Last Updated : 20 Feb, 2019 08:10 AM

 

Published : 20 Feb 2019 08:10 AM
Last Updated : 20 Feb 2019 08:10 AM

சுதந்திரச் சிந்தனையின் பொற்காலத்துக்குத் திரும்புமா குஜராத்?

“அடிப்படை மனித உரிமைகளில் கருத்துச் சுதந்திரமும் ஒன்று என்று நம்புகிறேன். அரசுக்குக் கட்டுப்பட்ட, உணர்ச்சியற்ற மனிதனாக இருக்க விரும்பவில்லை; சுதந்திர மனிதனாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான் பதவி விலகுகிறேன்” – ஹேமந்த்குமார் ஷா, அகமதாபாத் எச்.கே. கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

குஜராத் சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி, தான் முன்னர் படித்த எச்.கே. கலைக் கல்லூரியில் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேச முடியாமல்  தடுக்கப்பட்டார். அக்கல்லூரியின் முதல்வர்தான் அவரைப் பேச அழைத்திருந்தார். அந்த அழைப்பை ரத்து செய்துவிடுமாறு கல்லூரியின் அறங்காவலர்கள் முதல்வருக்கு நெருக்குதல் தந்தனர். அந்த அறங்காவலர்களை இந்துத்துவா ஆதரவாளர்கள் அச்சுறுத்தியிருந்தனர். நிகழ்ச்சியை ரத்துசெய்ய நேர்ந்ததைக் கண்டித்து கல்லூரியின் முதல்வரும் துணை முதல்வரும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். ‘குஜராத்தின் சிறந்த மரபுகளுக்கு நீங்கள் இருவரும் உற்ற பிரதிநிதிகள்; சர்தார் வல்லபபாய் படேல், மகாத்மா காந்தி, அம்சா மேத்தா உங்களுடைய செயல்களால் பெருமையடைந்திருப்பார்கள்’ என்று அவர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தேன்.

மகளிர் உரிமை பேசியவர்

யார் இந்த அம்சா மேத்தா? அம்சா மேத்தாவை இப்போது குஜராத்திலேயே மறந்துவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். லண்டனில் பயிற்சிபெற்ற மருத்துவரான டாக்டர் ஜீவராஜ் மேத்தாவும் அவருடைய மனைவி அம்சா மேத்தாவும் தேசப்பற்று மிக்க இணையர்கள். காந்திக்கு மருத்துவராக இருந்த ஜீவராஜ் மேத்தா, சுதந்திரப் போராட்டத்தின்போது சில முறை கைதுசெய்யப்பட்டார். சமூகத்திலும் அரசியலிலும் பாலினச் சமத்துவம்  வேண்டும் என்று பாடுபட்ட அம்சா மேத்தா, அனைத்திந்திய மகளிர் மாநாடுகளில் தீவிரமாகப் பங்கெடுத்து வந்தார். அரசியல் சட்டத்தை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட நிர்ணய சபையில் இடம்பெற்ற ஒரு சில மகளிரில் அவரும் ஒருவர். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதிநிதியாகப் பேச அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

அரசியல் சட்ட நிர்ணய சபை தன்னுடைய பணியை 1949-ல் பூர்த்திசெய்ததும், பரோடாவில் உள்ள ‘மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக’ (எம்எஸ் பல்கலைக்கழகம்) முதல் துணைவேந்தராகப் பதவி ஏற்றார் அம்சா மேத்தா. அமெரிக்கா, பிரிட்டன்கூட பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஒரு பெண்ணை நியமிப்பதுபற்றி அந்த நாளில் சிந்திக்கவில்லை!  காந்தி மறைந்து ஓராண்டுகூட ஆகாததால் அவருடைய சிந்தனைகள் செல்வாக்கு செலுத்திய காலம் அது. இந்தியாவின் – ஏன் உலகின் – பிற பகுதிகளில் சிந்தித்திராத பல புதுமைகள் பரோடா நகரிலும் குஜராத்திலும் சாத்தியமானவையாக இருந்தன.

அம்சா மேத்தாவின் தலைமையில் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலைப் பாடப் பிரிவுகள் மிகுந்த தரத்துடன் உருவாக்கப்பட்டன. பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் முறை அன்றைக்கு இருந்திருந்தால் பம்பாய், கல்கத்தா, மதறாஸ் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக பரோடா எம்எஸ் பல்கலைக்கழகமும் இடம்பெற்றிருக்கும். புதிய பல்கலைக்கழகத்துக்குத் தேவைப்பட்ட பேராசிரியர்களையும் துறைத் தலைவர்களையும் நாடு முழுவதும் தேடி, சிறந்தவர்களாகப் பார்த்து நியமித்தார். அம்சா மேத்தாவின் நடைமுறையை அகமதாபாத் பல்கலைக்கழகத்திலும் அப்படியே பின்பற்றினர். விக்ரம் சாராபாய் போன்ற அறக் கொடையாளர்கள், தேசிய அளவில் பேசப்படும் கல்விப் பிரிவுகளை ஏற்படுத்தினர். ஆடை வடிவமைப்புக்கான தேசியக் கழகம், இந்திய நிர்வாகவியல் கழகம், இயற்பியல் ஆய்வு ஆராயச்சிக்கூடம் ஆகியவை அவ்வாறு உருவானவை.

காணாமல்போன பாரம்பரியம்

நாற்பதாண்டுகளுக்கு முன்னால் நான் குஜராத்துக்குச் சென்றபோது, அங்கு அறிஞர்களும் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் கலைஞர்களும் மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். அம்சா மேத்தாவும் விக்ரம் சாராபாயும் உருவாக்கிய பாரம்பரியம் உயிர்ப்புடன் இருந்த காலம் அது.

சமீப ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தவர்கள் செயல்படுவதற்கான இடம் குஜராத்தில் குறுகி வருகிறது. சுதந்திர உணர்வுள்ள அறிவுஜீவிகள், அரசியலுக்கும் தொழிலுக்கும் இடையூறாகச் செயல்படுகின்றனர் என்ற உணர்வு அச்சமூகத்தில் பரவியுள்ளது. அலையலையாக நடந்த வகுப்பு, சாதிக் கலவரங்கள் மக்களிடையே அச்ச உணர்வையும் பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளன. இது சுதந்திரமான ஆராய்ச்சிகளுக்கும் ஆழ்ந்த கல்விக்கும் உற்ற சூழ்நிலை அல்ல. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னதாகவே இச்சூழல்  ஏற்பட்டுவிட்டது. ஆனால், அவர் முதலமைச்சராக இருந்த 13 ஆண்டுகளில் இது தீவிரம் பெற்றது.

குஜராத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தில் எனக்குப் பேராசிரியர் பதவி தரப்பட்டபோது, நான் அந்த வாய்ப்பை ஏற்றேன். நவீன குஜராத்தின் வரலாற்றை எழுதியவன் என்ற வகையில், காந்தி தன்னுடைய ‘சொந்த வீடு’ என்று அழைத்த அகமதாபாதில் உள்ள கல்வி நிலையம் என்பதாலும், எதிர்காலத்தில் சகஜ நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையாலும் அந்தப் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால், அந்தப் பொறுப்பை என்னால் ஏற்க முடியாமல் போனது, செல்வாக்கு மிக்க புதுடெல்லி அரசியல்வாதிகள் சிலர் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்களை அழைத்து, என்னைப் பணியில் அமர்த்தக் கூடாது என்று எச்சரித்தனர். அகமதாபாத் நகர ஏபிவிபி கிளையைச் சேர்ந்த சிலரும் மிரட்டியுள்ளனர். குஜராத்தில் என்னால் வசிக்கவோ, கற்றுத்தரவோதான் முடியாது, ஆனால், நண்பர்களையும் உடன் பணிபுரிந்தவர்களையும் சந்திக்க முடியும். அகமதாபாத் நகரில் உள்ள மிகவும் பிரபலமான காந்திய அமைப்பு என்னை உரையாற்ற அழைத்தபோது, அழைப்பை ஏற்றுக்கொண்டேன். தன்னுடைய சொந்த ஊர் என்று காந்தியே அறிவித்த அகமதாபாதில் பேசும் வாய்ப்பை ஒப்புக்கொண்டேன்.

மார்ச் 3-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘மகாத்மா காந்தி – மக்கள் தொடர்பாளர்’ என்ற தலைப்பில் பேச முடிவெடுத்திருந்தேன். இப்போதைய மத்திய அரசு தொடர்பாக, காட்டமாக எதையும் பேசாமல் தவிர்த்துவிடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பிப்ரவரி 11-ல் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர். “மகாத்மா காந்தி, அவருடைய வாழ்க்கை, அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் தொடர்பாகத்தான் பேசுவேன், இப்போதைய அரசியல்வாதிகள் குறித்தோ அரசு குறித்தோ பேச மாட்டேன்” என்று பதில் அனுப்பினேன்.

இருந்தாலும் பிப்ரவரி 13-ல் அகமதாபாதிலிருந்து என்னைத் தொடர்புகொண்டவர்கள், ‘இப்போதைய சூழலில் கருத்தரங்கை நடத்த முடியாமலிருக்கிறது’ என்று தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர். ஏன் என்று அவர்களிடம் விவரம் கேட்கவில்லை. எச்.கே. கலைக் கல்லூரியில் நடந்த சம்பவங்களின் விளைவுதான் இது என்பதைப் புரிந்துகொண்டேன்.

மாற்றம் வரும்

ஜிக்னேஷ் மேவானிக்கும் எனக்கும் வயது, தொழில், சமூகப் பின்னணி, கருத்தியல் சார்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. ‘இப்போதைய மத்திய அரசை விமர்சிப்பவர்கள்’ என்பது மட்டுமே எங்களிருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. தான் படித்த கல்லூரியில் அம்பேத்கரின் வாழ்க்கை, மரபு ஆகியவை பற்றி மட்டுமே பேசவிருந்தார் ஜிக்னேஷ் மேவானி. நானும் அகமதாபாதில் காந்திஜியின் வாழ்க்கை, மரபு பற்றியே பேசத் திட்டமிட்டிருந்தேன். இருப்பினும் இருவருக்கும் விடுத்த அழைப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன.

இதனால்தான், கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக எச்.கே. கல்லூரியின் முதல்வரும் துணை முதல்வரும் பதவி விலகியதற்காக, தன்னெழுச்சி பெற்றுப் பாராட்டினேன். அவர்களுடைய செயல் காந்தி, படேல், அம்சா மேத்தா காலத்திய, பழைய – மேன்மையான குஜராத்தை நினைவுபடுத்தியது. திறந்த மனதோடு இருந்த குஜராத் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. எதேச்சாதிகாரிகளும் எதேச்சாதிகார ஆட்சிகளும் மாறக்கூடியவை,  நிரந்தரமானவை அல்ல. சுதந்திரத்துக்கு ஏங்கும் மனித உணர்வுகள் நிரந்தரமானவை. நரேந்திர மோடியும் அமித் ஷாவும் ஆதிக்கம் பெறுவதற்கு முன்னால் ஒரு குஜராத் இருந்தது; அவர்களுடைய  பிடி தளர்ந்ததும் சுதந்திரமான, பழைய குஜராத் மீட்சிபெறும். அதைப் பார்க்கவும் அங்கே பேசவும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x