Last Updated : 24 Mar, 2019 09:05 AM

 

Published : 24 Mar 2019 09:05 AM
Last Updated : 24 Mar 2019 09:05 AM

இதுதான் இந்தத் தொகுதி: சிதம்பரம் (தனி)

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதி கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவியிருக்கும் தொகுதி. கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி; அரியலூர் மாவட்டத்தின் அரியலூர், ஜெயங்கொண்டம்; பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும். ஸ்ரீநடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று புகழ்பெற்ற இடங்கள் கொண்டது இதன் தனிச்சிறப்பு.

பொருளாதாரத்தின் திசை: சிமென்ட் தொழிற்சாலைகள், தனியார் கரும்பாலை ஆகியவை இந்தத் தொகுதியின் பொருளாதாரத்தைக் கட்டமைக்கின்றன.

இவற்றைத் தவிர வேறு பிரதான தொழிற்சாலைகள் எதுவும் இந்தத் தொகுதியில் இல்லை. நெல், கரும்பு, முந்திரி, சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தொகுதி. விவசாயத் தொழிலாளர்கள் அதிகம்.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சோளம், பருத்தி,. கரும்பு, நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று குன்னம் விவசாயிகள் கோரிவருகிறார்கள். திருச்சி – சிதம்பரம், பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகளை இரண்டு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று அரியலூர் மக்கள் விரும்புகிறார்கள். பொன்னேரிக்கும், சுத்தமல்லி நீர்தேக்கத்துக்கும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் வர வழித்தடம் வேண்டும் என்பது ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் கோரிக்கை. என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர வேலை கேட்கிறார்கள் புவனகிரி மக்கள். சிதம்பரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன.

நீண்டகாலக் கோரிக்கைகள்: குன்னம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் எனும் கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. மானாவரிப் பயிர்களான சோளம், பருத்தி, கரும்பு, நெல் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமானூர், தா.பழூர் பகுதி விவசாயிகள் கொள்ளிடத்தில் தடுப்பணை கோருகிறார்கள். திருமானூரில் நவீன அரிசி ஆலை, அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கை. ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக நிதி வழங்கப்பட வேண்டும். முந்திரி தொழிற்சாலை,  நெசவு தொழிலாளர்களுக்கு இலவச மின் இணைப்பு, பொன்னேரியை ஆழப்படுத்துதல், வீராணம் ஏரியைத் தூர்வாருதல் என்று பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கின்றன.

ஒரு சுவாரஸ்யம்: சிதம்பரம் தொகுதியில் ஏற்கனவே நான்கு முறை போட்டியிட்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஒவ்வொரு  முறையும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாகப் போட்டியிடும் அவருக்கு இந்த முறையும்  தனிச்சின்னம் (பானை) ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னிய சமூகத்தினர், பட்டியலின சமூகத்தினர் சம அளவில் வசிக்கும் தொகுதி. மூப்பனார், உடையார், முதலியார் சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.  கட்சி அளவில் அதிமுக, திமுக ஆகியவை சம பலத்துடனும், பாமக, விசிக இரண்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கட்சிகளாகவும் இருக்கின்றன. தேமுதிக, ஜஜேகே, மதிமுக, பாஜக ஆகிய நான்கு கட்சிகளுக்கும் கணிசமான அளவு வாக்குகள் இங்கு உண்டு!

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இதுவரை காங்கிரஸ் ஆறு முறையும், திமுக நான்கு முறையும், பாமக மூன்று முறையும், அதிமுக இரண்டு முறையும், விசிக கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. 1999 மற்றும் 2004 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த தொல்.திருமாவளவன்,  தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் 2009 தேர்தலில் வென்றார்!

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,59,735

ஆண்கள் 7,28,368

பெண்கள் 7,31,315

மக்கள்தொகை எப்படி?

மொத்தம் 17,51,682

ஆண்கள் 8,74,038

பெண்கள் 8,77,578

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 69%

முஸ்லிம்கள்: 14%

கிறிஸ்தவர்கள்: 15%

பிற சமயத்தவர் 2%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 75%

ஆண்கள் 80%

பெண்கள் 70%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x