் நெருங்கிச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

திமுகவின் இப்போதைய முக்கிய லட்சியங்கள் என்ன?

1) இந்திய அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட திராவிட ஒன்றியம். 2)உண்மையான கூட்டாட்சி நிலவும் வகையில், அரசியல் சட்டத்தைத் திருத்துவது. 3) மாநிலங்களுக்கு முழு சுயாட்சி. 4) சிறுபான்மைச் சமூகங்களும் பயனடையும் வகையிலான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், 5) ஜனநாயக சோஷலிஸம். 6) சாதி ஒழிப்பு.

பிற அரசியல் கட்சிகளுடன் திமுகவின் அணுகுமுறை என்ன?

காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆரம்ப உத்வேகம், வடிவம், அமைப்பு ஆகியவற்றை இழந்துவிட்டது. நாட்டில் ஒரு கட்சி ஆட்சி முறையை நிலைப்படுத்த அது ஆர்வம் காட்டுவதுபோல் தெரிகிறது.கம்யூனிஸ்ட்டுகளில் வலதுசாரிகளுடன் எங்களுக்குத் தொடர்பு இல்லை.காரணம், அவர்கள் காங்கிரஸ் ஆதரவு, திமுக எதிர்ப்பு நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முன்னால், கம்யூனிஸ்ட்டுகளுடன் அரசியல் தோழமை இருந்தது.சென்னை மாநகராட்சித் தேர்தலில் அவர்கள் எங்களை ஆதரித்தார்கள்,நாங்கள் அவர்களை ஆதரித்தோம். கம்யூனிஸ்ட்டுகளிலேயே இடதுசாரிகள் எந்த யோசனைகளுடனும் எங்களை அணுகவில்லை. அடுத்த பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள் அணுகினால், நாங்களும் எங்களுடைய எதிர்பார்ப்பை அவர்களிடம் தெரிவிப்போம். எல்லை தாண்டிய அவர்களின் நட்புறவு குறித்து - குறிப்பாக, சீனத்துடனான தொடர்பு - அவர்கள் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று வெளிப்படையாகவும் அழுத்தம் திருத்தமாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோருவோம். முஸ்லிம் லீக் கட்சியுடன் முன்பு சிறு அளவில் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.சுதந்திரா கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் மீது அனுதாபமும் நல்லெண்ணமும் மட்டுமே கொண்டிருக்கிறோம். தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எல்லா எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதன்மூலமாக மட்டுமே இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

திரு.அண்ணாதுரை, தொடக்கக் காலத்தில் ஏன் பிராமணர்கள் மீது வெறுப்பைக் கொட்டியது திமுக?

அப்போதும் சரி, இப்போதும் சரி, நாங்கள் பிராமணர்களை வெறுக்கவில்லை. இதை உங்களுடைய பத்திரிகை வாயிலாக வலியுறுத்திச் சொல்லுங்கள். உங்களுடைய மனத்திலிருந்தும் இந்த எண்ணத்தை நீக்கிவிடுங்கள். பிராமணர்கள் அதிக எண்ணிக்கையில் திமுகவில் சேர்வதைக் காணவே விரும்புகிறேன்.

 

அப்படி அவர்கள் வந்தால் உங்களுடைய தலைமைக்கே ஆபத்து ஏற்படலாம். நாளை ராஜாஜியே உங்கள் கட்சியில் சேர விரும்பினால்,உங்களுடைய தலைமைப் பதவியை அவருக்காக விட்டுக்கொடுப்பீர்களா?

ஓ, அப்படி அவர் சேர்ந்தால் அது திமுகவுக்குத் திருநாளாக அமையும்.ராஜாஜியின் தலைமையின் கீழ் செயல்படுவது எனக்குப் பெருமை,எனக்குக் கிடைத்த கவுரவம், நல்லூழ் என்பேன்.

திமுகவுக்கென்று லட்சியம் எதுவும் கிடையாது என்றும், அந்தந்தக் காலத்துக்கு எது சாதகமோ அதன் அடிப்படையிலேயே திமுக தன் கொள்கையை வகுக்கிறது என்றும் நான் கருதுகிறேன், அதை ஒப்புக்கொள்கிறீர்களா?

உங்களுடைய அனுமானம் மிகவும் தவறானது. கூட்டாட்சி முறை,மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை, சமத்துவம் என்று நாங்கள் வலியுறுத்துவதெல்லாம் லட்சியங்கள் இல்லையா?

உங்கள் கட்சியின் உயர்நிலையில் பிராமணர்கள் இருக்கிறார்களா?

இப்போதைக்கு உயர்நிலையில் இல்லை. தொண்டர்களாகப் பலர் இருக்கின்றனர். தன்னலமற்ற சேவையின்மூலம் அவர்களால் உயர் பதவிக்கு ஒருநாள் வர முடியும்.

இந்தியை ஆட்சிமொழியாகத் தென்னிந்தியா ஏற்பதில் உங்களுடைய ஆட்சேபங்கள் என்ன?

என்னுடைய முக்கியமான ஆட்சேபங்கள் ஆறு. முதலில்,தென்னிந்தியாவுக்கு ஆட்சிமொழியாக இந்தியை ஏற்க முடியாது.இரண்டாவது, அது பெரும்பான்மையினரின் அடக்குமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மூன்றாவதாக, தென்னிந்தியர்களை அது இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கிவிடும். நான்காவதாக, பல்வேறு மொழிகள் பேசும் நம்மைப் போன்ற ஒரு நாட்டில் எந்தப் பிராந்தியத்தின் மொழியும் மற்ற பிராந்தியத்தின் மொழிகளைவிட உயர்வானதோ தாழ்வானதோ அல்ல. ஆக, மற்ற மொழிகளைவிட இந்தி மீது மட்டும் தனி அக்கறை செலுத்தலாகாது. ஐந்தாவதாக, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி பேசும் மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துவது தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அதற்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்துவிடும். இறுதியாக, இந்தி இப்போதுள்ள நிலையில் நவீன அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் படிப்பதற்கு ஏற்ற வகையில் வளர்ந்திருக்கவில்லை. எனவே,மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உகந்ததாகவோ பொருந்தும்படியாகவோ இல்லை. இந்தி பேசுவோர் எண்ணிக்கைதான் அதிகம் என்பதால், இந்தி தேசிய மொழியாக வேண்டும் என்றால்,எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் காக்கையைத்தானே தேசியப் பறவையாக அறிவிக்க வேண்டும். ஏன் மயிலை அறிவித்தார்கள்?

பிற தென்னிந்திய மாநிலங்களில் உங்களுடைய கட்சிக்கு வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி - குறிப்பாக, கேரளத்தில்?

வளர்ச்சி வாய்ப்புகள் நன்றாகவே இருக்கின்றன.

பிற தென்னிந்திய மாநிலங்களில் திமுக வளர்ச்சியடையத் தவறிவிட்டது என்று சந்தேகிக்கிறேன், நான் நினைப்பது சரியா?

முதலில் இந்த மாநிலங்கள் நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை - குறிப்பாக, மொழிவாரி மாநிலமாக உருவாவது - எதிர்கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் மத்திய அரசுக்கு எதிரான உணர்வு அடிநீரோட்டமாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இது அதிகரிக்கும்போது எங்களுடைய கட்சியின் செல்வாக்கும் அதிகரிக்கும்.ஒரு தேசிய நெருக்கடி நேரத்தில் நாம் இதையெல்லாம் பேசக் கூடாது.மத்திய அரசை வலுப்படுத்துவதுதான் நம் அனைவருடைய இப்போதைய கடமை என்று நினைக்கிறேன்.

உங்களுடைய அடிப்படையான அரசியல் சிந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் காரணமாக மூன்று விஷயங்களை உங்களால் கூற முடியுமா?

முதலாவதாக, காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடியாமல்போனது. இரண்டாவதாக, அரசியல் சட்டம் வகுத்தளித்தபடி ஆளுங்கட்சிக்கு எதிராக, வலுவான எதிர்க்கட்சி தேவை என்பது.இறுதியாக, சந்தர்ப்பவாதிகளால் நிரம்பிவழியும் காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறுகளால், நம்முடைய இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தி. எனது ஆற்றலுக்கு மூல காரணமாக இருப்பவை ஜனநாயகம், சுதந்திரச் சிந்தனை ஆகியவற்றில் எனக்கிருக்கும் நம்பிக்கை.என்னுடைய அரசியல் ஆசான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.

மகாத்மா காந்தி இல்லையா? அரசியல் சார்பு கடந்து இந்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் அவர் பொதுச் சொத்தாக அல்லவோ கருதப்படுகிறார்?

நான் ஒரு விதிவிலக்கு என்றே கருதுகிறேன். காந்தியின் எளிமையான வாழ்க்கை முறை, எடுத்துக்கொண்ட செயலைச் செய்துமுடிப்பதில் உள்ள விசுவாசம், நற்குணங்கள் ஆகியவை காரணமாக காந்தி என் மனதைக் கவர்ந்திருக்கிறார். ஆனால், அழிக்க முடியாத முத்திரை எதையும் அவர் என்னுள் பதிக்கவில்லை.

பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டீர்கள் என்கிறீர்கள்; இதை மீண்டும் ஒருமுறை (இப்பேட்டிமூலம்) சொல்வீர்களா? உங்களை எதிர்ப்பவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ளட்டும். நீங்கள் இன்னமும் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடவில்லை என்று கருதி, உங்கள் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்?

நான் பிரிவினைவாதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் என்னைத் தொடர்ந்து வெறுத்துக்கொண்டிருப்பார்கள். காரணம்,என்னுடைய கொள்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை,என் முகத்தைப் பார்க்கக்கூட அவர்களுக்குப் பிடிக்காதிருக்கலாம். நீங்கள் மீண்டும் கேட்பதால், உங்கள் பத்திரிகை வாயிலாக எண்ணற்ற வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன், நான் பிரிவினைவாதியல்ல.பிரிவினைவாதியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.எனது கனவை இந்திய அரசியல் சட்டத்தின் சட்டகத்துக்கு உட்பட்டே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

உங்களுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாகச் சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு இதில் ஆட்சேபம் இருக்கிறதா? உங்களுடைய தொடக்கக் காலம், பெற்றோர், கல்வி,வேலை தொடர்பாக. சமீப காலம் வரையில் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. உங்களைப் பற்றி முதல் முறையாக நான் அறிந்துகொண்ட விதத்துக்காக உங்களை மன்னிக்கவே முடியாது.சென்னையில் திரைப்படம் பார்க்க டாக்ஸியில் சென்றேன். என் வாழ்க்கையில் சந்தித்திராத பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினேன். அதனால், திரைப்படம் பார்க்க முடியவில்லை. ஏன் நெரிசல் என்று கேட்டேன். ‘அண்ணாதுரையைச் சிறையிலிருந்து விடுதலை செய்துவிட்டார்கள். அவரை வரவேற்க முன்னால் பெரிய ஊர்வலம் செல்கிறது’ என்றார் டிரைவர்...

போக்குவரத்து நெரிசலுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.என்னைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. விவசாயக் குடும்பம் எங்களுடையது. மத்தியதர வர்க்கத்தில் கீழ் நிலையைச் சேர்ந்தது. என்னுடைய பெற்றோர்கள் அரசியலிலோ பொதுவாழ்விலோ ஈடுபட்டதில்லை. அம்மா உயிரோடு இருக்கிறார். பிறப்பால் நான் ஒரு நெசவாளி. பிரபலமான காஞ்சிபுரம் பட்டுச்சேலை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்களுடைய சமூகம்தான் அவற்றைப் பிரபலமாக்கியது. பச்சையப்பன் கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். சென்னை பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினாலும் வேலைக்குப் போக வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. மாணவனாக இருந்தபோது பத்திரிகைத் தொழில் மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய குரலைக் கேட்பதிலும் விருப்பம் மிகுதி. மாணவனாக இருந்தபோது ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் பேச்சுப் போட்டிகளில் பேசிப் பிரபலமானேன். இதற்கும் மேல் சொல்ல என் வாழ்க்கையில் சுவாரஸ்யமாக ஏதும் இல்லை. நாம் வேறு எதையாவது பேசுவோம்.

உங்களுடைய கட்சிக்கு மதறாஸில் ஆதரவு அதிகம் என்று தெரிகிறது.அதன் எந்தத் திட்டம் இதற்குக் காரணம் என்று கருதுகிறீர்கள்?

இந்த மண்ணில் வேர்கொண்ட கட்சி இது என்று உறுதியாக நம்புகிறவர்கள் மட்டுமே இதை ஆதரிக்கின்றனர். ஆதாயம் பார்க்கிறவர்களுக்கும் அரசியலைத் தொழிலாகப் பார்க்கிறவர்களுக்கும் எங்கள் கட்சியில் இடம் கிடையாது. அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ்தான் வேட்டைக்காடு. தமிழ்ச் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் தமிழ்க் கலாச்சாரத்துக்குப் புத்துயிர் கொடுப்பதும்தான் எங்களுடைய நோக்கம்.சாமானியர்களிடம் அவர்களுடைய மொழியிலேயே எங்களால் உரையாட முடியும்.

சீன - இந்திய எல்லை மோதல் குறித்து உங்களுடைய கருத்து என்ன?சீனாதான் ஆக்கிரமித்தது என்று நினைக்கிறீர்களா? இந்த முட்டுக்கட்டை நிலையை இந்தியாவால் எப்படித் தீர்க்க முடியும்?

சீனாதான் ஆக்கிரமித்தது. இதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியுமா?சீனாவின் நோக்கங்கள் ஆபத்தானவை என்று எப்போதுமே கருதிவந்திருக்கிறேன். முதல் பாண்டுங் மாநாட்டிலிருந்தே இந்தியா மீது சீனாவுக்குப் பொறாமை. ஆசியாவின் தலைமையை இந்தியாவிடமிருந்து பறித்துவிட வேண்டும் என்பது சீனாவின் எண்ணம். அதற்குப் பிறகு,கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக வேண்டும் என்றும் ஆவல்.ஜனநாயக சக்திகளுடன் உறவை வலுப்படுத்திக்கொண்டும், எல்லைப்புற நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக்கொண்டும் நாம் இதைத் தீர்க்கலாம்.

சீனாவைவிட பாகிஸ்தான்தான் பெரிய எதிரி என்று உணர்கிறேன்.சீனாவுடன் நமக்குச் சமாதானம் ஏற்பட்டுவிட்டால், பாகிஸ்தானால் நமக்குப் பிரச்சினை இருக்காது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.நீங்களும் அப்படி நினைக்கிறீர்களா?

உங்களுடைய கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை.பாகிஸ்தானுடனான நமது சச்சரவு, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைவிடப் பழையது. இந்தியா மீதுள்ள வெறுப்பால் பாகிஸ்தானும் சீனாவும் நெருங்குகின்றன. பாகிஸ்தானுடனான பிரச்சினையை எவ்வளவு விரைவாகத் தீர்த்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு விரைவாகத் தீர்ப்பது நல்லது. இதில் ஐக்கிய நாடுகள் சபை,காமன்வெல்த் அமைப்பு ஆகியவற்றின் உதவிகள் நமக்குத் தேவை என்று நினைக்கிறேன்.

சாஸ்திரி அரசு பற்றி உங்கள் கருத்தென்ன? இந்த அரசின் சாதனைகளுக்காக அவரைப் பாராட்டவும் முடியாது, இதன் தோல்விகளுக்காக அவரைக் குறை சொல்லவும் முடியாது. காரணம்,அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான, போதுமான நேரம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. நேரு ஆட்சி செய்த தவறுகளுக்கும் செய்யத் தவறிய நல்லவற்றுக்கும் இவர்தான் பலி ஆடாக வேண்டியிருக்கிறது. உங்களுடைய கருத்தென்ன?

சாஸ்திரி இன்னும் வலுவாகத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஓரளவு உண்மையே. நேருவின் மறைவு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேரொளி மறைந்துவிட்டது. அதை இன்னொருவரால் இட்டுநிரப்ப முடியாது. சாஸ்திரி புத்திசாலித்தனம் மிகுந்த ராஜதந்திரி. இந்தியாவுக்கு மெத்தப் படித்த பண்டிதர்கள் அல்ல,சமயோசிதத்துடன் செயல்படக்கூடிய தலைவர்களே இப்போது தேவை.பெரிய தலைவர்கள் அல்ல; வலுவான தலைவர்களே தேவை.தன்னுடைய இருப்பை வலுப்படுத்திக்கொண்டுவிட்டார் சாஸ்திரி.காமராஜரின் ஆதரவு அவருக்குப் பெரிய பலம். நேரு தன்னுடைய ஆளுமையாலும் தனக்கிருந்த செல்வாக்காலும் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை.நேருவைக் காட்டிலும் சாஸ்திரிக்கு சவால்கள் அதிகம். ஆனால்,நேருவுக்கு இருந்த மேதைமையும் கவர்ச்சியும் சாஸ்திரிக்கு இல்லை.எனினும், நம் நாட்டுக்கு இப்போது சரியான தலைவர் சாஸ்திரிதான்.

மதறாஸ் மாநில அரசு பற்றி உங்களுடைய தனிப்பட்ட கருத்தென்ன?மிகவும் சிலாக்கியமாக எல்லோரும் பேசுகிறார்கள்.

பாராட்டுதல்களுக்கு உரிய நிர்வாகம்தான். சிவப்பு - நாடா முறை, ஊழல்,பழிவாங்கல், வேண்டுவோருக்குச் சலுகை செய்தல் என்று சில குற்றச்சாட்டுகள் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக அவ்வப்போது கூறப்படுகின்றன. அவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை.எனினும், திறமைக் குறைவு என்ற குற்றச்சாட்டை யாரும் கூறவில்லை.

மத விலக்குக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா?

ஆம்! ஆனால், காங்கிரஸைப் போல உணர்ச்சிவசப்பட்டல்ல. நம்முடைய மக்களால் அதிகம் செலவழித்து நல்ல சரக்கை வாங்கிச் சாப்பிட முடியாது. தரம் குறைந்த நாட்டுச் சரக்கை வாங்கி அவர்கள் உடலைக் கெடுத்துக்கொள்வதையும் நான் விரும்பவில்லை. நாம் இப்போது நாட்டை மறு கட்டமைப்பு செய்து வளர்க்கும் பெரிய காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இதில் ஒரு தலைமுறை, குடிக்கு அடிமையாவது நம்முடைய நாட்டுக்கே சுமையாகிவிடும்.

மதத்தைப் பற்றிய கேள்விக்கு வருவோம். உங்களை நாத்திகர் என்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?

இல்லை. நிறுவனமயமாகும் மதங்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை.மதம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது என்னுடைய முடிவு. நான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவன். விக்கிரகங்களை வழிபடவும் மாட்டேன், விக்கிரகங்களை உடைப்பதை ஆதரிக்கவும் மாட்டேன்.

நன்றி திரு.அண்ணாதுரை. எனது அடுத்த சந்திப்புக்கு நேரமாகிவிட்டது.நான் புறப்பட அனுமதியுங்கள். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.பம்பாய்க்கு வந்திருக்கிறீர்களா? மிக விரைவிலேயே உங்களை அங்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

தங்களுடைய வருகைக்கு நன்றி. இச்சந்திப்பின்மூலம் நாம் மேலும் நெருங்கியவர்களாகிவிட்டோம். போய்வாருங்கள்.

தமிழில்: சாரி

(‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...)

புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x