Last Updated : 21 Feb, 2019 09:52 AM

 

Published : 21 Feb 2019 09:52 AM
Last Updated : 21 Feb 2019 09:52 AM

யாதும் தமிழே: தமிழ்க் கல்வி என்பது தமிழ்வழிக் கல்வி மட்டுமல்ல!

இன்றைய கல்விச் சூழலை விவாதிக்கும் ‘தமிழ்க் கல்வி’ அமர்வில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மட்டுமே பங்கேற்ற நிலையில், அமர்வை ஒருங்கிணைத்த ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸும் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் கலந்துரையாடுவதுபோல நெருக்கமாக அமைந்துவிட்டது. கல்வித் துறை சார்ந்த அவலங்களைப் பேசுகையில் மொத்த அரங்கையும் உணர்ச்சிக் கடலுக்குள் தள்ளிவிட்டார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

சமஸ்: தமிழ்க் கல்வி என்று நாம் பேசும்போது பலரும் தமிழ்வழிக் கல்வி என்றே அதைச் சுருக்கி நினைக்கிறார்கள். அது மட்டும்தானா? கல்வியை உள்ளூர்மயப்படுத்துவது தொடர்பில் நாம் பேசும்போது, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் கல்வித் துறையைக் கொண்டுவருவது மட்டும் அல்ல; வட்டாரத்துக்கு ஒரு பாடத்திட்டம், பள்ளிக்கூடங்கள் தமக்கேற்ப அதை வடிவமைத்துக்கொள்வது என்ற அளவுக்கு அதிகாரப் பரவலாக்கம் தேவை என்றும்கூடத் தோன்றுகிறது. முக்கியமாக, பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று தனியார் பள்ளிகளில் படிக்கும் சூழலில், நாம் பேசும் கல்விச் சீர்திருத்தங்களில் தனியார் பள்ளிகளை எப்படி உள்ளிழுக்கப்போகிறோம்?

தனியார் பள்ளிகளையும் இணைத்துக்கொண்டுதான் நாம் சீர்திருத்தத்தில் இறங்க வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திரபாபு

நிச்சயமாக, தமிழ்வழியில் படிப்பதை மட்டும் தமிழ்க் கல்வி என்று நாம் சொல்லவில்லை. கல்வியின் நோக்கம் என்பது ஒரு மாணவனை நல்ல மனுஷனாக மாற்றுவதுதான். தமிழ்க் கல்வி என்று நாம் சொல்கையில், தமிழ்வழியே படித்த ஒருவரை உலக மனிதனாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம். ஒரு சமூகத்தின் உணர்வை வெகு இயல்பாகத் தாய்மொழிவழிக் கல்வியில்தான் பிரதிபலிக்க முடியும் என்பது உலகளவில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

thaniyaarjpg

அதனாலேயே தாய்மொழிவழிக் கல்வியாக அந்தக் கல்வி அமைய வேண்டும் என்கிறோம். ‘ஒரு சமூகத்தை மாற்ற வேண்டுமானால் உரையாடலை நிகழ்த்துங்கள்’ என்று சொன்னார் பாவ்லோ பிரேயர். பொதுப்பள்ளி முறையில்தான் இது சாத்தியம். பொதுப்பள்ளி என்றால் என்ன? ஒரு ஊரில் உள்ள எல்லாச் சாதி, மத, வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் படிக்கும் பள்ளியைப் பொதுப்பள்ளி என்று நாம் சொல்கிறோம். இந்த வகையான பள்ளியில்தான் வாழ்க்கையின் பல்வேறு தரப்புகளோடும் உரையாடும், உறவாடும் வாய்ப்பை ஒரு குழந்தை பெறுகிறது.

இந்தியா போன்ற பல மாநிலங்களைக் கொண்ட நாட்டில், கல்வியென்பது அந்தந்த மாநில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாட்டுக் கூறுகள், அவர்கள் பேசும் மொழி ஆகியவை குறித்த புரிதலையும் தெளிவையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கற்பித்தல் முறைகளும் பாடத்திட்டமும்கூடப் பள்ளிக்குப் பள்ளி மாற்றிக்கொள்ளும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். வட்டார வழக்குமொழி குறித்துகூட நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. பாடத்திட்டங்களில் பன்முகத்தன்மை வேண்டும்.

இவை அத்தனையும் இணைத்துதான் நாம் ‘தமிழ்க் கல்வி’ என்று பேசுகிறோம். சீர்திருத்தம் என்று பேசும்போது நாம் எல்லோரையும் இணைத்துக்கொண்டுதான் பேச வேண்டும். தனியார் பள்ளிகளும் இந்தச் சீர்திருத்தங்களுக்கான முயற்சியில் கை கோக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x