Published : 21 Mar 2019 09:58 AM
Last Updated : 21 Mar 2019 09:58 AM

360: முடிவுக்கு வருகிறதா அத்வானியின் அரசியல் சகாப்தம்?

குஜராத் தலைநகர் காந்தி நகர் தொகுதியில் 1991-லிருந்து 2014 வரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்குத் தொடர் வெற்றிதான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டதால் 1996 தேர்தலில் மட்டுமே அவர் போட்டியிடவில்லை. மக்களிடம் மிகப் பெரும் செல்வாக்கு இருந்தும், இம்முறை காந்தி நகரில் போட்டியிடக் கட்சியிடம் விருப்பம் தெரிவிக்கவில்லை; கட்சியும் அவரிடம் இது குறித்துக் கேட்கவில்லை. இந்தத் தொகுதியில் போட்டியிடக் கட்சியில் யாரும் விருப்ப வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றாலும், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இங்கே போட்டியிட வேண்டும் எனத் தொண்டர்களில் பலரும் விரும்புகிறார்கள் என்றும், அத்வானிக்கு வயது 91 ஆகிவிட்டதால் அவருக்கு ஓய்வு தர வேண்டும் என்றும் கட்சிக்குள் சலசலப்புக் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு எதையும் கட்சி நிர்ணயிக்கவில்லை, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பதவி தரத்தான் கட்டுப்பாடுகள் உண்டு என்கின்றன கட்சி வட்டாரங்கள். அத்வானி மீண்டும் போட்டியிடுவாரா?

தேவ கவுடாவின் சமரச முயற்சி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியோடு நீண்ட காலமாக முட்டி மோதிக்கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நிர்வாகிகளை சமாதானம் செய்துவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தேவ கவுடா. ‘வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. நேரம் மிகக் குறைவாக உள்ளது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்களுக்கிடையே இருக்கும் மனவேறுபாடுகள் என்னவாக இருந்தாலும் உடனடியாகப் பேசித் தீர்த்தாக வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.

கர்நாடகாவின் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள்தான் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எதிரெதிர் துருவங்களாக முறைத்துக்கொண்டு இருந்தால் எப்படி தேர்தலைச் சந்திப்பது என்பதுதான் காங்கிரஸ் கூட்டணியின் மிகப் பெரிய பிரச்சினை. தனது சமாதான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் தேவ கவுடா, இம்மாதக் கடைசியில் ராகுல் கலந்துகொள்ளும் மிகப் பெரிய பேரணிக்குத் திட்டமிட்டிருக்கிறார். அதில் இரண்டு கட்சியினரும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்புவிடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x