Published : 20 Feb 2019 08:29 AM
Last Updated : 20 Feb 2019 08:29 AM

கேள்வி நீங்கள் பதில் சமஸ்: நாட்டுப்பற்று என்பது நிலப்பரப்பின் மீதான பற்று அல்ல!

தமிழ்க் கொண்டாட்டத்தின் மாலை அமர்வுகளின் தொடக்கம் வாசகர்களுக்கானதாக அமைந்தது.

‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் மேடை ஏற பல்வேறு விஷயங்கள் தொடர்பிலும் தங்களது கேள்விகளை வீசினார்கள் வாசகர்கள். அரை மணி நேரம் திட்டமிட்டிருந்த ‘கேள்வி நீங்கள் – பதில் சமஸ்’ நிகழ்வு ஒரு மணி நேரத்தைத் தாண்டியும் சென்றது. ஆனாலும் ஏராளமானோர் இன்னும் கேள்விகளுடன் காத்திருந்தனர். உற்சாகமான உரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இங்கே.

ஆங்கிலத்துக்கான உரைக்கல்லாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளி வருகிறது. ஆனால், ‘இந்து தமிழ்’ நாளிதழில் இலக்கணப் பிழைகளும், ஒருமைப் பன்மைப் பிழைகளையும் பார்க்க நேரும்போது வேதனை மேலிடுகிறது. இந்நிலை ஏன்?

குற்றவுணர்வு தரக்கூடிய மிக நியாயமான கேள்வி இது. மொழிப் பயன்பாட்டில் பிழையற்றதன்மைக்குத் தமிழ் நாளிதழ் நிர்ணயித்திருக்கும் தரம் எந்த வகையிலும் ஆங்கில நாளிதழுக்குக் குறைந்ததில்லை. ஆனாலும், பிழைகள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன. நாங்கள் மேலும் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்த்துகிறீர்கள்; எடுத்துக்கொள்கிறோம். அதேசமயம், இந்தப் பிழைகள் ஒரு பத்திரிகை அல்லது நிறுவனத்தின் செயல்பாடோடு மட்டுமே தொடர்புடையது அல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ‘இந்து தமிழ்’ நாளிதழில் இன்று பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் இதற்கு முன் வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். பெரும்பான்மைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களின் தமிழ்ப் பயன்பாடு இன்றைக்குச் சங்கடமான நிலையிலேயே இருக்கிறது. பத்திரிகையாளர்கள் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல இது. இன்றைக்கு நம்மூரில் உள்ள தொண்ணூறு சதம் கல்லூரி மாணவர்களுக்கும், கணிசமான ஆசிரியர்களுக்கும்கூட பிழையற்ற ஒரு கடிதம் தமிழில் சாத்தியம் இல்லை என்பதே நிதர்சனம். ஆங்கிலத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது தாழ்வுணர்வும், குற்ற மனப்பான்மையும் கொள்பவர்கள் “எனக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது” என்று சொல்வதை பெருமையாகப் பேசும் அவலம் தமிழ்நாட்டினுடையது. பிரிட்டன் போயிருந்தபோது, பிரிட்டிஷாரின் சாப்பாட்டு மேஜைகளில் ஆங்கில அகராதி இருப்பதைப் பார்த்தேன்.

ஒரு வார்த்தை அவர்களுக்குத் தெரியாததை நாம் உச்சரித்தால், அந்த அகராதியில் பார்க்கிறார்கள்; அதில் இல்லை என்றால், அகராதியின் பின்புறத்தில் அதை எழுதி வைத்து அகராதி நிறுவனத்துக்குத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தைக் கணினியில் தட்டச்சுசெய்யும்போதே ஒவ்வொரு வார்த்தையில் உள்ள பிழைகளையும் சுட்டிக்காட்டும் மென்பொருள் அந்த மொழிக்கு உள்ளது. ஆங்கிலம் இன்று அடைந்திருக்கும் நிலையானது ஆங்கிலம் அறிந்த ஒவ்வொருவரும் அந்த மொழிக்குக் கொடுக்கும் மதிப்பின், அதன் வளர்ச்சியில் காட்டும் அக்கறையின் விளைவு. நாம் தமிழை எங்கே வைத்திருக்கிறோம் என்ற கேள்வியோடு பிணைந்திருக்கின்றன நம் பிழைகள்.

நாளிதழ் வாசிப்பு என்பது ‘டி20 கிரிக்கெட்’போல சுருங்கிக்கொண்டிருந்த சூழலில், ‘இந்து தமிழ்’ நடுப்பக்கக் கட்டுரைகள் அதை ‘டெஸ்ட் கிரிக்கெட்’ மாதிரி உருமாற்றியிருக்கிறது. ஒரு நாள் கட்டுரைகளைப் படிக்காமல் தவறவிட்டாலும் தூக்கம் வர மறுக்கிறது. தமிழ் அறிவுச் சூழலையே செழுமைப்படுத்தியிருக்கிறீர்கள். முழுப் பக்கக் கட்டுரைகளை வெளியிடும் துணிச்சல் எங்கிருந்து வந்தது?

நாம் ‘இந்து தமிழ்’ நாளிதழைத் தொடங்கும்போது, “140 எழுத்துகளுக்குள் எழுதப்படும் ட்வீட்களையே படிக்க ஆளில்லாத சூழலில், இரண்டு பக்கங்களுக்குத் தமிழில் நடுப்பக்கக் கட்டுரைகளை யார் படிப்பார்கள்?” என்று பத்திரிகையுலக ஜாம்பவான்களே பலர் பகடி செய்தனர். இந்த இடத்தில் எல்லா துணிச்சலான முயற்சிகளுக்கும் முழுச் சுதந்திரமும் ஊக்கமும் கொடுக்கும் எங்கள் ஆசிரியர் அசோகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிலிருந்து நாங்கள் எடுத்துக்கொண்ட ஒரு முக்கியமான விழுமியத்தையும் இதற்கான காரணமாகச் சொல்லலாம்: ‘மக்கள் விரும்புவதை அல்ல; மக்கள் விரும்பாவிட்டாலும் மக்களுக்கு எது தேவையோ அதைத் தருவதே ஒரு ஊடகத்தின் வேலை’ என்பதே அது. உள்ளபடி, ஒரு பிரச்சினையை முழுமையாக அலசும் ஆழமான கட்டுரைகளுக்கான தேவை தமிழில் பல ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ‘இந்து தமிழ்’ அதையே பூர்த்திசெய்கிறது.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நம்முடைய வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், ‘அண்டை நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும்’ என்ற குரல் நாட்டுப்பற்றின் பின்னணியில் எழுப்பப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு ராணுவ வீரரைப் பறிகொடுக்கையில் ஒரு குடும்பம் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த நாடும் சேர்ந்தே அந்தப் பேரிழப்பை எதிர்கொள்கிறது; காஷ்மீரில் நடந்திருப்பது பெருங்கொடுமை. ராஜாங்கரீதியாக இதற்கு நாம் எதிர்வினையாற்றுவது அவசியம். ஆனால், இந்தக் கொடுமையை நாட்டுப்பற்றோடு இணைத்து, போருக்கு அறைகூவல் விடுப்பது கொடூரம். நாட்டுப்பற்று என்ற சொல்லே மிக மிக அபாயகரமான ஒரு வார்த்தை. முதலில் ‘நாடு’ என்று நாம் எதை வரையறுக்கிறோம் என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும். நாடு என்று வரைபடம் குறிப்பிடும் எல்லைகளுக்கு உட்பட்ட நிலப்பரப்பைக் குறிப்பிடுகிறோமா, அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களைக் குறிப்பிடுகிறோமா? நாடு என்று மக்களைத்தான் குறிப்பிடுகிறோம் என்றால், மக்கள் மீது பற்றுகொண்டவர்கள் எப்படி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துவிடும் அபாயம் மிக்க போருக்கு அறைகூவல் விடுக்க முடியும்? தன்னுடைய ஒரு குழந்தையை ஒரு பைத்தியக்காரன் – பயங்கரவாதி கொன்றுவிட்டான் என்பதற்காக எந்தத் தகப்பனும் ஏனைய பிள்ளைகளை அவனோடு யுத்தம் நடத்த அனுப்ப மாட்டார். பயங்கரவாதத்துக்கான எதிர்வினை என்பது நாமும் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவதல்ல. மேலும், பயங்கரவாதத்துக்கான எதிர்வினையை, போரை ராணுவ மோதலாகக் கருதுவது கடந்த நூற்றாண்டுச் சிந்தனை. இன்றைக்கு மிகப் பெரிய போர் தாக்குதல்கள் வணிகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

அரசியல்வாதிகளை ஏன் உங்களால் முழுத் துணிச்சலோடு விமர்சிக்க முடியவில்லை?

இந்தக் கேள்வியை எதிர்கொள்ள வெட்கப்படுகிறேன். ஏதோ, ஒரு பத்திரிகையாளன், ‘இந்து தமிழ்’ நிறுவனத்தைச் சார்ந்தவனாக இந்தப் பதிலைச் சொல்லவில்லை; எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் மனசாட்சி. அந்த மனசாட்சி இன்று முழுத் துணிச்சலோடு செயல்படுகிறது என்று மனசாட்சியோடு சொல்ல முடியாத நிலையிலேயே நாம் இருக்கிறோம். ஆனால், இதுவும் கூட்டுப்பொறுப்பின் வெளிப்பாடுதான். ஊடகங்களுக்கு, எழுத்தாளர்களுக்கு மட்டுமான சுதந்திரம் என்று ஒன்றில்லை; அது ஒரு மாயைதான். ஒட்டுமொத்த சமூகத்தின் சுதந்திரப் பரப்புக்கு ஏற்பவே ஊடகங்களின், எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கான எல்லைகளும் குறுகி, விரிகின்றன.

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் அரசாங்கமே பாதிப்புகளை உண்டாக்கும்போது, ஜனங்களைச் சந்தித்து களத்திலிருந்து ‘இந்து தமிழ்’ எழுத வேண்டும். மேலும், களத்தில் இருப்பவர்கள் எழுதினால் அதை வெளியிடவும் வேண்டும். செய்வீர்களா?

நிச்சயமாகச் செய்வோம். ஒரு பத்திரிகை தன்னுடைய நடுப்பக்கத்தில் கள ஆய்வுக் கட்டுரைகளைத் தினசரி தொடராக வெளியிடுவதை ‘இந்து தமிழ்’தான் முன்னெடுத்தது. நான் ‘கடல்’ எழுதினேன். சஞ்சீவிகுமார் மதுவுக்கு எதிராக எழுதினார். நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். ஒரு செய்தியாளர் என்பவர் பத்திரிகையின் பிரதிநிதியாக மட்டும் அல்ல; சமூகத்தின் பிரதிநிதியாகவும்தான் செயல்பட வேண்டும். மக்களுடைய குரல் மேலோங்கி ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் செல்பேசி வழியாக வாசகர்களின் சமூகப் பிரச்சினைகளைக் கவனப்படுத்தும் ‘உங்கள் குரல்’ செல்பேசி சேவையைக் கொண்டுவந்தோம். ‘இந்து தமிழ்’ நடுப்பக்கங்கள் அதுவரை இங்கே ‘தலையங்கப் பக்க’த்துக்காக ஏனைய பத்திரிகைகள் கடைப்பிடித்துவந்த எல்லா வரையறைகளையும் உடைத்து நொறுக்கியிருக்கிறது. பெரிய அந்தஸ்தில் உள்ள அறிவுஜீவிகள், முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டுரையாளர்களாகக் கோலோச்சிவந்த மரபு உடைக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் கட்டுரைகள் அனுப்பலாம் என்ற சூழல் உருவாக்கப்பட்டு, அது வெற்றிகரமாகவும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ‘இந்து தமிழ்’ நடுப்பக்கம் செய்திருக்கும் சாதனைகளில் ஒன்றாக, எங்களுடைய கட்டுரையாளர்களில் ஒருவர் - புதுமடம் ஜாபர் அலி – ஒரு செல்பேசி கடை வைத்திருப்பவர் என்பதைப் பெருமையாகச் சொல்வேன். இந்தப் போக்கு மேலும் வளர்த்தெடுக்கப்படும்.

நான் தொண்ணூறுகளில் பிறந்தவன். என்னைப் போன்றவர்களுக்கு ‘இந்து தமிழ்’ கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. நன்றி. அண்ணா வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்துக்காகக் காத்திருக்கிறேன்; எப்போது வரும்? அப்புறம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி. ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இன்னும் ஓரிரு வாரங்களில் வந்துவிடும். சமூக நீதி என்பது கடந்த கால அநீதிக்கான பிராயச்சித்தமாக மட்டும் அல்லாமல், சமகாலத்துக்கான நீதியாகவும் விரிய வேண்டும் என்பது என்னுடைய அபிப்ராயம். ஆனால், பொருளாதாரரீதியிலான இட ஒதுக்கீடு இதற்கான தீர்வு அல்ல. எல்லாச் சமூகங்களும் அவரவருக்கு உரிய பிரதிநிதித்துவம் பெற வகுப்புவாரி இட ஒதுக்கீடு முறையை நோக்கி நாம் நகர வேண்டும்.

அரசியலை ஒரு வார்த்தையில் எப்படி வரையறுப்பீர்கள்?

என்னைப் பொறுத்தளவில் சக உயிர்கள் மீதான அன்பு, அக்கறையின் வெளிப்பாடே அரசியல். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அரசியல் என்பது சமத்துவம்!

தொகுப்பு: த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x