Published : 22 Feb 2019 09:57 AM
Last Updated : 22 Feb 2019 09:57 AM

டிரம்பால் ஏன் எதையும் உருவாக்க முடியவில்லை?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சாதனை என்று சொல்லிக்கொள்ளும் வகையில் மிகப் பெரிய கட்டுமானம் எதையும் அவர் மேற்கொள்ளவில்லை; இப்படி மேற்கொள்ளாத முதல் அதிபர் அதிலும் குடியரசுக் கட்சியின் அதிபர் அவர் மட்டுமல்ல. பல அதிபர்கள் உண்டு. ஆனால், ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்தபோது நில மானியங்களை வழங்கி, கண்டங்களுக்கு இடையிலான ரயில் பாதையை உருவாக்கினார். தியடோர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாய் வெட்டினார். ஐஸன்ஹோவரோ அமெரிக்க மாநிலங்களுக்கு இடையில் நெடுஞ்சாலைகளை அமைத்தார்.

அதிபர் டிரம்ப் இப்போது கட்ட விரும்பும் ‘சுவர்’ வித்தியாசமானது; அவரால் கட்ட முடியாது என்பதற்காக மட்டுமல்ல இதற்கு முந்தைய அதிபர்கள் மேற்கொண்ட கட்டுமானங்கள் அனைத்துமே மக்களை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கும் நாட்டுக்கும் பயன்தரவும் உதவின. அமெரிக்காவையும் மெக்ஸிகோவையும் பிரிக்க டிரம்ப் கட்ட விரும்பும் பிரம்மாண்டமான மதில் சுவர் அமெரிக்கர்களையும் மெக்ஸிகர்களையும் மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்குள்ளேயேகூட பிளவை ஏற்படுத்திவிடும். இது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டுமானம், இதில் மக்களுக்கு எதிர்காலமில்லை.

வெற்றுப் பேச்சுகள்

அதிபராகப் பதவி வகித்த இத்தனை ஆண்டுகளில் டிரம்ப் ஏன் எதையும் கட்டவில்லை? அரசியல் பிரச்சாரத்துக்காகவும் தேர்தல் ஆதாயத்துக்காகவும் பொதுமக்கள் வரிப் பணத்தில் எதையாவது உருவாக்கி, அதில் தன்னுடைய பெயரைப் பொறித்துவிட வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்தான் டிரம்ப். 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுவர் கட்டுவதைப் பற்றி மட்டும் அவர் பேசவில்லை, அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானத்தையே பேரளவில் உருவாக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

மாதங்கள் பல உருண்டோடியும் செயலற்ற நிலையிலேயே அவர் தொடர்கிறார். ஓராண்டுக்கு முன்னால்கூட அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இருந்திராத வகையில் மிகப் பெரிய, மிகத் துணிச்சலான அடித்தளக் கட்டுமானத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

செயலற்ற தன்மை

நொறுங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலைகள், பாலங்கள், தண்ணீர்க் குழாய்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு, புதிதாக உருவாக்க ஏன் டிரம்பால் முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்ற கேள்வி எழுகிறது. அடித்தளக் கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்யப்படுவதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். பொது நன்மைக்கான முதலீடுகளை மேற்கொண்டால் ஜனநாயகக் கட்சியிடமிருந்துகூட கணிசமான ஆதரவைப் பெற்றுவிட முடியும்; அது பொருளாதாரத்தைக் கைதூக்கிவிடும். அரசு நிர்வாகம் திறனிழந்துவிட்டது; குழப்பத்தில் இருக்கிறது என்ற கண்ணோட்டமும் மாறிவிடும்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு அடித்தளக் கட்டமைப்பு தொடர்பாக வெறும் பேச்சுதான் தொடரும், செயல் எதுவும் இருக்காது என்றே தோன்றுகிறது, ஏன் இந்த செயலற்ற தன்மை?

இதற்கு முக்கியக் காரணம் நிதிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்; அடித்தளக் கட்டுமானங்களுக்கு எப்படிச் செலவிடுவது என்பதில் குடியரசு, ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டால்தான் நிதியை ஒதுக்க முடியும். ஆனால், இது நம்பும்படியாக இல்லை. 2017 நிதிநிலை அறிக்கையில் 2 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புக்கு வரிச் சலுகை அளித்தது டிரம்பின் குடியரசுக் கட்சி. மக்கள் அந்தப் பணத்தை அப்படியே தொழில் துறையில் முதலீடு செய்வார்கள், அது உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் நிகழ்ந்ததாகச் சுவடே இல்லை. இப்படியொரு சலுகையை ஏன் வழங்கினோம் என்று அரசும் வருத்தப்படவில்லை!

மேம்போக்கான பார்வை

தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்க, கடன் வாங்குவது குறித்து குடியரசுக் கட்சியினர் கவலைப்படுவதே கிடையாது. நிதிப் பற்றாக்குறை குறித்த அச்சம் அதீதமானது என்பது ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்து. எனவே, அடித்தளக் கட்டமைப்புக்காகக் கடன் வாங்கிச் செலவு செய்வதற்குக்கூட அவர்கள் ஆதரவு தருவார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், பணம் இல்லை என்பதால் அடித்தளக் கட்டமைப்புகளில் செலவுசெய்ய முடியாமல் போய்விடவில்லை. உண்மையான தடை டிரம்ப், அவருடைய அதிகாரிகள், அவருடைய கட்சி ஆகியவைதாம். அமெரிக்காவுக்குத் தேவைப்படும் பொது முதலீட்டுக்காகச் செலவிட அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் எதையும் உருவாக்க மாட்டார்கள்.

டிரம்ப் அரசில் உள்ள அதிகாரிகள், வெவ்வேறு அடித்தளக் கட்டமைப்புத் திட்டங்களை முன்வைக் கிறார்கள், ஆனால், எல்லாமே ‘மேம் போக்கான யோசனைகள்’தான். அவற்றில் பொது முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகளும் கிடையாது. அதேசமயம், பொதுப் பணத்தை எடுத்து தனியார் முதலீட்டுக்கு உதவும் திட்டங்களில் செலவிடுவதிலேயே அதிகாரிகள் ஆர்வமாக இருக்கின்றனர். ஏன் கட்டுமானங்களில் செலவிட விரும்புவதில்லை? செலவு அதிகரித்துவிடாமல் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல, பொதுச் சொத்துகளைத் தனியார்மயப்படுத்தவும் அவர்களுடைய திட்டங்கள் உதவுகின்றன. எனவேதான், புது முதலீட்டில் ஆர்வம் காட்டுவதில்லை.

உண்மையான அடித்தளக் கட்டுமானப் பணிகளுக்கான முதலீடு என்றால், மாற்றுக் கட்சியாக இருந்தாலும் ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள். ‘சலுகைசார் முதலாளித்துவத்தை’ ஆதரிக்கும் எண்ணம் குடியரசுக் கட்சியினருக்கு இருப்பதால், பொது முதலீடு முக்கியத்துவம் பெறவில்லை என்பதே உண்மை.

டிரம்ப் மட்டுமல்ல, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது முதலீட்டுத் திட்டம் என்றால் ஆர்வம் காட்டுவதில்லை. டிரம்பின் பதவிக் காலத்து முதலிரண்டு ஆண்டுகள் இப்படியே அவரை மிரட்டி, பொது முதலீட்டுக்கு நிதி ஒதுக்காமல் பார்த்துக்கொண்டனர். பிறகு, அதற்கு போலியான காரணங்களையும் கண்டுபிடித்துக் கூறலாயினர்.

தண்டிக்கப்படும் மக்கள்

நவீன காலமாக இருந்தாலும், பழமைவாத அரசியல் சிந்தனையாளர்கள் பொது நன்மைக்காக அரசு செலவுசெய்வதை வெறுக்கிறார்கள். அதனால், அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றாலும் வேண்டாம் என்கிறார்கள். மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதத்தில் அரசின் செலவுகள் அமைந்தால் நிர்வாகத்தில் அரசுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு அதிகரித்துவிடும். தான் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி, அரசின் தலையீடு மிகக் குறைவாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவதை டிரம்ப் முழுதாக ஏற்கவில்லை; ஆயினும் அவரிடமுள்ள ‘குறைந்த செயலாற்றலானது’ மக்களுக்கு உதவுவதைவிட - அவர்களைத் தண்டிப்பதிலேயே செலவாகிக் கொண்டிருக்கிறது.

அப்படியானால், அமெரிக்காவை யார்தான் புதுப்பித்து உருவாக்குவார்கள்? டிரம்புக்கும் அவருடைய கட்சிக்கும் வாய்ப்பு தரப்பட்டது. அவர்கள் அதன்படி செயல்பட மறுத்துவிட்டதால் அடுத்த வாய்ப்பு ஜனநாயகக் கட்சிக்குத்தான் தரப்பட வேண்டும். அவர்கள் புதிதாக அறிவித்துள்ள ‘பசுமை செயல்திட்டம்’ போதிய விவரங்களுடன் இல்லை என்றாலும், பொது நலனில் அக்கறை கொண்ட பொது முதலீட்டை அதுதான் புதுப்பிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

என்னுடைய கணிப்பும் விருப்பமும் அதுவே 2021-ல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராகப் பதவியேற்றால், அடித்தளக் கட்டமைப்புகளுக்குச் செலவிட நிதியை ஒரு தடையாகவே கருதமாட்டார்கள்; சுகாதாரச் சீர்திருத்தத்துக்கும் அதிக நிதி தேவைப்படும். வட்டி வீதம் குறைவாக இருக்கும் நேரத்தில் கடன் வாங்கி பொதுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்ல கொள்கையாகவே இருக்கும். அடித்தளக் கட்டுமானங்களை உருவாக்கியாக வேண்டும், உருவாக்குவோம், நிச்சயம் உருவாக்குவோம் என்று நம்புவோம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x