Published : 19 Feb 2019 09:41 AM
Last Updated : 19 Feb 2019 09:41 AM

இலக்கியம் இக்கணம்

தமிழ் வாழ்வின் பண்பாட்டு அசைவுகளைப் பேசும் அரங்கமாகவும், தமிழ் கலை இலக்கியச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழாவாகவும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் முன்னெடுக்கும், ‘யாதும் தமிழே’ கொண்டாட்டம் இந்த ஆண்டு கோவையில் நடைபெற்றது. இன்றைய இலக்கியச் சூழலைப் பேசும் ‘இலக்கியம் இக்கணம்’ அமர்வில் கவிஞர் ஆனந்த், நாவலாசிரியர் சு.வெங்கடேசன், எழுத்தாளர் ஜா.தீபா பங்கேற்றனர். ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஒருங்கிணைப்பாளர் தே.ஆசைத்தம்பி ஒருங்கிணைத்தார். தமிழ் இலக்கியம் அடைந்திருக்கும் வகைமைகள், வளங்கள், சவால்கள், தேக்க நிலைகள் இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டன.

தே.ஆசைத்தம்பி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துமொழியாகவும் பேச்சுமொழியாகவும் அறுபடாத தொடர்ச்சியுடைய அபூர்வமான மொழி தமிழ். இத்தனை காலம் அது எத்தனையோ சவால்களையும் தாக்குதல்களையும் சந்தித்தே நகர்ந்து வந்திருக்கிறது. தொன்மையையும் நவீன காலப் பயன்பாட்டையும் ஒருசேர தக்கவைத்துக்கொண்டிருக்கிறது தமிழ் மொழி. தற்போது தமிழில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகள், மாறிவரும் உலகத்தை எப்படி எதிர்கொள்கின்றன? அதற்கென்று உலகப்பார்வை உருவாகியிருக்கிறதா? தமிழில் அதிகம் வரலாற்று நாவல்கள் எழுதப்படும் காலம் இது. எது வரலாறு, எது புராணம்? இவற்றுக்கான இடைவெளி என்ன? புனைவுகளில் எதை எடுத்துக்கொள்வது?

தமிழ்ப் படைப்புகளின் பார்வை அகவயப்பட்டுக்கொண்டிருக்கிறது

ஆனந்த்

அனுபவத்தைப் பொறுத்தவரை சமகாலம் மட்டுமே இருக்கிறது. எனது 16, 17 வயதிலிருந்து தமிழ் மொழியுடன் தீவிரமாகப் புழங்கிவருபவன் என்ற அளவில் தமிழ் இலக்கியத்தில் நவீன உணர்வு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இக்கணத்தில் இலக்கியம் இருந்தால்தான் புதிதாக ஒன்றைப் பார்க்கவே முடியும். தற்கணப் பிரக்ஞையோடு எதையும் அணுகும்போதுதான் புதிய பார்வை இருக்கும். அனுபவம் என்பதை ஓடிக்கொண்டிருக்கும் ரயிலாகச் சொன்னோம் என்றால், நிகழ்ந்த அக்கணம் நமது சுமையாக இருக்கிறது. அதைத் தலையில் சுமக்க வேண்டியதில்லை. இக்கணம்தான் நகர்ந்துகொண்டேயிருக்கிறது. அதற்காக இறந்தகாலத்தில் நடந்தவற்றுக்கும் அதன் படிப்பினைகளுக்கும் மதிப்பேயில்லை என்று சொல்லவில்லை. ஆனால் மிகக் குறைவாகவே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 45 ஆண்டு காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புகளில் பார்வை அகவயப்பட்டுப்பட்டிருக்கிறது. எல்லாவிதமான படைப்புகளிலும் அதைப் பார்க்கிறேன். இந்திய அளவில் வரலாறு, புராணம் இரண்டுமே அரசியலாக்கப்பட்டிருக்கின்றன. இது சரியல்ல. தமிழின் தொடர்ச்சியான இலக்கிய மரபில் புதிய பரிணாமங்களைச் சேர்ப்பவர்களாக நாவலாசிரியர்களில் ஜோ டி குருஸ், பா.வெங்கடேசன் ஆகியோரைச் சொல்வேன். கவிஞர்களில் இசை, வெய்யில், சுகிர்தராணி எனது நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கின்றனர்.

வெவ்வேறு வாழ்க்கை வெவ்வேறு பின்னணிகள்

ஜா.தீபா

உலகமயமாக்கலுக்குப் பிறகு பொருளாதாரம், அரசியல் மட்டுமல்ல; இலக்கியமும் உலக அளவிலான பார்வையை அடைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு, கழிவுகளைக் கடலில் கொட்டுவது, வன உயிர்கள் கொல்லப்படுவது இவை போன்ற பிரச்சினைகள் இலக்கியமாகின்றன.  வெவ்வேறு நிலப்பரப்புகள் மட்டுமல்லாமல் வெவ்வேறு வாழ்க்கை, தொழில் பின்னணிகளிலிருந்தும் புதியவர்கள் எழுதவந்திருக்கிறார்கள். சமீபத்தில் க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல் சவரத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படைப்பாக உள்ளது. சவுதி அரேபியாவுக்குப் பிழைக்கப்போகும் மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது, யூசுப்பின் ‘மணல் பூத்த காடு’. சல்மா, மீரான்மைதீன், கீரனூர் ஜாகிர்ராஜா போன்றோரின் படைப்புகள் நமக்குத் தெரியாத இஸ்லாமிய வாழ்க்கையைப் பேசுகின்றன. பெண் எழுத்துகள் என்று பார்த்தால் வை.மு.கோதைநாயகி அம்மாளிடம் தொடங்கி குட்டி ரேவதி, தமயந்தி வரை நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளோம். 21-ம் நூற்றாண்டிலும் பெண்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் குடும்பம் ஏற்படுத்தும் பல்வேறு பொறுப்புகள், சுமைகள், நெருக்கடிகளைத் தாண்டித்தான் எழுத்து மேஜைக்கு வர வேண்டியிருக்கிறது. என் குழந்தைகள் உறங்கிய பிறகுதான் நான் எழுத வேண்டியிருக்கிறது. 3 மணி நேரத் தூக்கம்தான் கிடைக்கிறது.  இருந்தாலும், எனது எழுத்தியக்கத்துக்கு என் குடும்பம் ஆதரவாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு வரலாற்று வன்முறைகளைவிட குடும்ப வன்முறைகள்தான் வெளிப்படையாகவும், அதிகமாகவும் இருக்கின்றன. சித்ரன், உமாபார்வதி, லக்ஷ்மி சரவணகுமார், சுகா, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி என என்னைக் கவர்ந்த படைப்பாளிகளின் பெயர்களை முழுவதும் சொல்லவே முடியாத அளவு அந்தப் பட்டியல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

அபாரமான சுருக்கம் அபாரமான விரிவு

சு.வெங்கடேசன்

தமிழ்ப் பண்பாடு, தமிழின் தொன்மை, தமிழின் வரலாறு தொடர்பான நம் உணர்வுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் காலம் இது. பழமை மக்கும். மரபு புதிய உயிராற்றலைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்.  மூன்று பத்திக்கு மேல் செய்தியைக் கொடுத்தால் படிக்கவே மாட்டான் என்ற நம்பிக்கை நிலவும் காலத்தில் 1,500 பக்கங்களைக் கொண்ட எனது ‘வேள்பாரி’ நாவலுக்கு வரவேற்பும் இருக்கிறது. தமிழில் அபாரமான சுருக்கத்துடன் ஆழமாக எழுத முடியும் என்ற நம்பிக்கையை நவீன கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. தமிழின் அபாரமான விரிவை நாவலாசிரியர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தை மையமாகக் கொண்ட புனைவுகளைத் தாண்டி ‘காடோடி’ போன்ற நாவல்களின் மூலம் பசுமை இலக்கியம் உட்பட பல்வேறு பிரிவுகள் உருவாகிவருகின்றன. அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு எனப் பல புலங்களில் புனைவுகள் எழுதப்படுகின்றன. நிகழ்காலத்துக்கு வாசல் கடந்த காலம்தான். அது எத்தனை சிறிய வாசலாக இருந்தாலும். நிகழ்காலம், கடந்த காலம் என்று பிரிப்பதே மாயையாகத் தெரிகிறது. வரலாற்றாசிரியனின் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்குபவன் எழுத்தாளன்.  ‘மிளிர் கல்’ எழுதிய இரா.முருகவேள், ‘பேட்டை’ நாவலாசிரியர் தமிழ்ப்பிரபா ஆகியோர் உற்சாகம் தருகிறார்கள்.  கவிதைகளில் யவனிகா ஸ்ரீராம், இசை, வெய்யில் ஆகியோர் மீது வியப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலமும், உரையாடல்களின் எதிர்காலமும்

இலக்கிய அமர்வுக்கு அடுத்த அமர்வாக, ‘சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலமும், உரையாடல்களின் எதிர்காலமும்’ அமர்வு நடந்தது. எழுத்தாளர்கள் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், அராத்து; பேராசிரியர்கள் ராஜன் குறை, நவீனா ஆகியோர் கலந்துரையாடினர். இந்த அமர்வை ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஒருங்கிணைப்பாளர் தே.ஆசைத்தம்பி ஒருங்கிணைத்தார். சமூக ஊடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் நேர்மறை, எதிர்மறை தாக்கங்கள் பற்றி இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

தே.ஆசைத்தம்பி : சமூக ஊடகங்கள் விரிவான வாசகப் பரப்பைக் கொண்டிருக்கின்றன. இதில், ஃபேஸ்புக் மாதிரியான சமூக ஊடகத்தின் வரவு என்பது இந்த நூற்றாண்டின் முக்கியமான சமீப நிகழ்வாகச் சொல்லலாம். இந்தச் சமூக ஊடகப் பரப்பில், தமிழ் மொழியும் முக்கியமான செயலாற்றிவருகிறது. ஆனால், அது மொழியை வளர்க்கிறதா, சிதைக்கிறதா? வார்த்தைகளைப் பயன்படுத்துவது சுருங்கிக்கொண்டேபோவதை, கொஞ்சம் நீளமாக எழுதுவதைக்கூட படிக்க பொறுமையற்றுப்போவதை நாம் எப்படிப் பார்ப்பது? சமூக ஊடகங்களில் கொட்டும் வெறுப்பு மொழியை எப்படிப் புரிந்துகொள்வது?

வாழ்வதற்குத் தேவையானதைப் போல சமூக ஊடகங்களில் இருக்கவும் பயிற்சி தேவை

ராஜன் குறை

சமூகம் இல்லாத ஊடகம் சாத்தியமில்லை. அதேபோல், ஊடகம் இல்லாத சமூகமும் சாத்தியமில்லை. இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக ஊடகம், மானுட வலைப்பின்னலின் ஒரு கண்ணிதான். அது நட்பு, உறவு, சிந்தனை, கலை, வர்த்தகம் போன்ற அம்சங்களுக்கான ஒரு வலைபின்னலாகச் செயல்படுகிறது. அதைப் பார்த்து மிரட்சி அடையத் தேவையில்லை. இவற்றில், ‘ஃபேஸ்புக்’ மிகப் பெரிய சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறது. ஒருவருக்கொருவர் முகம் பார்த்துதான் பேசிப் பழக வேண்டுமென்பது ஒரு பழங்கதை. ஏனென்றால், மொழி என்பதே ஓர் ஊடகம்தான். சமூக ஊடகங்கள் சுயமோகத்தை அதிகரிப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், சுயமோகமும் கொஞ்சம் தேவைதான். உதாரணத்துக்கு, ஓர் இசைக்கலைஞர் ஓர் அற்புதமான இசையை அமைக்கும்போது, அந்த இசையை அமைத்தற்காக அவரை அவரே ரசிப்பதில் தவறில்லை. வெறுப்பை அதிகரிக்கின்றன என்பது சமூக ஊடகங்களின் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு. அன்பும் வெறுப்பும் எல்லாக் காலங்களிலும் இருக்கின்றன. சமூகத்தில் நிலவும் செயல்பாடுகள்தான் சமூக ஊடகங்களிலும் பிரதிபலிக்கின்றன. அன்பு, வெறுப்பு இரண்டுமே ஒரே வேகத்தில்தான் இங்கே பயணிக்கின்றன. நவீன சமூகம், சமூக ஊடகங்களில் நடக்கும் மாற்றங்களைப் புதிய சாத்தியங்களாகப் பார்க்கிறது. தேசம் என்பது பரப்பின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பரப்பைச் சமூக ஊடகம் உடைக்கிறது. நினைப்பதையெல்லாம் எப்போதுமே எல்லா இடங்களிலும் பேச முடியாது. தணிக்கை இல்லாமல் எங்குமே பேச முடியாது. அது சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும். வாழ்வதற்கு எப்படிப் பயிற்சி வேண்டுமோ, அதே மாதிரி சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கும் பயிற்சி தேவை.

சமூகத்தின் மொழியைத்தான் சமூக ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன

நவீனா

சமூக ஊடகங்களில் நாம் எளிமையாக நமது உணர்வை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கான ‘இமோஜி’யைத்தான் பயன்படுத்துகிறோம். இதனால், வார்த்தைகளின் பயன்பாடு குறைந்து, மொழியின் வளர்ச்சி தடைபடும் என்ற அச்சம் தேவையற்றது. ஏனென்றால், நாம் அந்த இமோஜியை மொழியாகவும், வார்த்தையாகவும்தான் பார்க்கிறோம். அதனால், வார்த்தைகள் அழிய வாய்ப்பில்லை. அதேபோல, ‘செம’, ‘மாஸ்’ போன்ற வார்த்தைகளைச் சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதால் தமிழ் மொழி உருக்குலையும் என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். இவை யாவும் சமூகத்தில் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள்தான். அதைத்தான் சமூக ஊடகங்களிலும் பயன்படுத்துகின்றனர். அங்கிருந்து புதிதாக வார்த்தைகள் உருவாவதில்லை. ஏனென்றால், மொழியின் பயன்பாடு எப்போதும் சமூகத்திலிருந்துதான் பயணிக்கிறது. சமூக ஊடகங்களில் எழுதிப் புகழ் பெற்று அதன் வாயிலாக எழுத்துலகத்துக்குள் வருவோர் மீது ஏனைய சமூகங்களைக் காட்டிலும் தமிழ்ச் சமூகத்தில் ஒரு தாக்குதலைப் பார்க்க முடிகிறது. மற்ற நாடுகளில் விமர்சகர்களும், எழுத்தாளர்களும் தனித்தனியாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எழுத்தாளர்களே விமர்சகர் அவதாரமும் எடுப்பதால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்று இதைச் சொல்லலாம். குறிப்பாக, பெண் களுக்கு, சமூக ஊடகங்களால் நிறைய எழுதும் சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்களின் எண்ண ஓட்டத்தையும், மனதை அழுத்திவரும் விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. சமூக ஊடகங்களில் எழுத வருவோர் ஒரு புதிய தலைமுறை – அப்படி எழுத வருபவர்கள் காபி கவிதை, சமோசா கவிதை என்று என்னமோதான் எழுதட்டுமே, அவர்கள் தங்கள் எண்ணத்தை எழுதுகிறார்கள் என்பது முக்கியம் இல்லையா?

மொழிப் பயன்பாட்டைக் கச்சிதமாக்குகின்றன சமூக ஊடகங்கள்

அராத்து

நீளமாகப் பேசும் ஒரு தலைமுறையாக நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஒரு பெண்ணிடம் ‘நீ அழகு’ என்று சொல்ல விரும்புவதைக்கூட அந்தப் பெண்ணே அசதியாகிவிடும்படி ஆயிரம் வார்த்தைகளில் நீட்டிப் பேசுவோர் இங்கே உண்டு. சமூக ஊடக மொழி என்ன செய்கிறது என்றால், ‘நீ சொல்வதைச் சுருக்கமாகச் சொல்’ என்று நமக்குக் கற்றுத்தருகிறது. நீங்கள் ‘ட்விட்டர்’ தளத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், 144 எழுத்துகளுக்குள்தான் சொல்ல வேண்டும். இந்த நிர்ப்பந்தம் ஒவ்வொருவரையும் எடிட்டர் ஆக்குகிறது. நல்லதுதானே? இதில் என்ன சிக்கல் இருக்கிறது? சுருக்கமாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் தகவல்தொடர்புக்கு ஏற்ற மொழியாக, தமிழைச் சமூக ஊடகங்களில் மாற்றிவருகின்றன. அத்துடன், சமூக ஊடகங்களில் நம் எழுத்தை அதிகம் பேர் வாசிக்கும்போது ஒருவித பொறுப்புணர்வு அதிகரிக்கிறது. புதுமொழியும் கைவருகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திலும் சில சிக்கல்கள் இருக்கவே செய்யும். அதிலிருந்து நாம் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது. சமூக ஊடகங்களும் அப்படித்தான். அதிலிருந்து வெளியேறுவது ஒரு தீர்வல்ல. சமூக ஊடகங்களே இல்லாமல் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்வது என்பது ஒரு தேர்வு. அந்தப் பழங்கால வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பும் தற்போதும் இருக்கவே செய்கிறது. யாரோ ஓரிருவருக்கு இது சாத்தியமாகலாம். எல்லோருக்கும் அல்ல. சமூக ஊடகங்களால் ஏற்படும் தீமைகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதில் வானளாவிய நன்மைகளும் உள்ளன. ஜனநாயக நாட்டில் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கிறது. அதைவிட ஒரு சதவீத கூடுதல் சுதந்திரம் சமூக ஊடகங்களில் உள்ளது. தனிமனித உரிமைகள் சார்ந்து சமூக ஊடகங்கள் தொடர்ந்து நேர்மறையாக இயங்கிவருகின்றன. நம் செயல்களுக்கு உடனடி அங்கீகாரத்தைச் சமூக ஊடகங்கள் வழங்குகின்றன.

சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறுவதே சராசரி மனிதனாக வாழ வழி

பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

நான் சமூக ஊடகங்களில் இருந்து, பின்னர் அவற்றிலிருந்து வெளியேறியவன். ஏன் வெளியேறினேன் என்றால், ஒவ்வொரு மனிதனையும் அவை ஊடக நிறுவனம் மாதிரி ஆக்கிவிடுகின்றன. சமூக ஊடகங்களில் இருப்பதன் மூலம் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும், செய்தியாகும் விஷயத்துக்கும் நாம் எதிர்வினையாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மணி நேரமும் நம் புலன்களின் மீது தொடர்ந்து நாமே தாக்குதல் நடத்திக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. இன்னொருபுறம், ‘லைக்ஸ்’ ஏற்படுத்தும் மாயை நம்மையே நாம் ஆராதித்துக்கொள்ளும் சுயமோகத்தை வளர்த்தெடுக்கிறது. சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்கிவருவதால், நம் பிம்பத்தை நாமே ஊதிப் பெருக்கிவிடுகிறோம். சமூக ஊடகங்களில் தொடர்ந்து மற்றவர்களுடன் தொடர்பிலேயே இருப்பதானது தேவையற்ற பதற்றத்தையும் பொறாமையையும்கூட உருவாக்குகிறது. ஒரு கற்பனையான சமூகத்தில் இருப்பதுபோலதான் சமூக ஊடகச் செயல்பாடுகள் பெரும்பாலும் இருக்கின்றன. ஆனால், மறுபுறம் உண்மையான வாழ்வில், உண்மையான சமூகத்தில் நம்முடைய பங்களிப்பு குறைந்துகொண்டேபோகிறது. நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோமோ அவற்றையெல்லாம்கூட செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறோம். அதனால், ஒரு ஊடகமாகயில்லாமல், சராசரி மனிதனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x