Published : 18 Feb 2019 08:32 AM
Last Updated : 18 Feb 2019 08:32 AM

மதிப்பெண்கள் கழித்தல் முறை: மாணவர்களின் வாய்ப்புகளைப் பறித்துவிடக் கூடாது!

முன்னணிப் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஐ.ஐ.டி. - ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு, 2013-ல் விண்ணப்பித்தார் ஒரு மாணவர். தனிச்சிறப்பு மற்றும் மேம்பட்ட உயர் நிலை என்ற இரு நிலைகளில் நடத்தப்படும் தேர்வு அது.

தனிச்சிறப்புத் தேர்வில் குறிப்பிட்ட தகுதி மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த நிலைத் தேர்வில் பங்கேற்க முடியும். தனிச்சிறப்புத் தேர்வில் மொத்தம் 47 மதிப்பெண்கள் அவருக்குக் கிடைத்தன. தவறாக விடையளித்தால் அவர் ஏற்கெனவே சரியான விடையெழுதிப் பெற்றுள்ள மதிப்பெண்களில் இருந்து நான்கு தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழித்து கொள்ளப்படும் என்பதே அந்தத் தேர்வின் விதிமுறை. இவ்வாறு எதிரிடை மதிப்பெண் (நெகட்டிவ் மார்க்) என்ற முறையில் அம்மாணவர் சரியான விடைகள் அளித்துப் பெற்ற மதிப்பெண்கள், சில தவறான விடைகளால் கழிக்கப்பட்டு குறைந்துவிட்டன.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த மாணவர், 50 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இறுதித் தேர்வில் பங்கேற்க முடியும். மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் இறுதித் தேர்வை எழுதும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை அணுகி ‘செயலுறுத்தும் நீதிப்பேராணை’ மனுத் தாக்கல் செய்தார். சரியான விடைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதியதாகவும், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அம்மனுவில் கோரியிருந்தார்.

நீதிமன்றத்தின் அக்கறை

மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைக்குட்பட்டு அம்மாணவரை இறுதித் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு முறையாக எதிர் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படாததால் அம்மாணவர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. வேறு வழியின்றி, அவர் தனியார் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். இந்நிலையில், 2018 அக்டோபர் இம்மனு இறுதி விசாரணைக்காக நீதிபதி அரங்க. மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிப்பேராணை மனுவில் கோரப்பட்ட நிவாரணம் வழங்கிட முடியாத வகையில், நுழைவுத் தேர்வு முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அம்மாணவர் வேறு கல்லூரியில் சேர்ந்துவிட்டதால் அவ்வழக்கை அற்றுப்போன வழக்காகக் கருதி, விசாரிக்காமல் விரைந்து தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பதே பொதுவிதி. ஆனால், இவ்வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்தது. தனியொரு மாணவருக்குப் பரிகாரம் வழங்க முடியாமல் போனாலும், இப்பிரச்சினையைச் சந்திக்கும் மாணவ சமுதாயத்துக்குத் தீர்வு வழங்கிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமே அதற்குக் காரணம்!சரியான விடையளித்தால் மதிப்பெண்கள் வழங்கும்போது, தவறான விடைகளுக்கு மதிப்பெண்களை மறுப்பது சரியா அல்லது பெற்ற மதிப்பெண்களில் ஒரு பகுதியைக் கழிப்பது சரியா என்ற கேள்வியை முன்வைத்த நீதிமன்றம் அதற்குரிய தீர்வையும் எடுத்துக் கூறியுள்ளது.

பிரிட்டனில் நடத்தப்படும் திறனறித் தேர்வுகளில் பலவிதமான முறைகளில் போட்டியாளர்களின் அறிவுநுட்பம், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தவறான விடைகளுக்காக, மதிப்பெண்களைக் கழிக்கும் வழக்கம் இல்லை. கனடா மருத்துவப் பெருமன்றம் நடத்தும் போட்டித் தேர்வு முறையிலும் இத்தகைய எதிர்மறையான அணுகுமுறை இல்லை. சில வினாக்களுக்குப் போட்டியாளர்கள் தங்கள் கற்பனைத் திறன் மூலம் ஊகித்தும் அனுமானித்தும் பதில் கூற வேண்டியிருக்கும் என்பதே இதற்குக் காரணம். ரஷ்யாவில் மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்விலும் இது பின்பற்றப்படுவதில்லை. தமிழ்நாட்டில் புகழ்மிக்க வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்விலும் இந்த நடைமுறை இல்லை என்று பல்வேறு தரவுகளைச் சுட்டிக்காட்டியது நீதிமன்றம்.

மதிப்பெண்கள் கழிக்கும் எதிர்மறை அணுகுமுறை, மாணவர்கள் சுயமாகச் சிந்திப்பதை ஊக்கப்படுத்தாது. அறிவுசார் அனுமானிக்கும் ஆற்றல், நிகழ்தகவு உத்திகள், பகுத்துணர்தல் போன்ற நுண்மாண் நுழைபுலக் காரணிகள் உருவாகி வளர்வதை அது தடுத்துவிடும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தவறான அணுகுமுறை

பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்களுடன் மேலாண்மை. மருத்துவம், தொழிற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களில் படித்துப் பட்டம் பெற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது. பெரும்பாலும், இத்தகைய நுழைவுத் தேர்வுகள் படிப்புக்குரிய இடங்களின் எண்ணிக்கைக்கேற்ப போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டுமென்றே நடத்தப்படுகின்றன. தவறான விடையளித்தால் மதிப்பெண்கள் மறுப்பது என்பது ஒருவகையான மதிப்பீடு. ஆனால், தவறான விடை எழுதப்பட்டதால் ஏற்கெனவே சரியான விடையளித்துப் பெற்ற மதிப்பெண்களில் இருந்து கழித்துக்கொள்வது என்பது இயல்புக்கு மாறான மதிப்பீட்டு முறையாகும்.

ஒரு வினாவுக்குச் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை, தேர்வாளர் பெற்ற கல்வி, அறிவாற்றல் போன்றவற்றை அளவிடும் ஒரு நெறிமுறையாகும். எதிரிடை மதிப்பெண் அணுகுமுறையால் மாணவர்களின் சிந்தனை, படைப்புத்திறன் பாதிக்கப்படுவதுடன் துணிந்து இடரை எதிர்கொள்ளும் மனப்பாங்கும் குறைந்துவிடும் என்று தீர்ப்பில் விவரித்துள்ள நீதிபதி அரங்க. மகாதேவன், ‘கற்பனைத் திறனே அறிவை விட சாலச் சிறந்த தன்மை கொண்டது' என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கருத்தை மேற்கோள்காட்டியிருக்கிறார்.

அதாவது, உறுதிசெய்யப்பட்ட தகவல்கள், மெய்ப்பிக்கப்பட்ட கருத்துக்களைத் திரட்டிக் கொடுப்பது அறிவு. ஆனால், பெரும்பாலும் சரியானது என்று நம்பப்படும் ஒரு கருத்தைப் புதிய கோணத்தில் அணுகி, சில நிலைகளில் அது சரியானதல்ல என்று வாதிட வழி வகுப்பது கற்பனைத் திறனும் சிந்தனையாற்றலும்தான். புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுவதும் அவைதான். கற்பனை ஆற்றலே இதுவரையிலான கண்டுபிடிப்புகள் அனைத்துக்கும் மூலவிதை!

பின்னுக்கு இழுக்கும்

எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கும் முறை மாணவர்களின் மனதைப் பின்னோக்கி இழுக்கும் வகையில் காலில் கட்டப்பட்ட கனமான எடைப்பந்தாக அமைந்துவிடும். அவர்களது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும் என்று அறிவியல், உளவியல் காரணங்களுடன் உறுதிப்படுத்துகிறது இந்தத் தீர்ப்பு.

தேசியத் தேர்வுகள் நடத்தும் மனிதவள அமைச்சகத்தின் அமைப்புகள் இதனை ஏற்றுப் பரிசீலித்து, மதிப்பெண்கள் கழிக்கும் நடைமுறையைக் கைவிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘காலங்கடந்து வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்பார்கள். ஆனால், இவ்வழக்கில் காலங்கடந்து தீர்ப்பு கூறப்பட்டிருந்தாலும், உரிய தீர்வு முன்வைக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, காளான்களைப் போல பல தனிப்பயிற்சி மையங்கள் உருவாக நுழைவுத் தேர்வு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. பல மையங்களில் முறையற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல பிரச்சினை. அங்கு பின்பற்றப்படும் சில வகையான பயிற்றுவிப்பு வழிமுறைகள், முறைசார் கல்விக்கு நேரெதிராக உள்ளன என்பதைப் பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள்.

நுழைவுத் தேர்வுகளைப் பொறுத்தவரை, எல்லா வாய்ப்புகளும் வாய்க்கப் பெற்றுத் தனியார் நிறுவனங்களில் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற்ற மாணவர்களுடன், வறுமையில் உழல்கின்ற, போதிய வாய்ப்பில்லாத, தனிப்பயிற்சி பெற்றிடாத மாணவர்களும் போட்டியிட வேண்டிய சமமின்மைச் சூழல் இருக்கிறது. பள்ளி, கல்லூரிப் பொதுத் தேர்வுகளுக்கும் நுழைவுத் தேர்வுகளில் இருக்கும் முக்கிய வேறுபாடு இது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் கழிக்கும் முறையின் மூலம் ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் மேலும் கைநழுவிப் போகும். இப்படியான ஒரு சூழலில், மிகுந்த நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது. சூழல் மாறட்டும்!

- இல.சொ.சத்தியமூர்த்தி

தொடர்புக்கு: sathiyamurthy2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x